‘பெண்களை இழிவுபடுத்துகின்றன’ – குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு

சமீபகாலமாக திரைப்படங்களில் வரும் குத்துப்பாடல்கள் பெண்களுக்கு எதிராக இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழி படங்களின் குத்துப்பாடல்களிலும் பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள் இருப்பதாக பெண்கள் சங்கத்தினர் கண்டித்து வருகிறார்கள்.

ஏற்கனவே தமிழில் ‘அடிடா அவள வெட்டுடா அவள’ என்றும் ‘எவன்டி உன்ன பெத்தான் கையில கிடைச்சா செத்தான்’ என்றும் பல பாடல்கள் வந்துள்ளன. குத்துப்பாடல்களில் பெண்களுக்கு எதிரான வார்த்தைகள் இடம்பெறுவதை தவிர்க்க வேண்டும் என்று நடிகை சபனா ஆஸ்மி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“திரைப்படங்களில் குத்துப்பாடல்கள் பயன்படுத்துவதை நான் எப்போதுமே எதிர்த்து வந்து இருக்கிறேன். குத்துப்பாடல்களில் பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். அவர்களின் நன்மதிப்பையும் அந்த பாடல்கள் மூலம் கெடுக்கிறார்கள். படங்களில் குத்துப்பாடல்கள் தேவை இல்லை. கதைக்கும் அவை அவசியம் இல்லை. எனவே அவற்றை தவிர்க்க வேண்டும்.

பாடலாசிரியர்கள் இதுபோன்ற பாடல்களை எழுதுவதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். இந்தி படங்களின் கதைகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது இல்லை. அவர்களை பலவீனப்படுத்துவது போலவே கதைகளை உருவாக்குகிறார்கள்.” இவ்வாறு சபனா ஆஸ்மி கூறினார்.

-dailythanthi.com