அதர்வா- நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ எப்படி இருக்கிறது ?

“டிமாண்டி காலனி ” படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்கி உள்ளார். இசை ஹிப் ஹாப் ஆதி.

நயன்தாரா ஒரு சிபிஐ ஆபீசராக வருகிறார். அவருக்கு தம்பி வேடத்தில் அதர்வா – சென்னையில் டாக்டருக்கு படிக்கும் மாணவன். நடிகர் விஜய் சேதுபதி நயன்தாராவின் கணவனாக வந்து செல்கிறார்.

சைக்கோ கொலைகாரன் ஒருத்தன், பெங்களூரில் சிலரை கொடூரமாக கொலை செய்கிறான். சிபிஐ ஆபீசர் நயன்தாரா அந்த கொலை வழக்குகளை துப்பறிகிறார். தனது ஸ்மார்ட் திட்டங்களால் ஈசியாக எஸ்கேப் ஆகிறான் கொலைகாரன்… இன்னொரு பக்கம் அதர்வா – ராஷி கண்ணா காதல் கதை. சில காரணங்களால் இருவரும் பிரிந்து விடுகிறார்கள், பிறகு தனது காதலியை தேட பெங்களூர் வருகிறார் அதர்வா.

சைக்கோ கொலைகாரன் முகம் யாருக்கும் தெரியாது ஆனால் அவனைப் பிடிக்க நயன்தாரா போலீஸ் படையுடன் வலை விரிக்கிறார். அதைத் தெரிந்துகொண்ட கொலைகாரன்  அந்த வலையில் அதர்வாவை மாட்டி விடுகிறான். தம்பி கைதி என்பதால் போலீஸ் விசாரணை முடியும்வரை நயன்தாராவை ஹவுஸ் அரெஸ்ட் செய்கிறார்கள்.

பிறகு போலீஸ் காவலில் இருந்து அதர்வா தப்பித்து எப்படி அந்த சைக்கோ கொலைகாரனை பிடிக்கிறார்? அதற்கு நயன்தாரா எப்படி உதவுகிறார்? என்பது தான் கதை.

மிரட்டலான நடிப்பால் ரொம்பவே கவர்கிறார் வில்லன் அனுராக் காஷ்யப். பாலிவுட்டின் பிரபல இயக்குனரான  அவருக்கு இயக்குனர் மகிழ் திருமேனி கொடுத்த வாய்ஸ் சரியான தேர்வு.

சி பி ஐ ஆபிசர் அஞ்சலியாக வரும் நயன்தாராவின் துப்பறியும் ஸ்டைல்  ரசிக்க வைக்கிறது.  கெஸ்ட் ரோலில் வரும் விஜய்சேதுபதிக்கும் அவருக்குமான சீன்களில் தியேட்டரில் விசில் பறக்கிறது.

ஹிப் ஹாப் அதி பின்னணி இசை மிரட்டுகிறது. பட்டுக்கோட்டை பிரபாகரனின் திரைக்கதை படத்தை எந்தவித குழப்பமும் இல்லாமல் கொண்டு செல்கிறது. பெங்களூரின் குற்ற பக்கங்களை அறுமையாக படம் பிடிக்கிறது ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகரின் கேமரா. விறுவிறுப்பான பல காட்சிகள் இருந்தாலும், 2.5 மணி நேரம் என்பது படம் நீண்டு கொண்டே செல்வது போல் தொன்றுகிறது.  அதர்வாவின் காதல் சீன்கள், க்ரைம் த்ரில்லரின் வேகத்தை  குறைக்கிறது.

-dailythanthi.com