சினிமா விமர்சனம் – தமிழ்படம்-2

2010ஆம் ஆண்டில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற ‘தமிழ் படம்’ என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இது. முதல் படத்தைப் போலவே, கதைக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல் சினிமா காட்சிகளை கேலிசெய்வதையே பிரதானமாகக் கொண்ட படம்தான் இதுவும்.

அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே இரண்டு கிராமங்களுக்கு இடையில் நடக்கவிருக்கும் பெரிய கலவரத்தை, மொக்கையாக வசனம் பேசியே நிறுத்துகிறார் சிவா (சிவா). இதற்குப் பிறகு அவர் காவல்துறையில் துணை ஆணையராக வேலைக்குச் சேர்கிறார். அப்போது அவருடைய மனைவி ப்ரியா (திஷா பாண்டே), ‘பி’ (சதீஷ்) என்பவன் அனுப்பிவைத்த மொபைல் போன் வெடித்து இறக்கிறார்.

மிகப்பெரிய தாதாவான ‘பி’யைப் பிடிப்பதற்காக, பணியிலிருந்து நீக்கப்பட்டதைப்போல நடிக்கிறார். முடிவில் ‘பி’ஐக் கொல்கிறார். ஆனால், ‘பி’ சாகாவரம் பெற்றவன் என்பதால் திரும்ப வருகிறான். அதனால் ஒரு கடிகாரத்தின் உதவியால் பி சாகாவரம் பெற்ற காலத்திற்கே போய், அவனுக்கு சாகாவரம் கிடைக்காமல் செய்கிறார். பிறகு அவனை முறியடிக்கிறார். இதற்கு நடுவில் ரம்யா (ஐஸ்வர்யா மேனன்) என்ற பெண்ணுடன் காதல். முடிவில் துணை ஆணையராக பதவி உயர்வு பெறுகிறார் சிவா.

மேலே சொன்ன கதை என்பது படத்தின் காட்சிகளை இணைப்பதற்கான ஒரு கண்ணி மட்டுமே. மற்றபடி தமிழில் இதுவரை வெளிவந்த, வெளிவராத, ஹாலிவுட்டில் வெளிவந்த படங்களின் காட்சிகளை சகட்டு மேனிக்கு கலாய்த்திருக்கிறார் அமுதன். ஹாலிவுட்டில் இம்மாதிரியான ஸ்பூஃப் வகைத் திரைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்தாலும் தமிழில், இவை ஒரு அரிய ரகம்.

கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களின் காட்சிகளை கேலி செய்கிறது இந்தப் படம். இன்னும் வெளியாகாத ரஜினிகாந்தின் 2.0 படம் வரை கேலிசெய்திருக்கிறார்கள். சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப், காட் ஃபாதர் போன்ற ஹாலிவுட் படங்களைக்கூட விட்டுவைக்கவில்லை.

அதேபோல ரஜினிகாந்தில் துவங்கி, அஜீத், விஜய், எம்.ஜி.ஆர்., டி. ராஜேந்தர் வரை யாரும் தப்பவில்லை. ஏன், நரேந்திர மோதியே ‘மித்ரோன்’ என்றபடி ஒரு காட்சியில் கலாய்க்கப்படுகிறார். டிவி சேனல்களையும்கூட விட்டுவைக்கவில்லை.

படத்தின் நாயகன் சிவா, முதல் படத்தைப் போலவே இந்தப் படத்திலும் புகுந்து விளையாடியிருக்கிறார். சிவா இல்லாமல் இந்தப் படத்தைக் கற்பனைகூட செய்துபார்க்க முடியாது. அவர் வசனங்களைப் பேசும் விதமும், மற்ற நடிகர்களைப் போல நடிப்பதும் தற்போதைய நடிகர்களில் வேறு யாராலும் இவ்வளவு ரசிக்கும்படி செய்ய முடியாது.

திஷா பாண்டே ஒரு காட்சியில் வந்து இறந்துபோய்விடுகிறார். ஐஸ்வர்யா மேனனுக்கு இந்தப் படம் ஒரு நல்ல அறிமுகத்தை அளிக்கக்கூடும்.

வில்லனாக வரும் சதீஷ், படம் நெடுக வந்தாலும் பெரிய அளவில் சிரிப்பு மூட்டவில்லை.

முதல் படத்தைப் போலவே இரண்டாவது படத்திலும் கதை மிக பலவீனமாகவே இருக்கிறது. பல படங்களைக் கலாய்க்கும் காட்சிகளை ஒன்றாகச் சேர்ப்பதற்கான நூலாகவே கதை என்ற வஸ்துவைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தவிர, இந்தப் படத்தை முழுமையாக ரசிக்க வேண்டுமென்றால், இதில் கலாய்க்கப்படும் படங்களில் பாதிப் படங்களையாவது பார்த்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், இப்படி ஒரு காட்சி ஏன் வருகிறது என்பதே புரியாது.

படத்தின் இரண்டாவது பாதியில் வரும் ஃப்ளாஷ் பேக் காட்சிகளும் அவ்வளவு சுவாரஸ்யமில்லாதவை.

ஆனால், வாய்ப்புக்கிடைத்தால் யாரையும் கேலி செய்து ரசிக்கும் இந்த காலகட்டத்தின் ஒரு சிறந்த பதிவாக இந்தப் படம் விளங்கக்கூடும். -BBC_Tamil