சினிமா விமர்சனம் – கடைக்குட்டி சிங்கம்

80களிலும் 90களிலும் குடும்பம் என்ற அமைப்பைப் போற்றும் சினிமாக்கள் வரிசைகட்டி வெளிவந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு படத்திலும் ஒரு பாத்திரம் தியாகியாக இருக்கும். ஆனால், தமிழ் சினிமாவை சமீப காலமாக நகைச்சுவைப் படங்களும் பேய்ப் படங்களும் பிடித்து ஆட்டியதில் இந்த வகைப் படங்கள் இல்லாமலேயே போயின. இந்தப் படத்தின் மூலம் அந்த கடந்த காலத்திற்குள் கூட்டிச் செல்கிறார் பாண்டிராஜ்.

பெருநாழி ரணசிங்கம் (சத்யராஜ்) மிகப் பெரிய பணக்காரர். முதல் மனைவிக்கு (விஜி சந்திரசேகர்) ஆண் குழந்தை இல்லாததால், முதல் மனைவியின் தங்கையையே (பானுப்ரியா) திருமணம் செய்துகொள்கிறார். இதற்குப் பிறகு முதல் மனைவிக்கு ஆண்குழந்தையாகப் பிறக்கிறார் குணசிங்கம் (கார்த்தி). குணசிங்கத்திற்கு ஐந்து சகோதரிகள். இந்த சகோதரிகளில் இருவருக்கு திருமண வயதில் பெண்கள் இருக்கிறார்கள்.

ஒருவர் செல்லம்மா (ப்ரியா பவானி); மற்றொருவர் ஆண்டாள் (அர்த்தனா பினு). இவர்களில் ஒருவரை குணசிங்கம் கல்யாணம் செய்வார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்க, அவர் கண்ணுக்கினியாள் (சாயிஷா) என்ற வேறொரு பெண்ணைக் காதலிக்கிறார். இதனால், குடும்பத்தில் என்னவெல்லாம் பிரச்சனைகள் ஏற்படுகின்றன, அதை மீறி காதலித்த பெண்ணை குணசிங்கம் கைப்பிடித்தாரா என்பதுதான் கதை. இதற்கு நடுவில் கண்ணுக்கினியாளின் மாமாவாக வரும் வில்லனையும் (சந்துரு) சமாளிக்க வேண்டும்.

சேரன் இயக்கிய பாண்டவர் பூமி படத்தைப் போல, இந்தப் படத்திலும் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். யார், யாருக்கு எந்த வகையில் உறவு என்பதை குழப்பமில்லாமல் பதியவைப்பதற்காக படத்தின் முதல் அரை மணி நேரத்தை எடுத்துக்கொள்கிறார் இயக்குநர் . இந்த அரை மணி நேரத்தில் விவசாயத்தின் பெருமை, இயற்கை விவசாயத்தின் மகிமை ஆகியவற்றையும் சொல்வதால், நமது பொறுமை ரொம்பவுமே சோதனைக்குள்ளாகிறது.

ஆனால், இதற்குப் பிறகு கொஞ்சம் சுதாரித்துக்கொள்ளும் இயக்குநர், பிரதான கதைக்குள் நுழைகிறார். குடும்பத்திற்கு வெளியில் காதல், ஊருக்குள் சாதி உணர்வை வளர்த்து தலைவராக நினைக்கும் வில்லன், தமிழகத்தின் மேற்குப் பகுதியில் நடந்த ஆணவக் கொலையை ஞாபகப்படுத்தும் சம்பவங்கள் என மெல்ல சூடுபிடிக்கிறது படம். அவ்வப்போது வில்லனின் ஆட்களை துவம்சம் செய்து, படத்தின் டெம்போ குறையாமல் பார்த்துக்கொள்கிறார் இயக்குனர். முடிவில் ஒரு உருக்கமான காட்சிக்குப் பிறகு எல்லாம் சுபம்.

அவ்வப்போது பாடல்கள், கதாநாயகன் 50 பேரைப் பந்தாடும் சண்டைக்காட்சிகள், பெண்கள் உருக்கமாகப் பேசும் நீள நீள வசனங்கள் என பழைய பாணியிலேயே நகர்கிறது படம். ஆனால், இம்மாதிரிப் படங்களைப் பார்த்து வெகுநாட்களாகிவிட்டதாலும் சற்றே விறுவிறுப்பான திரைக்கதையாலும் தொடர்ந்து ஆர்வத்தைத் தக்கவைக்கிறது படம்.

கதாநாயகனின் தந்தை, ஆண் குழந்தைக்காக இரண்டு கல்யாணங்களைச் செய்வதும் மூன்றாவதாக திருமணம் செய்ய நினைப்பதும் படத்தின் பிற பாத்திரங்களால் ஆங்காங்கே விமர்சிக்கப்படுகின்றன. ஆனால், அது ஒரு குற்றமாக அல்லாமல் சாதாரண சம்பவம்போல படத்தின் பிற பாத்திரங்களால் பார்க்கப்படுவது உறுத்தலாக இருக்கிறது.

அதே நேரம், ஆணவக் கொலை செய்யும் நபரை வில்லனாக வைத்திருப்பது ஒரு நல்ல உத்தி. இருந்தும் காதாநாயகன் காதலிக்கும் பெண், யதேச்சையாக அவருடைய ஜாதியாகவே இருந்துவிடுகிறார்.

படம் முழுக்க குடும்பம் ஒற்றுமையாக இருப்பதையும் விவசாயத்தின் பெருமையையும் வலியுறுத்திக் கொண்டேயிருக்கிறார் இயக்குனர். ஆனால், இந்தக் குடும்ப ஒற்றுமைக்கு பெண்கள் விலைகொடுப்பது மேலோட்டமாக கடந்துசெல்லப்படுகிறது.

எத்தனை பேர் வந்தாலும் கதாநாயகன் குணசிங்கம் அடித்து நொறுக்கிவிடுவார் என்பதால், படத்தில் வரும் பயங்கரமான வில்லன் என்ன செய்வாரோ என்ற பதற்றம் ஏற்படவேயில்லை. இடைவேளைக்குப் பிறகு, ஒரே விவகாரம் திரும்பத் திரும்பப் பேசப்படும் போது சற்று அலுப்புத் தட்டுகிறது.

இம்மாதிரி கிராமத்துக் கதைகளுக்கென படைக்கப்பட்டவரைப் போலவே இருக்கும் கார்த்தி, அநாயாசமாக இந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜாலியாக லூட்டியடிப்பது, பொறுப்பான மகனாக இருப்பது, சகோதரியின் பாசத்திற்காக உருகுவது என புகுந்துவிளையாடியிருக்கிறார் கார்த்தி.

கார்த்தியின் நண்பனாக வரும் சூரி செய்யும் காமெடிகள் பல சமயங்களில் சிரிப்பை வரவழைக்கவில்லை. ஆனால், அவர் இல்லாமல் போயிருந்தால், இந்தப் படத்தை நினைத்தே பார்க்க முடியவில்லை.

வனமகன் மூலம் தமிழுக்கு அறிமுகமான சாயிஷாதான் இந்தப் படத்தின் கதாநாயகி. வனமகனில் இவரது நடிப்பு ரொம்பவுமே தனித்துத் தெரிந்தது. ஆனால், இந்தப் படத்தில் ஏகப்பட்ட பாத்திரங்கள் இருப்பதாலோ என்னவோ, சற்று மெருகு குறைந்திருக்கிறது.

குணசிங்கத்தின் முறைப் பெண்களாக வரும் அர்த்தனா பினு, பிரியா பவானிசங்கர் ஆகியோருக்கு படத்தின் பிற்பாதியில் நடிப்பதற்கு சற்று வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஆனால், ஒரே மாதிரியான படங்களைப் பார்த்து அலுத்துப்போயிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடித்துப்போகக்கூடும்.

-BBC_Tamil