மனிதவள அமைச்சர் குலசேகரன் அண்மையில் விடுத்த அறிவிப்பின்படி, அயல்நாட்டு சமையல்காரர்களின் தேவை குறைக்கப் படுவதற்கான சூழல் உருவாகியுள்ளதை உணர முடிகிறது. அவர் அடுத்த ஆறு மாதங்களில் உள்நாட்டு சமையல்காரர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கியிருந்தார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பால் பலர் கொதிப்படைந்துள்ளனர். இப்படிக் கொதிப்படைந்து உள்ளவர்கள் யார்?
இவர்கள்தான் முதலாளிகள். இவர்கள் தங்களின் பணத்தை முதலீடு செய்து உணவகம் வழி வாணிபம் செய்பவர்கள். இவர்களிடம் சமையல் வேலை செய்ய உள்ளூர் ஆட்கள் வருவதில்லை. ஏன் வருவதில்லை என்பதற்கு ஏராளமான காரணம் உண்டு. அவற்றில் ஒன்று வேலை நேரம். எனவே அயல் நாட்டவர்களை வேலைக்கு வைக்கிறார்கள். இவர்களிடம் போய் அப்படிச் செய்யக்கூடாது என்றால் என்ன செய்வார்கள்?
கடையை இழுத்து மூட வேண்டியதுதான் என்பார்கள். உள்ளூரில் சமையல் செய்யும் அளவுக்கு ஆட்கள் இல்லை என்றும், அதோடு இந்தச் சமையல் தொழிலுக்கு விருப்பம் கொண்டவர்கள் மிகவும் குறைவு என்பார்கள்.
எல்லாத் தொழில்களும் அப்படித்தான். சுலபமாக, அதிக இலாபம் கிடைக்கக் கூடிய சூழல் இருந்தால் அதிலிருந்து வெளியாகி இக்கட்டான சூழலில் தங்களின் வாணிபத்தை மேற்கொள்ள யாரும் துணிய மாட்டார்கள். அவ்வகையில் முதலீடு செய்யும் உணவக முதலாளிகள் குலாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது நியாயமனாதாகவே தோன்றும்.
அந்நியத் தொழிலாளர்கள் இல்லாமல், சுயமாக ஒரு வாணிபத்தை இயக்க இயலாத நிலையில் நாம் வாழ்கிறோம் என்பதை உணரமுடிகிறது. இதற்கு முக்கியக் காரணம் அரசாங்கத்தின் கொள்கையாகும். அரசாங்கம் தொடர்ந்து நமது உட்நாட்டு உற்பத்தி வழியான பொருளாதாரத்தை அதிகரிக்கக் குறைந்த சம்பளக் கொள்கையை அமலாக்கத்தில் வைத்திருப்பதாகும்.
உடல் உழைப்பு சார்ந்த பணிகளுக்காக இந்தக் குறைந்த சம்பளக் கொள்கை அமலாக்கப்பட்டு இன்று அது பல நிலைகளில் வேரூன்றி விட்டது. அவற்றில் ஒன்று உணவகங்கள் ஆகும். தற்போது எங்குப் பார்த்தாலும் அனைத்து உணவகங்களிலும் அயல் நாட்டினர்தான் அதிகமாகப் பணி புரிகின்றனர்.
அமைச்சர் குலாவின் கருத்தின்படி, கடந்த 15 வருடங்களில் முறையாகப் பதிவு செய்யப்பட்ட அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 8 லட்சம் ஆகும். தற்போது, இதில் சுமார் 250,000 பேர் உணவகம் போன்ற தொழில்களுக்காக வரவழைக்கப்பட்டவர்கள்.
இவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும். உணவகங்களில் பணி புரிபவர்களின் வருமானம் மிகக் குறைவாக இருப்பதால் அதில் வேலை செய்ய உள்நாட்டு தொழிலாளர்களுக்கு நாட்டமில்லாமல் போய் விடுகிறது.
இந்நிலையில், உள்நாட்டில் உள்ளவர்களுக்கு எப்படி வேலை வாய்ப்புகளை உருவாக்குவது?
இந்தக் கொள்கையால் சிக்கிக் கொள்பவர்கள் கீழ்மட்டத்தில் வாழும் மக்களாகும். சுமார் 50 % மக்களின் குடும்ப வருமானம் ரிம3,000 – க்கும் குறைவாக உள்ளது. இவர்களின் இந்த நிலைக்குக் காரணம், நியாயமான அதிகச் சம்பளம் கொடுத்து வேலைக்கு அமர்த்தும் சூழல் இல்லாததாகும்.
இதற்கான தீர்வுதான் என்ன?
உணவகங்களை எடுத்துக்கொண்டால், அதில் பணி புரியும் சமையல்காரர்களுக்குத்தான் அதிகமான ஊதியமாகும். அந்த வேலையை உள்நாட்டுக்காரர்களுக்கு வழங்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் ஆலோசனை வழங்குவது ஏற்புடைய ஒன்றாகும்.
போதுமான திறன் அற்றவர், சோம்பேறிகள், சமையல் தெரியாது என்றெல்லாம் சாக்குகள் சொல்வதும், அதில் ஓரளவு உண்மை இருப்பதும் இயல்பானது. ஆனால், போதுமான ஊக்குவிப்பும், ஆதரவும், அதற்கேற்ற கல்வியும் மற்றும் பயிற்சிகளையும் அளித்தால் அது போன்ற சிக்கல்களில் இருந்து விடுபடலாம்.
அதேவேளையில் அயல்நாட்டு சமையல்காரர்களின் திறன்களும், சுகாதாரமும் சுத்தமும் அற்ற சூழலில் அவர்கள் வாழ்வது, நீண்ட நேர வேலையால் அவர்கள் படும் துன்பங்களும் அவர்களின் சிக்கல்களாக இருந்து வருகின்றன.
எனவே, இது போன்ற மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு, குறைந்த சம்பளக் கொள்கையில் குளிர்காயும் முதலாளிகளுக்கு ஆதரவாக அரசாங்கம் தொடர்ந்து செயல்பட இயலாது. அப்படிச் செயல்பட்டால் வருமான மாற்றம் என்பது கீழ்மட்ட மக்களுக்கு இல்லாமலேயே போய்விடும். எனவே மனிதவள அமைச்சரின் கருத்தை உள்நாட்டு மக்கள்களின் மேம்பாட்டிற்காகக் கொணரப்படும் ஒரு வருமான அதிகரிப்புக் கொள்கையாகக் கருதி அதை அமலாக்கம் செய்ய வேண்டும்.
அந்நியத் தொழிலாளர்கள் அதிகம் வேலைக்கு அமர்த்த காரணம் , குறைந்த சம்பளம்,அதிக வேலை நேரம்…