தியேட்டர் அடாவடிகளுக்கு ஆப்பு வைத்த மகாராஷ்டிரா அரசு.. தமிழகத்திலும் இந்த நிலை வருமா?

மும்பை: மகாராஷ்டிரா மாநில அரசு, மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் உள்பட அனைத்து தியேட்டர்களிலும் பார்வையாளர்கள் வெளியிலிருந்து உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று சாப்பிட அனுமதிக்கப்படுவார்கள் என்று சட்டப் பேரவையில் அறிவித்துள்ளது.

வெளியில் சாதாரணமாக 5 ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கும் விற்கப்படும் பாப்கார்ன் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் 50 ரூபாய்க்கு அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்று பல புகார்கள் அரசுக்கு வந்தன.

இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிராவில் தியேட்டர்களில் அதிக விலையில் உணவுப் பொருள்கள் விற்பனை செய்வது குறித்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த விஷயத்தில் மாநில அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

மகாராஷ்டிர மாநில நவ நிர்மான் போன்ற அரசியல் கட்சிகள் தியேட்டர்களில் அதிக விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை எதிர்த்து போராட்டம் நடத்தின.

தியேட்டர்களில் உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்காவிட்டால் பார்வையாளர்கள் வெளியிலிருந்து உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். பின்னர் தானாகவே தியேட்டர்களில் உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என்ற கருத்து பல தரப்பினரும் முன் வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிர மாநில நுகர்வோர் துறை அமைச்சர் ரவீந்திர சவான், தியேட்டர்களுக்கு பார்வையாளர்கள் வெளியிலிருந்து உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கும் பொருந்தும். இந்த உத்தரவு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா அரசின் இந்த உத்தரவு, தியேட்டர்களில் உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பான விற்பனையின் லாபத்தில் 35 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உத்தரவைத் தொடர்ந்து பிவிஆர் போன்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 10 முதல் 13 சதவிகிதம் உணவுப்பொருள் லாபம் விற்பனை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் புரி, எம்டி முக்தா ஏ2 சினிமா செயின் நிறுவனத்தினர் கூறுகையில், மகாராஷ்டிர அரசு, தியேட்டர்களில் உணவுப் பொருள்களின் அதிகப் படியான விலையைக் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக இப்படி ஒரு உத்தரவிட்டிருக்கிறது. அரசின் இந்த உத்தரவு தியேட்டர்களை பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து எஸ்பி துள்சியன் கூறுகையில், அரசு தியேட்டர் உரிமையாளர்களை உணவுப் பொருட்களின் விலையை குறைக்கச் சொல்வதற்கு பதிலாக, தியேட்டர்களுக்கு பார்வையாளர்கள் வெளியிலிருந்து உணவுப் பொருட்களை கொண்டு செல்லலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இது தியேட்டர் உரிமையாளர்களின் லாபத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலும் இதேபோன்ற உத்தரவை அரசு அமல்படுத்துமா என்று மக்கள் ஏங்குகிறார்கள்.

tamil.oneindia.com