ரசிகர்கள், நல்ல பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் நடிகர் சூர்யா பேச்சு

நடிகர் சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி கடந்த சில தினங்களாக ரசிகர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

அப்போது ரசிகர்கள் மத்தியில் சூர்யா பேசியதாவது:-

“வாழ்க்கையை புதிய அனுபவங்கள்தான் மேம்படுத்தும். எப்போதும் புதுப்புது விஷங்களை ஆர்வத்தோடு கற்றுக்கொண்டே இருங்கள். நாம் குழந்தையாக இருக்கும்போது சைக்கிள் வேண்டும் என்று ஆசைப்படுவோம். அடுத்து கொஞ்சம் வளர்ந்ததும் பைக் வேண்டும் என்று அடம்பிடிப்போம். அடுத்து கார்.

இப்படி வாழ்க்கையில் புதுசு புதுசுன்னு எப்பவும் ஒரு உற்சாகம் இருந்து கொண்டே இருக்கும். அந்த ஆர்வம் இப்போது நிறைய பேருக்கு குறையுதோ என்று தோன்றுகிறது. வாழ்க்கையில் இதுபோதும் என்று நினைக்கிறார்கள். சலிப்படையவும் செய்கிறார்கள். எப்போதுமே ஒரு புதிய அனுபவம் வைத்துக்கொள்ளுங்கள். நாம் செய்கிற வேலையில் நாம்தான் சிறந்தவராக இருக்க வேண்டும்.

என்னென்ன விஷயங்கள் கற்க வேண்டுமோ அவற்றை கற்றுக்கொண்டே இருங்கள். வாழ்க்கையில் ஒரு விஷயம் மட்டும்போதும் என்று இங்கே இல்லை. சந்தோஷம் மிகவும் முக்கியம். அது கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து இருக்கிறது. எதற்காகவோ அந்த சந்தோஷத்தை நாம் விட்டுவிடுகிறோம். எந்த காரணத்துக்காகவும் அதை நாம் இழக்கக்கூடாது.

சந்தோஷம் என்பது சுலபமான விஷயம் இல்லை. வீடு, பணம் மட்டுமே சந்தோஷத்தை கொடுத்து விடாது. மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்வது ஒரு கலை. எப்போதும் சிரித்து மகிழ்ச்சியாக இருப்பவர்களை நிறைய பேர் சூழ்ந்து இருப்பார்கள்.

ரசிகர்கள் என்மீது எவ்வளவு அக்கறை வைத்து இருக்கிறீர்களோ அதே அளவுக்கு எனக்கும் உங்கள் மீது அக்கறை உண்டு. உடல் உறுப்புதானம், ரத்த தானம் செய்யும் ரசிகர்கள் யாருக்கும் அடிமையாக இருக்க கூடாது. நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள். குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம்.” இவ்வாறு சூர்யா பேசினார்.

-dailythanthi.com