பிரபலங்கள் வாழ்க்கை படமாகும் சீசன் இது. நடிகர் சஞ்சய்தத், நடிகை சாவித்திரி வாழ்க்கை படமாக வந்துள்ளன. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மறைந்த ஆந்திர முதல்–மந்திரிகள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி ஆகியோர் வாழ்க்கையும் படமாக தயாராகிறது. இந்த நிலையில் உ.பி.முதல்–மந்திரியான யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கையும் ‘ஜிலா கோரக்பூர்’ என்ற பெயரில் படமாவதாக தகவல் வெளியானது. இதனால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஜிலா கோரக்பூர் படத்தின் முதல் தோற்றம் இப்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதில் காவி உடை அணிந்த சாமியார் மொட்டை தலையுடன் பின்பக்கம் கைகட்டி நிற்கிறார். அவர் கையில் துப்பாக்கி உள்ளது. அருகில் பசு நிற்கிறது. கோரக்நாத் கோவிலின் ஒரு பகுதி படமும் வரையப்பட்டு உள்ளது.
கோரக்நாத் கோவில் மடாதிபதியாக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். துப்பாக்கியுடன் நிற்பவர் யோகி ஆதித்யநாத் போலவே இருக்கிறார் என்றும் கையில் துப்பாக்கி கொடுத்து அவரது வாழ்க்கையை படத்தில் தவறாக சித்தரித்து உள்ளனர் என்றும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. படத்தை தடை செய்ய வலியுறுத்தி உத்தரபிரதேச பா.ஜனதா நிர்வாகி ஐ.பி.சிங் லக்னோவில் உள்ள ஹசரத்கன்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பசு பாதுகாப்பையும் அதுதொடர்பாக நடந்த படுகொலைகளையும் மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு களங்கம் ஏற்படுத்த அவரைபோலவும் ஒரு கதாபாத்திரத்தையும் சித்தரித்து உள்ளனர் என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து படத்தின் டைரக்டர் வினோத் திவாரி உள்ளிட்ட படக்குழுவினர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் பல மாவட்டங்களிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து ஐ.பி.சிங் கூறும்போது, ‘‘இந்த படத்தை தயாரிக்க பணம் எப்படி கிடைத்தது என்று விசாரிக்க வேண்டும். இந்து கலாசாரத்துக்கு அவதூறு ஏற்படுத்தவும் புண்ணியதலமான கோரக்பூர் பெயரை கெடுக்கவும் இந்த படத்தை எடுத்துள்ளனர். இதற்கு அனுமதி வழங்க கூடாது’’ என்றார்.
-dailythanthi.com