இந்திய மொழிகள் அனைத்திலும் படங்களை தயாரித்தவர், டி.ராமாநாயுடு. சிவாஜிகணேசன்–வாணிஸ்ரீ நடித்த ‘வசந்த மாளிகை,’ ரஜினிகாந்த் நடித்த ‘தனிக்காட்டு ராஜா,’ ரகுவரன் நடித்த ‘மைக்கேல்ராஜ்’ உள்பட 150 படங்களுக்கு மேல் தயாரித்து, ‘கின்னஸ்’ சாதனை புரிந்தவர். இவரால், ‘மதுரகீதம்’ படத்தில் டைரக்டராக அறிமுகப்படுத்தப்பட்டவர், வி.சி.குகநாதன். இவரும், சில கலையுலக பிரமுகர்களும் இணைந்து டி.ராமாநாயுடு பெயரில், ஒரு கலைக்கூடத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
இதுபற்றி வி.சி.குகநாதன் கூறியதாவது:–
‘‘என்னை டைரக்டர் ஆக்கியது மட்டுமல்ல… இணை தயாரிப்பாளராக்கியும் மகிழ்ந்தவர், டி.ராமாநாயுடு. அவருடைய நிறுவனம் தயாரித்த 41 படங்களில் நான் பணியாற்றி இருக்கிறேன். டி.ராமாநாயுடுவின் பெயருக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவர் தயாரித்த ‘வசந்த மாளிகை,’ ‘தனிக்காட்டு ராஜா,’ ‘மைக்கேல்ராஜ்’ ஆகிய 3 படங்களும் டி.டி.எஸ். செய்யப்பட்டு, நவீன தொழில்நுட்பத்துடன், ‘சினிமாஸ்கோப்’பில் மெருகேற்றப்படுகின்றன.
நவீன தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த 3 படங்களையும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. டி.ராமாநாயுடுவுக்கு நானும், கலையுலக நண்பர்களும் இணைந்து செலுத்துகிற நன்றிக்கடன், இது.’’
இவ்வாறு வி.சி.குகநாதன் கூறினார்.
-dailythanthi.com