8 வழிச்சாலைக்கு எதிராக பேசிய வழக்கு.. நடிகர் மன்சூர் அலிகானுக்கு சேலம் கோர்ட் நிபந்தனை ஜாமீன்

சேலம்: 8 வழிச்சாலைக்கு எதிராக பேசியது தொடர்பான கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானுக்கு சேலம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலைக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் மன்சூரலிகான் பேசியதுடன், ஊடகத்திற்கும் பேட்டி அளித்ததாக கூறி, கடந்த 17 ஆம் தேதி இவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை வெட்டி விட்டு ஜெயிலுக்குப் போவேன் என்று மன்சூர் அலிகான் பேசியிருந்ததே சர்ச்சையானது.

அவரைக் கைது செய்த ஓமலூர் போலீஸார், வன்முறையை தூண்டுதல், அரசுக்கு எதிராக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து தனக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் ஜாமீன் மறுத்து நிராகரித்துவிட்டது. எனவே சிறையில் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார். அப்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமடைய ஆரம்பித்ததால் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அத்துடன் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மன்சூர் அலிகானுக்கு சிறுநீரக தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்ததையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் மீண்டும், சிறைக்கு அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் மீண்டும் ஜாமீன் கோரி விண்ணப்பித்தார். இதற்கு அரசுத்தரப்பில் ஆட்சேபனை வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து நிபந்தனை ஜாமீன் அளித்து சேலம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என்று மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

tamil.oneindia.com