சினிமாவில் ஆண், பெண் போல் திருநங்கைகளையும் பிரித்துப் பார்க்கக்கூடாது: ‘பேரன்பு’ அஞ்சலி அமீர்

சென்னை: ஆணாதிக்கம் நிறைந்த சினிமா துறையில், பெண்களே தங்களது இருப்பை தக்கவைப்பது பெரும் போராட்டமாக இருக்கிறது. அப்படி இருக்கையில், திருநங்கையான அஞ்சலி அமீர், இயக்குநர் ராமின் பேரன்பு படம் மூலம் நாயகியாகி புதிய வரலாறு படைத்திருக்கிறார்.

இப்படத்தில் மம்மூட்டியின் ஜோடியாக இவர் நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படம், பல்வேறு பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், மற்ற துறைகளைப் போலவே, சினிமாவிலும் திருநங்கைகள் சாதிக்க முடியும் என நம்பிக்கையுடன் கூறுகிறார் அஞ்சலி அமீர்.

இது குறித்து ஒன் இந்தியாவிற்கு அவர் அளித்துள்ள பிரத்யேகப்பேட்டியில் கூறியிருப்பதாவது:

பேதம் அவசியமில்லை:

நான் என்னை பெண்ணாகத் தான் உணர்கிறேன். எனவே ஆண், பெண் பேதம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நடிகரை ஆண் என்றும், நடிகையை பெண் என்றும் தனியாக குறிப்பிடாதது போல், என்னையும் தனியாக குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

அடையாளம் தேவை:

ஆனால் ஒரு திருநங்கையான எனக்கு எல்லைகள் இருக்கிறது. அதை நான் உணர்ந்திருக்கிறேன். எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கும். ஏதாவது சாதிக்க வேண்டும் என்று எனக்கும் ஆசை இருக்கிறது. எனது அடையாளத்துக்காக நான் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.

பார் டான்சர்கள்:

எங்களை போன்றவர்களை முன்பு புராணங்களில் தேவதாசிகளாக சித்தரித்தனர். இப்போதைய நவீன உலகில் தேவதாசி என்பது மாறி பார் டான்சராக பரிமாண அடைந்திருக்கிறது. ஆனால் நிறைய திருங்கைகள் இங்கு சாதித்து காட்டியிருக்கிறார்கள்.

அவமானம்:

எங்களுக்கு இருக்கும் பிரச்சினை பாலின வேறுபாடுதான். வேலை கேட்டுப் போகும் இடங்களில், நீயெல்லாம் எதுக்கு வர எனக் கேட்டு மிகக்கேவலமாக அவமானப்படுத்துவார்கள்.

மாற்றம் வரும்:

அப்படி இருக்கும்போது இந்த சமுதாயத்தில் நீ ஏன் உன் பாலினத்தை வெளியில் சொல்ல வேண்டும் என என்னிடம் நண்பர்கள் கேட்பார்கள். ஆனால் நான் என் அடையாளத்தை மறைக்க விரும்பவில்லை. நான் நானாக இருக்க விரும்புகிறேன். இந்தியாவைத் தவிர வேறும் எங்கும் இந்த பாலின வேறுபாடு இல்லை. இங்கும் மாற்றம் வரும் என நான் நம்புகிறேன்” என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

tamil.filmibeat.com