தனது முந்தைய மூன்று படங்களையும் விஷாலை நாயகனாக வைத்து இயக்கிய திரு, இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக்கை கதாநாயகனாக்கியிருக்கிறார். திருவின் முந்தைய படமான நான் சிகப்பு மனிதன் படத்தோடு இந்தப் படத்தை நிச்சயம் ஒப்பிடலாம்.
அதாவது, சந்தோஷமாக சென்றுகொண்டிருக்கும் நாயகனின் வாழ்க்கை திடீரென திசை மாறுகிறது.
பிறகு, உடல் நல பிரச்சனையுள்ள நாயகன் தன் பிரச்சனைகளுக்குக் காரணமான நபரைக் கண்டுபிடித்து பழிவாங்குவதுதான் இந்த இரு படங்களுக்கும் பொதுவான ‘ஒன்-லைன்’.
ராகவ் (கௌதம்) ஒரு குத்துச் சண்டை வீரன். தாயில்லாமல் தந்தை சந்திரமௌலியால் (கார்த்திக்) வளர்க்கப்பட்டவன்.
தந்தை சந்திரமௌலிக்கு தன்னுடைய அந்தக் கால பத்மினி கார் மீது ஏகப்பட்ட காதல். குத்துச் சண்டையில் தொடர்ந்து வெற்றிபெற்றுவருகிறான் ராகவ்.
மது (ரெஜினா கஸான்ட்ரா) என்ற பெண்ணைக் காதலிக்கிறான். ஆனால், திடீரென ஒரு நாள் இரவில் நிகழும் கார் விபத்தில் சந்திரமௌலி கொல்லப்படுகிறார்.
ராகவின் கண் பார்வை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. சில நாட்களில் பைரவி (வரலட்சுமி)என்ற பெண்ணின் இறப்புச் சான்றிதழ், ராகவின் வீட்டிற்கு வருகிறது.
இதற்கிடையில், நகரில் ஒரு குறிப்பிட்ட வாடகைக் கார் நிறுவனத்தின் காரில் பயணம் செய்பவர்கள் அவ்வப்போது கொல்லப்படுகிறார்கள்.
சந்திரமௌலியின் மரணம் விபத்தா, பைரவி என்பது யார், வாடகைக் கார் பயணத்தில் நிகழும் கொடூரங்களுக்குக் காரணம் என்ன என்பதை தன் பார்வைக் குறைபாடோடு கண்டுபிடித்து, பழிதீர்க்கிறார் ராகவ்.
ஏதோ ரொமான்டிக் காமெடி படத்தைப் போலவே மிக சாவதானமாகத் துவங்குகிறது படம். அதிலும் முதல் பாதியில் அடுத்தடுத்து வரும் பாடல்கள் நம் பொறுமையை வெகுவாகவே சோதிக்கின்றன.
ஆனால், சட்டென இடைவேளையின்போது திசைமாறுகிறது கதை. இதற்குப் பிறகு பைரவி என்ற பாத்திரத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலமாக அடுத்தடுத்த மர்மங்களை நோக்கி படம் நகர்கிறது. பிறகு, முடியும்வரை – எதிர்பாராத, எதிர்பார்க்கக்கூடிய -திருப்பங்கள்தான்.
ராகவும் சந்திரமௌலியும் மிக அன்னியோன்யமான தந்தை – மகன் என்பதை காண்பிப்பதற்காக முதல் பாதியில் வெகுநேரம் எடுத்துக்கொள்வதுதான் படத்தின் மிகப் பெரிய பிரச்சனை. பிற்பாதியில் அதை ஈடுசெய்ய முயன்றிருக்கிறார் இயக்குனர்.
ஒரு கால் டாக்ஸி நிறுவனத்தின் காரில் நடக்கும் கொலைகள் ரொம்பவுமே அமெச்சூர் தனமாக செய்யப்படுகின்றன. இந்த ஒட்டுமொத்த கொலைகளுக்கும் காவல்துறை அதிகாரிகள் சிலர் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதும் நம்பும்படியாக இல்லை.
ஆனால், படத்தின் பிற்பாதியில் இந்த மர்மத்தை கொஞ்சம் கொஞ்சமாக கதாநாயகன் கண்டுபிடிப்பது படத்தை சுவாரஸ்யமாக்குகிறது.
சந்திரமௌலியாக வரும் கார்த்திக், தன் பழைய காரை வைத்துக்கொண்டு செய்யும் அலப்பரைகளைவிட, ஃப்ளாஷ் பேக்கில் பைரவியாக வரும் வரலட்சுமியுடன் பழகும் காட்சிகளில் மிகவும் கவர்கிறார்.
குறிப்பாக, தன்னைப் போன்ற சின்னப் பெண்ணை, தள்ளிக்கொண்டு போகும் எண்ணமில்லையா என வரலட்சுமி கேட்டதும் தொடரும் காட்சிகள், பழைய கார்த்திக்கை கண் முன் நிழலாடச் செய்கின்றன.
கவுதம் கார்த்திக்கிற்கு இந்தப் படம் ஒரு பெரிய பிரேக் என்றுதான் சொல்ல வேண்டும். குத்துச் சண்டை வீரனாக, தந்தையின் மரணத்தைத் தாங்க முடியாதவராக, கண் பார்வை பாதிப்புடன் பழிவாங்குபவராக என கவுதம் கார்த்திக்கை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது இந்தப் படம்.
ராகவின் காதலி மதுவாக வரும் ரெஜினா கஸான்ட்ராவுக்கு படம் நெடுக கதாநாயகனுக்கு துணையாக இருக்கும் பாத்திரம். அதைச் சிறப்பாகவே செய்கிறார். இது தவிர மிகக் கவர்ச்சிகரமான உடையில் இரு பாடல்களிலும் வருகிறார்.
சில காட்சிகளில் மட்டும் வரும் இயக்குனர் மகேந்திரன், அகத்தியன் ஆகியோரும் வில்லனாக வரும் சந்தோஷும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.
வழக்கம்போல கதாநாயகனின் நண்பனாக வரும் சதீஷிற்கு நகைச்சுவையில் பெரிய பங்களிப்பு இல்லாவிட்டாலும், அவரது பாத்திரம் உறுத்தலாக இல்லை.
வரலட்சுமிக்கு உண்மையிலேயே மிகச் சிறப்பான பாத்திரம். அவருக்கும் கார்த்திக்கிற்கும் இடையிலான உறவு எம்மாதிரியானது என்று வரையறுக்காமலேயே செல்வது இயக்குனரின் புத்திசாலித்தனம் மிளிரும் தருணங்களில் ஒன்று.
கார்த்திக் – கவுதம் – ரெஜினா கூட்டணியும் பிற்பாதியில் சூடுபிடிக்கும் திரைக்கதையும் மிஸ்டர் சந்திரமௌலியை பார்க்கத்தகுந்த படமாக்குகின்றன. -BBC_Tamil