’பேரன்பு’ அதிசயிக்கத்தக்க சினிமாவெல்லாம் இல்லை : இயக்குநர் ராம்

கொடூரமாகவும், அதே சமயம் பேரன்பாகவும் இருக்கும் இயற்கையின் இரண்டு முனைகளை பற்றி பேசும் படம்தான் ‘பேரன்பு’ என்கிறார் இயக்குநர் ராம்.

கடந்த ஜனவரி மாதம், உலகத் திரைப்பட விழாவில் மிகவும் மதிப்புடையதாகக் கருதப்படும் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு-வின் உலகத்திற்கான முதல் காட்சி திரையிடப்பட்டது. விருதுப் பிரிவில் போட்டியிட்ட 187 படங்களில் பார்வையாளர்களின் வாக்கிற்கு இணங்க பேரன்பு 20 ஆவது இடத்தைப் பிடித்தது. 20 இடங்களுக்குள் வந்த ஒரே இந்தியப் படம் பேரன்பு.

அதன் பின் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோதும் பெரும் வரவேற்பை பெற்றது.

ராம்

இந்த படம் குறித்த உலக சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளும், அதன் தொடர்ச்சியாக திரைப்படம் குறித்த தொடர் உரையாடல்களும், பேரன்பு குறித்த ஓர் எதிர்பார்ப்பினை உருவாக்கி உள்ளன.

இத்திரைப்படத்தின் பாடல்களும், முன்னோட்டக் காட்சிகளும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான சூழலில், பேரன்பு யாரைப் பற்றிய படம், நா. முத்துக்குமார் இல்லாத ஒரு படம் எப்படி உங்களுக்கு சாத்தியப்பட்டது, இது வெகுஜன சினிமாவா அல்லது விருதுக்காக எடுக்கப்பட்ட படமா என்று பல்வேறு கேள்விகளுடன் இயக்குநர் ராமுடன் உரையாடினோம்.

அந்த உரையாடலின் தொகுப்பு இது.

“எது குறித்த படம் இந்த பேரன்பு?”

“ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொருவரையும் விதவிதமாய் படைத்துவிட்டு, அனைவரையும் சமமாய் பாவிக்கும் இயற்கையின் முரண் குறித்து பேசும் படம்தான் இந்த பேரன்பு.

பேரன்பு

இடஒதுக்கீடு என்ற அறிவே இல்லாமல் எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தும் இயற்கையின் வஞ்சம் குறித்த படம்தான் இந்த பேரன்பு. நாமெல்லாம் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று தீர்க்கமாக பேசும்படம்தான் இந்த பேரன்பு.

ஏதோ விழாக்களுக்கெல்லாம் சென்று இருக்கிறது, சினிமா மேதைகள் எல்லாம் பாராட்டுகிறார்கள் என்பதற்காக இது அதிசயிக்கத்தக்க சினிமாவெல்லாம் ஒன்றும் இல்லை. உங்களை வியக்கவைக்கவோ, பிரமிக்க வைக்கவோ எந்த முயற்சிகளும் இந்தப் படத்தில் இல்லை. இது மிக மிக எளிமையான படம். இதை எழுதும் உங்களாலும், இதை படிக்கப் போகும் சினிமா ஆர்வம் கொண்ட வாசகர்களாலும் எளிதாக எடுத்துவிடக் கூடிய படம்தான் இந்த பேரன்பு”

Presentational grey line
Presentational grey line

“இந்த பேரன்புக்குள் மம்மூட்டி எப்படி வந்தார், எப்படி பொருந்தினார்?”

“பாலுமகேந்திராவுக்கு பிறகு எனக்கு ஆசானாகவே மாறிவிட்டார் மம்மூட்டி. எது நடிப்பு என்று தெரிந்த கலைஞன். எப்படி நடிக்காமல் இருக்க வேண்டும் என்று தெரிந்த நடிகர்.

இந்த காட்சிக்கு எப்படி நடிக்க வேண்டும் என்பதைவிட, எப்படியெல்லாம் நடிக்கக் கூடாது என்று தெரிந்த மனிதர் மம்மூட்டி

அப்போது பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன், கோவையில் மலையாளப் படமான ‘சுக்ருதம்’ என்ற படம் பார்க்கிறேன். எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதிய படம். மம்மூட்டிதான் கதாநாயகன். அந்தப் படம் என்னுள்ளே அந்த வயதில் ஒரு தாக்கத்தை உண்டாக்கியது. ஒரு நாள் இயக்குநராக ஆனால், மம்மூட்டியை வைத்து படம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அடுத்து என்ன என்று கூட தெரியாத வயது, வெள்ளந்தியான நினைப்பு அது. அந்த கனவு 24 ஆண்டுகள் கழித்து நிஜமாகி இருக்கிறது. இது எனக்கே ஓர் ஆச்சர்யம்தான்.”

Presentational grey line

“நா.முத்துக்குமார் இல்லாத ராம் படம் எப்படி வந்திருக்கிறது?”

“அந்த வெற்றிடத்துடன்தான் வந்திருக்கிறது. என் வாழ்க்கையிலும் சரி, என் சினிமாவிலும் சரி நா.முத்துக்குமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. என்னை முத்துக்குமாருக்கு நன்கு தெரியும், என் சினிமாவையும் நன்கு தெரியும், அதனால் என் திரைமொழிக்கான பாடல்களை மொழிக்கு வலிக்காமல் முத்து எனக்கு தருவான்.

பேரன்பு

பிரிதலும் பிரிதல் நிமித்தமும், இருத்தலும் இருத்தல் நிமித்தமும், இரங்கலும் இரங்கல் நிமித்தமுமானதுதான் வாழ்க்கை – இதுதான் முத்துக்குமாரும், பாலுமகேந்திராவும் திரும்ப திரும்ப சொல்லிக் கொடுத்தது. இவர்கள் இல்லை என்ற உண்மையை ஜீரணிப்பது கடினமாக இருந்தாலும், அதனை ஜீரணித்து கடந்து செல்ல வேண்டி இருக்கிறது.”

Presentational grey line

“இந்த படத்தை நெதர்லாந்து திரைப்பட விழாவிலும், ஷாங்காய் திரைப்பட விழாவிலும் எப்படி உள்வாங்கிக் கொண்டார்கள்?”

பேரன்பு

“எனக்கு உண்மையில் ஒரு தயக்கம் இருந்தது. நெதர்லாந்தின் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இருந்தவர்கள் எல்லாரும் ஐரோப்பியர்கள். அவர்களுக்கு அந்நியமாக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால், அங்கு போட்டியிட்ட 187 படங்களில் வாக்களித்து தேர்ந்தெடுத்து சிறந்த 20 படங்கள் பட்டியலில் பேரன்பை கொண்டுவந்தார்கள். ஷாங்காயில் மக்கள் இன்னும் உணர்ச்சிகரமாக இப்படத்தை அணுகினார்கள். ஆசியா, ஐரோப்பா என்று கண்டங்களை எல்லாம் கடந்து படத்தில் உள்ள உண்மையை அவர்கள் ஒப்புகொண்டார்கள், அங்கீகரித்தார்கள் என்றுதான் நினைக்கிறேன்.”

Presentational grey line

“கற்றது தமிழ் திரைப்படம் வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகப்போகிறது. அந்தப் படத்தில் நீங்கள் காட்டிய சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீங்கள் இப்போது எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“கற்றது தமிழ் வெளிவந்தபோது பொருளாதார ஏற்றத்தாழ்வு இருப்பது பெரிதாக வெளியே தெரியவில்லை. இப்போது எல்லோரும் அதனை உணரத் தொடங்கிவிட்டார்கள். அந்தப் படம் வந்தபோது விவாதிக்கப்பட்டதைவிட இப்போதுதான் இந்தப் படம் குறித்த உரையாடல் நடக்கிறது. கற்றது தமிழ் ஏழெட்டு ஆண்டுகளுக்கு பிந்தி வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.” -BBC_Tamil