கடந்த வாரம் வெளிவந்திருக்கும் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைப்படம் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல சினிமாவைத் தேடிப் பார்ப்பவர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் முக்கிய பலமாக இளையராஜாவின் இசை அனைவராலும் குறிப்பிடப்படுகிறது. படத்தின் இயக்குனர் லெனின் பாரதிக்கு இது முதல் படம். தயாரிப்பாளராக விஜய் சேதுபதி அமைவதற்கு முன்பாகவே இளையராஜாவிடம் கதையை சொல்லி ஒப்புதல் வாங்கியுள்ளார். சினிமா உலகில் சிலர், ‘புதுமுக இயக்குனர்கள் இளையராஜாவுடன் வேலை செய்வது கடினம். அவர் கொடுப்பதுதான் ட்யூன். அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசமுடியாது, வாயே திறக்கவிடமாட்டார்’ என்றெல்லாம் கூறுவார்கள். லெனின் பாரதியிடம் இது குறித்துக் கேட்டோம்…
“இந்தக் கதைக்கு இளையராஜாதான் பொருத்தமானவர். ஏன்னா கதை பேசற அரசியல், அந்தக் களம் எல்லாமே எங்களுக்கு முன்னாடி பாத்தவர் அவர்தான். அதுக்கும் மேல நாங்க படப்பிடிப்பு நடத்திய பகுதிகளில் நாப்பது, ஐம்பது வருஷங்களுக்கு முன்பே அவர் காலடி பட்டிருந்தது. அதனால் அவரைத் தாண்டி என்னால் யோசிக்க முடியல. 2011-ல் இந்தக் கதை எழுதி முடிச்சதும் அவர்கிட்டதான் முதலில் சொன்னேன். கதையை சொல்லிவிட்டு “இது சின்ன பட்ஜெட்படம்தான். ஆனா நீங்கதான் பண்ணனும். மறுத்துறாதீங்க”னு சொன்னேன். ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல, நீங்க என்ன சொல்றீங்களோ அப்படியே பண்றேன்’னு சொல்லிட்டார்.
அவருக்கு பட்ஜெட்லாம் விஷயமே இல்லை. கதை பிடிக்கணும், ‘இதுல வேலை செய்யலாம்’னு அவருக்குத் தோன்ற வேண்டும். அதுதான் முக்கியம். நீங்க கேட்ட மாதிரிலாம் இல்லை. அவரைப் பொறுத்தவரை புதுமுகம், 100 படம் பண்ண டைரக்டர் என்றெல்லாம் பார்க்க மாட்டார். அங்க அவர் ஒரு இசைக் கலைஞரா மட்டும்தான் இருப்பார். நம்ம என்ன இன்புட் கொடுக்கிறோமோ, நாம உருவாக்கியிருக்கும் படம் என்ன கொடுக்குதோ அதுக்கு இசை அமைப்பார். நம்ம சொல்றதை கேப்பார்” என்றார்.
-nakkheeran.in