‘‘படங்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் இல்லை’’ –மம்தா மோகன்தாஸ் வருத்தம்

தமிழில் சிவப்பதிகாரம், குசேலன், குரு என் ஆளு, தடையற தாக்க ஆகிய படங்களில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ், மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இப்போது தமிழில் 2 படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். சமீபத்தில் புற்றுநோய் பாதிப்பிலும் சிக்கி சிகிச்சை பெற்றார்.

திரையுலகில் நடிகைகள் நிலைமை குறித்து மம்தா மோகன்தாஸ் அளித்த பேட்டி வருமாறு:–

‘‘உலகில் பெண்கள் நிறைய சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. சினிமா துறையிலும் அவர்களுக்கு கஷ்டங்கள் உள்ளன. சில காலத்துக்கு முன்புவரை சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் இருந்தது. நல்ல கதைகளும் கதாபாத்திரங்களும் அமைந்தன. ஆனால் இப்போது நிலைமை மாறி இருக்கிறது.

சமூகத்தில் இருக்கும் ஆண் பெண் வேறுபாடுகள் சினிமாவிலும் எதிரொலிக்கிறது. பெண்களுக்கு எதிராக நடிக்கும் சம்பவங்களை கேள்விப்படும்போது வேதனையாக இருக்கிறது. சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களையே இவை பிரதிபலிக்கின்றன. அந்த சிக்கல்களில் இருந்து மீண்டு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர்கள் விடுதலை பெற நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கிறது.

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் நிறைய உருவாக வேண்டும். குறைவான தயாரிப்பாளர்களே நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை எடுக்கிறார்கள். நடிகைகளை மையப்படுத்தும் படங்களை தயாரித்தால் வருமானம் வராது என்கிறார்கள். எனக்கே இந்த அனுபவம் ஏற்பட்டது. நாங்கள் நடிகர்களை நம்புகிறோம். அதுபோல் நடிகைகள் மீதும் நம்பிக்கை வையுங்கள்.

இவ்வாறு மம்தா மோகன்தாஸ் கூறினார்.

-dailythanthi.com