வரி ஏய்ப்பை தடுக்க சினிமா நடிகர்களின் ஊதியத்தை வரையறுக்கும் சீனா

சீனாவின் திரைத்துறையில் காணப்படும் வரி ஏய்ப்பையும், பணத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் மனப்பான்மையையும் தடுக்கின்ற நடவடிக்கையாக, நடிகர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தை வரையறுத்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீன திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடிக்கின்ற நடிகர்கள், அந்நிகழ்சிசியின் மொத்த தயாரிப்பு செலவில் 40 சதவீதத்ததை தங்களுடைய ஊதியமாக பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், முன்னிலை நடிகர்களுக்கு மொத்த ஊதிய தொகையில் 70 சதவீதத்திற்கு மேலாக வழங்கப்படக்கூடாது என்றும் சீன அரசு கூறியுள்ளது.

திரைத்துறையில் பிரபல நடிகர், நடிகைகளுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விவாதத்திற்கு பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஏன் இப்போது?

பரப்புரை துறை, கலாசாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகம், வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைத்துறை ஒழுங்காற்று நிர்வாகம் உள்ளிட்ட சீனாவின் 5 அரசு நிறுவனங்களின் கூட்டு அறிக்கையாக அதிகாரபூர்வ அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை தற்போது வரையறுப்பதற்கான காரணத்தை இந்த அறிக்கை குறிப்பிடவில்லை.

ஆனால், நடிகர்களுக்கு அதிக அளவில் ஊதியம் வழங்கப்படுவது, அவர்கள் “இன் மற்றும் யாங் ஒப்பந்தங்கள்” என்று அறியப்படும் இரு வேறு ஒப்பந்தங்கள் போட்டுக்கொள்வது, வரி ஏய்ப்பு மற்றும் பிற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது அவசியம் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

வரி ஏய்ப்பை தடுக்க சினிமா நடிகர்களின் ஊதியத்தில் தலையிடும் சீனா

இத்தகைய பிரச்சனைகள் திரை மற்றும் தொலைக்காட்சி தொழிற்துறையின் ஆரோக்கியமான நிலையை சேதப்படுத்தும், பணத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் மனப்பான்மையை உருவாக்கும், பிரபல நடிகர்களை கண்மூடித்தனமாக நம்பும் இளைஞர்களை உருவாக்குதல், சமூக அறநெறிகளை சீர்குலைக்கும் என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஊதிய வரையறை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்கிற விவரங்கள் இதில் வழங்கப்படவில்லை.

கடந்த மாதம் தொடங்கிய பிரபல நடிகர்களின் வரி ஏய்ப்பு சர்ச்சையோடு இந்த நடவடிக்கை தொடர்புடையதாக இருக்கலாம்.

சீனாவில் மிகவும் பிரபலமான நடிகை ஃபான் பிங்பிங் 16 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக கடந்த மே மாதம் தொலைக்காட்சி தொகுப்பாளரான சுய் யோங்யுவான் இணையத்தில் பதிவிட்டார்.

அதனை தொடர்ந்து இரண்டாவது பதிவாக, “இன் மற்றும் யாங் ஒப்பந்தங்கள்” என்ற அறியப்படுகின்ற இரு வேறு ஒப்பந்தங்களில் பிரபலங்கள் கையெழுத்திடுவதாக அவர் சமூக வலைதள பதிவில் குற்றச்சாட்டினார்.

குறைவான வரி செலுத்துவதற்கு இந்த குறைந்த மதிப்புடைய ஒப்பந்தத்தை மட்டுமே பிரபலங்கள், அரசு அதிகாரிகளிடம் வழங்குவதாகவும் அவர் அதில் கூறியிருந்தார்.

நேரடியாக குறிப்பிடாவிட்டாலும், நடிகை ஃபான் பிங்பிங்கைதான் அவர் குறிப்பிடுகிறார் என்று சமூக வலைதள பயன்பாட்டாளாகள் எண்ணினர்.

தவறுகள் எதையும் செய்யவில்லை என்று நடிகை ஃபான் பிங்பிங்கின் திரைப்பட நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்தது.

நடிகை ஃபான் பிங்பிங்கின் ஒப்பந்தத்தை வெளியிட்டதற்கும், அவர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குறிப்புணர்த்தி பதிவிட்டதற்கும் சுய் யோங்யுவான் சட்ட நடிவடிக்கை சந்திக்க நேரிடும் என்றும் இந்த நிறுவனம் எச்சரித்தது.

இதன் பின்னர்தான், இணையதளத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதைபோல, திரைத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்த குறிப்பிட்ட தொழில்முறை கலைஞர்களால் செய்யப்பட்ட வரி ஏய்ப்பு பற்றி ஜூன் மாத தொடக்கத்தில் சீன வரி வசூலிப்புத்துறை அதிகாரிகள் புலனாய்வை தொடங்கினர்.

சீன அரசு அதிகமாக தலையிடுவது வழக்கமா?

ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைத்துறைகளில் நடிகர், நடிகைகளுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பான விடயங்களில் அரசு தலையிடுவதில்லை.

ஆனால், தனியார் துறையாக இருந்தாலும், சீனாவில் பல தொழிற்துறைகளின் மீது அரசு அதிக அதிகாரம் வைத்திருக்க எண்ணுகிறது.

அதிக பண வசூல், பட வரிசைப்பட்டியலில் முன்னிலை மற்றும் அதிகம் பேர் இணைய இணைப்பை பார்ப்பது ஆகியவற்றை தயாரிக்கப்படும் படைப்புகள் கவனத்தில் எடுத்துக்கொள்வதைவிட “சமூக நலன்களுக்கு முதன்மை” அளிக்க வேண்டும் என்று புதன்கிழமை வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா: சோகத்தில் முடிந்த திருட்டு முயற்சி

தடைகளையும், விதிமுறைகளையும் விதிப்பது தொடர்பாக பொதுவாகவே சீன அதிகாரிகள் பெரிதும் அறியப்படுபவர்கள்தான்.

அரசியலிலும், எண்ணங்களிலும், செயல்பாடுகளிலும் சீன அரசின் தலைமையை பின்பற்ற வேண்டும் என்ற பத்திரிகையாளர்களுக்கு கூறப்பட்டுள்ள நிலையில், உணர்வலைகளை எழுப்புகின்ற வார்த்தைகள் கூட சமூக வலைதளங்களில் அனுமதிக்கப்படுவதில்லை.

தொலைக்காட்சி நாடகங்களின் உள்ளடக்கத்தில் இருக்க வேண்டிய அம்சங்கள் பற்றிய புதிய விதிமுறைகள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டதோடு, மக்களின் கலாசார ரசனையையும், ஆன்மிக பண்பாட்டை வலுப்படுத்த வேண்டுமெனவும் கூறப்பட்டது.

சீனாவின் பொழுதுபோக்கு துறையின் முக்கியத்துவம்

ஹாலிவுட் திரைப்படங்களை போன்று சர்வதேச அளவில் சீன திரைப்படங்கள் பார்க்கப்படாவிட்டாலும், சமீபத்திய ஆண்டுகளில் சீன-ஹாலிவுட் கூட்டு தயாரிப்புகள் பல வெளிவந்துள்ளன.

பண வசூலில் ஏமாற்றம் அளித்தாலும், 15 கோடி டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட “த கிரேட் வால்” (The Great Wall) திரைப்படம் அதிக செலவில் கூட்டாக சமீபத்தில் தயாரிக்கப்பட்டதாகும்.

சீனாவில் அதிக மக்கள் திரையங்கு சென்று சினிமா பார்ப்பதால், திரைத்துறை நிறுவனங்களுக்கு சீன பொழுதுபோக்கு தொழிற்துறையும் மிக முக்கியம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.

உலகிலேயே மிக பெரிய திரைப்பட சந்தையாக சீனா விரைவாக மாறப்போகிறது என்றும், சீன திரைப்பட ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றதாக தங்களின் உள்ளடக்கங்களை பல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கெனவே மாற்றி வருவதாகவும் நிபுணர்கள் நம்புகின்றனர். -BBC_Tamil