மைதிலி (சாந்தினி தமிழரசன்) என்ற பெண் வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடக்க, எதிர்வீட்டில் குடியிருக்கும் சண்முகத்தை (சிபி புவன சந்திரன்) விசாரிக்கிறது காவல்துறை. ஒரு பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றும் சண்முகம் பெரும் குடிகாரனும்கூட. அவனை காவல்நிலையத்திலிருந்து வெளியில் கொண்டுவருகிறார்கள் உடன் பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள்.
மைதிலியின் கணவர் பாலசுப்ரமணியம் (ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்), முன்னாள் காதலன் கிருஷ் ஆகியோரும் விசாரிக்கப்படுகிறார்கள். இதில் பாலசுப்ரமணியத்தை சம்பத் (குரு சோமசுந்தரம்) என்ற கேங்ஸ்டர் மீட்கிறான். இதற்கிடையில் காவல்துறை துரைராஜ் என்ற மிகப் பெரிய ரவுடியையும் தேடுகிறது. இந்தக் கொலையை யார், எதற்காகச் செய்தது, இதில் விசாரிக்கப்படுபவனை கேங்ஸ்டர் ஒருவன் காப்பாற்றுவது ஏன், துரைராஜ் யார் என்பதுதான் மீதிக் கதை.
நிழலுலகம் கதையின் மையமா, இல்லை கொலைப் புதிரா அல்லது கதாநாயகனின் பிரச்சனைகள்தான் மையமா என்பது கடைசிவரைக்கும் புரியாததால் ரொம்பவுமே சோதிக்கிறது இந்தப் படம்.
காவல்நிலையத்தில் சந்தேகத்திற்குள்ளானவர்களைக் காவல்துறை விசாரிக்கும்போது சர்வசாதாரணமாக பத்திரிகையாளர்கள் வந்து அழைத்துச்செல்லும் காட்சியிலேயே படம் குறித்த சந்தேகம் எழுந்துவிடுகிறது. பிறகு, ஒரு தாதாவை கடலுக்குள் வைத்துப் பேட்டியெடுத்து, கைசெய்ய வைப்பது, தனியாக பத்திரிகையாளர்களே ஒரு வழக்கில் தேடல் நடத்துவது என பத்திரிகையாளர்கள் குறித்த மிகையான பிம்பத்தை உருவாக்குகிறது படம். மற்றொரு பக்கம் தாதாவாக வரும் சம்பத் சம்பந்தமில்லாமல் ஏதேதோ செய்துகொண்டேயிருக்கிறார். காவல்துறை எந்த விசாரணையையும் உருப்படியாகச் செய்யாமல், அடிக்கடி பேசுகிறார்கள்.
சிறையில் இருக்கும் தாதாவான மாறன் நம்ப முடியாத வகையில் தப்பித்து முன்னாள் காவல்துறை அதிகாரியையும் பத்திரிகையாளரையும் எதற்காகக் கடத்துகிறார், சம்பந்தமே இல்லாமல் சம்பத் ஏன் காவல்துறை அதிகாரியைக் கொல்கிறார், துரைராஜ் என்பவர் என்ன செய்தார் என்பதற்காக காவல்துறை தேடுகிறது என பல கேள்விகளுக்குப் படத்தில் விடை இல்லை.
குரு சோமசுந்தரத்தைத் தவிர படத்தில் வரும் யாரும் நடிக்க முயற்சிகூட செய்யவில்லை. நடிகர்கள் பலரும் ஒட்டாமல் ஏனோ, தானோவென்று நடித்துவிட்டுச் செல்கிறார்கள். பல காட்சிகள் அமெச்சூர்தனமாக நகர்கின்றன.
சாம் சி.எஸ்சின் இசை படத்திற்கு சுத்தமாகப் பொருந்தவில்லை. படத்தில் வரும் காட்சி ஒரு மாதிரி இருக்க, இசை வேறு மாதிரி இருக்கிறது. குறிப்பாக ஒரு காட்சியில், பின்னணி இசை, சண்முகம் குறித்த ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. ஆனால், அந்தக் காட்சியில் அடிவாங்கி கீழே விழுகிறார் மனிதர். பாடல்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை.
திரைக்கதை, படத்தொகுப்பு என எல்லாவற்றிலும் கோட்டைவிட்டிருக்கிறார்கள்.
எல்லாவற்றையும் தாண்டி முடிவில், சம்பத்தும் நண்பரான பாலசுப்பிரமணியமும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று சுட்டிக்காட்டப்படும் காட்சியில், சண்முகம் பேசும் வசனங்கள் மிக மோசமானவை.
வஞ்சகர் உலகம் என்ற டைட்டிலும் அதில் குரு சோமசுந்தரம் நடித்திருந்ததும் படத்தின் ட்ரெய்லரும் இந்தப் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. ஆனால், எல்லாவிதத்திலும் ஏமாற்றமளிக்கிறது படம். -BBC_Tamil