ரஹ்மானின் இசையில் பாடல் எழுதுவது கடினம்: வைரமுத்து

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றுவது குறித்து வைரமுத்து பகிர்ந்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து பாடல் எழுதுகிறார் என்றாலே இசை ரசிகர்களுக்கு அது மிகச்சிறப்பான உணர்வைத் தரும். இசையின் மேன்மையும், எழுத்தின் தரமும் அப்படி இருப்பது அதற்கு காரணமாக இருக்கலாம்.

இப்போது இவர்களின் கூட்டணியில் செக்கச் சிவந்த வானம் திரைப்பட பாடல்கள் வெளியாக உள்ளது. அது மணிரத்னம் இயக்கம் என்பதால் இன்னும் ஸ்பெஷலாக தெரிகிறது. இந்த நிலையில், மற்ற இசையமைப்பாளர்களைவிட ஏ.ஆர்.ரஹ்மான் ட்யூனுக்கு பாடல் எழுதுவது கடினம் என வைரமுத்து தெரிவித்துள்ளார்.

பாடல் எழுதுவதற்கு முதலில் இசையமைப்பாளரின் ட்யூனை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். ரஹ்மானின் ட்யூனை உள்வாங்கிக் கொள்வது கடினம். காற்றை எப்படி கைகளால் பிடிக்க முடியாதோ அதேபோல், ரஹ்மானின் ட்யூனில் உள்ள சாரம் மொழியுடன் பிடிபடாது. அவருடைய இசை மொழிக்கு அப்பாற்பட்டது. மற்ற இசையமைப்பாளர்களை பொருத்தவரை ட்யூன் கிடைத்துவிட்டால், அதற்கேற்ற வார்த்தைகளை போடுவது தான் என் வேலை. ஆனால் ரஹ்மான் என்று வரும்போது அந்த ட்யூனில் உள்ள சாரத்தையும் கண்டுபிடிக்க வேண்டும்.

ஒரு பாடலாசிரியரின் வேலை இசையமைப்பாளரின் மெட்டில் வார்த்தைகளை பொருத்துவது தான். நிறைய நேரங்களில், ரஹ்மானின் ட்யூனில் வார்த்தையை உட்கார வைக்க முடியாது. வார்த்தைகள் உட்காரும்படி குறிப்பிட்ட இடத்தில் மாற்றம் செய்யுங்கள் எனக் கேட்டால் சில நேரங்களில் அவர் மறுத்துவிடுவார். அதை நான் போட்டியாக எடுத்துக் கொண்டு செயல்படும்போது அழகான பாடல் கிடைக்கும். நல்ல படைப்புக்காக எங்களுக்குள் நிகழும் படைப்பு மோதல்களை நாங்கள் கொண்டாடுவோம் என்கிறார் வைரமுத்து.

மே மாதம் திரைப்படத்திற்கு பாடல் எழுதிக்கொண்டிருந்தபோது மார்கழிப் பூவே பாடலை எழுதிக் கொடுத்துவிட்டு தேனீர் குடித்துக் கொண்டிருந்தேன். திடீரென ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் இருந்து வெளியே வந்த ரஹ்மான், அப்பாடலின் இடையில் வரும் சிறிய ட்யூனுக்கு வரிகள் வேண்டும் என்றார். அப்போது அந்த சிறிய ட்யூனில் ஒரு வார்த்தை பொருந்தாது என்றேன். நான் நினைத்தால் பொருத்திக் கொள்வேன் என்றார். அது என்னை கோபமூட்டியது. இருந்தாலும் சவாலாக எடுத்துக்கொண்டு எழுதியதுதான் அப்பாடலின் இடையில் வரும், வெண்பா… பாடிவரும் வண்டுக்கு, செந்தேன்… தாண்டிவிடும் செம்பூக்கள்..கொஞ்சம் என்ற வரிகள் என்று வைரமுத்து கூறினார்.

tamil.filmibeat.com