அடுத்தடுத்து “அரசியல்”.. அதகளப்படுத்தும் தமிழ் சினிமாக்கள். நடப்பது என்ன.. மாற்றம் தொடருமா?

சென்னை: கோடம்பாக்கத்தில் விரைவில் நிறைய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அதில் பெரும்பாலும் அரசியல் படங்கள்தான். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஜெயலலிதா உயிருடன் இருந்த சமயத்திலும், கருணாநிதி தீவிர அரசியலில் இருந்தபோதும், அரசியல் படம் எடுக்கவே அச்சப்பட்ட காலம் உண்டு. அப்படியே எடுத்தாலும் லேசு பாசாகத்தான் அரசியல் பேசினார்கள். அதற்கே இளைஞர்களின் உடம்பில் ரத்தம் பீறிட்டு எழும். நரம்புகள் புடைக்கும்.

இதற்கெனவே லியாகத் அலிகான், பாலகுமாரன் உள்ளிட்ட பலர் வசனங்களை கவனமாக கையாண்டார்கள். விஜயகாந்த்தான் அதிக அளவில் அதிரடி அரசியலை சினிமாவில் பேசி அதில் வெற்றியும் பெற்றார். தென்னவன் அதற்கு ஒரு உதாரணம். அதேபோல தமிழன், முதல்வன் போன்ற படங்களும் துணிச்சலான அரசியலைப் பேசி மக்களின் நன்மதிப்பை பெற்றன.

ஆனால் இதெல்லாம் நமக்கெதுக்கு என்று ஒதுங்கி, 5 பாட்டு, அதில் 1 பாரீன் லொகேஷன், 2 பைட், என்று சுமாரான கதையை தேர்ந்தெடுத்து மசாலா தடவி கொடுத்தவர்களே அதிகம். அரசியலை மையமாக வைத்து படம் ரிலீசானால், உடனே அந்த படம் ஆளுங்கட்சிக்கு எதிரானதா, அல்லது ஆதரவானதா என்று பார்க்கும் மனோபாவம் இன்றுவரை உள்ளது.

மறக்க முடியாத “தலைவா”

குறிப்பாக “தலைவா” படம் மூலமாக விஜய் பட்ட பாட்டை இன்னும் யாரும் மறுக்க முடியாது, “தலைவா Time to Lead” என்ற வார்த்தை அந்த படம் ரிலீசையே ஜவ்வு மாதிரி இழுத்து கொண்டு போனது. கொடநாட்டில் இருந்த ஜெயலலிதா இதற்கு அனுமதி வழங்கவில்லை என்று சொல்லப்பட்டது. ஜெயலலிதா அரசு இந்தப் படத்திற்கு செய்த இடையூறுகளை அந்தப் படக் குழு மறந்திருக்க முடியாது. இதுதான் “விஸ்வரூபம்-1” வெளியாகும்போதும் நடந்தது.

ஜெ., கருணாநிதி இல்லையே?

ஆனால் இப்போது தமிழ்நாட்டில் அரசியல் படங்கள் அதிகளவில் வெளிவர என்ன காரணம்? தமிழக அரசியல் நிலவரமா? மக்களா? சமூக சூழலா? அரசியல்வாதிகளா? இவ்வளவு அரசியல் படங்கள் வெளிவரும் அளவுக்கு பிரச்சனைகள் தமிழகத்தை சூழ்ந்துள்ளதா? அதிருப்திகள் நிறைந்து வழிகிறதா? தெரியவில்லை. எல்லாவற்றையும் முக்கியமான காரணம் ஜெயலலிதா இன்று இல்லை. கருணாநிதியும் கூட தீவிர அரசியலில் இல்லை. இதுதான் மிக முக்கியமான அடிப்படையாக கருதப்படுகிறது.

அரசியல் விதை

முருகதாஸ் படத்தில் சும்மாவே அரசியல் நெடி அதிகமாகவே இருக்கும். அவரது இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து “சர்க்கார்” படம் வெளிவர உள்ளது. இதில் தாறுமாறாக வசனத்தில் அவர் விளையாடியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கான விதை இதில் ஊன்றப்பட்டிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

சிம்பு-காவிரி

அரசியல் படங்களில் ஆர்வம் காட்டாத சூர்யாவே, “நந்தகோபாலன்குமாரன்” என்ற “என்ஜிகே” தீபாவளிக்கு வர உள்ளது. “தானா சேர்ந்த கூட்டத்”தில் கூட சூர்யா சற்றே கொதிப்பைக் காட்டியிருப்பார். அதேபோல காமெடி ட்ராக்கிலேயே போய்க் கொண்டிருந்த வெங்கட்பிரபு “மாநாடு” என்ற அரசியல் படத்தை சிம்புவை வைத்து எடுக்கிறார். காவிரி பிரச்சனைக்கு நூதனமாக குரல் கொடுத்து அதில் வெற்றியும் பெற்ற சிம்பு, இதில் கண்டிப்பாக காவிரி உள்ளிட்ட பிரச்சனையை உள்புகுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்

இந்த படங்கள் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அதிகம் பேசப்பட்டுள்ளன. இதற்கு விஜய்யின் “சர்க்கார்” படமும், “நோட்டா” என்ற படமுமே சாட்சி. “நோட்டா” என்ற படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாக உள்ளார். இதில் விஜய் தேவரகொண்டா தன் நடுவிரலில் கருப்பு மை வைத்து அதை அனைவரும் பார்க்கும்படி காட்டி கொண்டு நிற்கிறார்.

ஆரோக்கிய தொடக்கம்

தெலுங்கு சினிமாவில் அரசியல் படங்கள் நிறைய வந்துள்ளன. ஆனால் தமிழில் அந்த அளவுக்கு இல்லை. ஆனால் இனி அது அதிகரிக்கும் என்றே தெரிகிறது. காரணம், தமிழகத்தின் அரசியல் சூழல் நீர்த்துப் போய்க் காணப்படுவதால். மக்களின் மனோபாவத்தை புரிந்து கொண்டு அதை டச் செய்யும் வகையிலான படங்கள் இனி அதிகரிக்கலாம். எப்படியோ, முன்னணி இயக்குனர்களும், நடிகர்களும் அரசியல் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க தொடங்கிவிட்டது ஆரோக்கியத்தின் துவக்கமாக இருந்தால் சரி.

tamil.oneindia.com