சென்னை, போலீசாரிடம் முன்அனுமதி பெறாமல் இனி போராட்டத்தில் ஈடுபடமாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தால் ஜாமீன் வழங்கப்படும் என்று இயக்குனர் கவுதமனுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும், சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு இயக்கங்கள் ஏப்ரல் மாதம் போராட்டம் நடத்தின. அப்போது போலீசாரை தாக்கியதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திரைப்பட இயக்குனர் கவுதமன் 7 போலீசாரையும், பொதுமக்கள் 5 பேரையும் தாக்கியதாக குற்றம்சாட்டி அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கவுதமன், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் முகமது ரியாஸ், ‘‘மனுதாரர் கவுதமன் சட்டத்துக்கு புறம்பாக போராட்டம் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். சென்னை கத்திபாரா பாலத்துக்கு குறுக்கே இரும்புச்சங்கிலியை கட்டி போக்குவரத்துக்கு இடையூறு செய்து போராட்டம் நடத்தினார். அவர் மீது இதுவரை 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது’’ என்று வாதிட்டார்.
கவுதமனின் வக்கீல் ஆர்.பிரபாகரன், ‘‘கவுதமன் தனக்காகவோ, தனிப்பட்ட விஷயத்துக்காகவோ போராட்டம் நடத்தவில்லை. நீட் தேர்வினால் அனிதா பலியானதை கண்டித்து போராட்டம் நடத்தினார். விவசாயம், காவிரி போன்ற பொது பிரச்சினைகளுக்காக தான் அவர் போராடியுள்ளார். போராட்டம் நடத்துவது அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமையாகும். இந்த உரிமையை போலீசார் பறிக்கக்கூடாது’’ என்று வாதிட்டார்.
அதற்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, ‘போராட்டம் நடத்தலாம். அதற்காக பாலத்தை சங்கிலியால் பூட்டி போராட்டம் நடத்தலாமா? விமான நிலையம், ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்களை அவதிப்பட வைக்கலாமா?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த வக்கீல், ‘பொதுமக்கள் கூறும் பிரச்சினைகளை மத்திய, மாநில அரசுகள் கேட்டு தீர்த்துவைக்க வேண்டும். அதை கண்டுகொள்ளாமல் இருக்கும்போது, அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதற்காக இதுபோன்ற போராட்டம் அவசியமாகிறது. அதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு வரலாம். அதை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்’ என்றார்.
இதையடுத்து நீதிபதி, ‘போராட்டம் நடத்த உரிமை உள்ளது. அதற்காக பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது. எனவே, போலீசாரின் முன் அனுமதியின்றி இனி போராட்டத்தில் ஈடுபடமாட்டேன் என்று கவுதமன் சார்பில் உத்தரவாதம் அளித்து இன்று (வியாழக்கிழமை) மனு தாக்கல் செய்தால், அவருக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கப்படும்’ என்றார். இந்த மனு மீதான விசாரணை இன்றும் நடைபெறுகிறது.
-dailythanthi.com