“நான் பேசும்போது சாதி வெறியனா தெரிவேன்…” – பா.ரஞ்சித்

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராமின் உதவி இயக்குனராக பணியாற்றியவரும் எழுத்தாளருமான மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. கதிர், ஆனந்தி ஆகியோர் நடித்திருக்கும் படத்திற்கு இசையமைத்திருப்பவர் சந்தோஷ் நாராயணன். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்,

“எனக்கு முன்னோடி புரட்சியாளர் அம்பேத்கர் மட்டும்தான். அது ரொம்ப வலி மிகுந்தது. அவரது கனவு மனித மாண்பை மீட்டெடுப்பது மட்டும்தான். எல்லோரும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும்னு நினைச்சப்போ, ‘இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும், ஆனா காலனி ஆதிக்கமெல்லாம் நடக்கும் முன்பே அடிமைப்பட்ட இந்த மக்கள் சுதந்திரம் பெற வேண்டும்’னு அவர் நினைச்சார். அவர் ஒரு முறை வலியோடு பேசியிருக்கிறார், ‘நான் யாருக்காகப் போராடினேனோ அவர்களே என்னை கைவிட்டுவிட்டார்கள். நான் ரொம்ப கஷ்டப்பட்டு இந்தத் தேரை இழுத்துவந்துருக்கேன். எனக்குப் பின்னாடி வருபவர்கள் இதை முன்னே இழுக்காவிட்டாலும் பரவாயில்ல, திரும்ப பின்னாடி இழுத்துவிட்டுராதீங்க’ என்று. அந்தத் தேரை என்னால் முடிந்த வரை முன்னிழுப்பேன். என்னால் எந்த வழியில் பேசமுடியுமா அப்படி பேசுவேன், திரைப்படமாக, கலையாக, நாடகமாக இப்படி.

என் மேல் நிறைய விமர்சனங்கள் இருக்கு. என்னைப் பற்றி நிறைய பேர் பேசுறாங்க. அம்பேத்கர் ஒரு வார்த்தையை சொல்லிகிட்டே இருப்பார். அது, ‘இக்னோர்’ (ignore). அந்த விதியை நான் இங்க பயன்படுத்துவேன். அவதூறுகளை நான் இக்னோர் பண்ணுவேன். நல்ல விமர்சனங்களுக்கு பதிலை நான் யோசிச்சுகிட்டே இருப்பேன். என் படங்களில் நான் வேலை செய்த விதம் வேறயா இருந்தாலும், படம் என்ன பேசவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். நான் பேசும்போது சாதி வெறியனா தெரியுறேன். ஒரு சாதியை எதிர்க்குறவனை சாதி வெறியனா பாக்குறதை எதிர்க்கிறதுக்கும் ஒரு மனநிலை வேணும், சப்போர்ட் வேணும். அப்படி ஒரு சப்போர்ட்டா இந்தப் படத்தை தயாரிக்கிறேன். தொடர்ந்து இதுபோலவே தயாரிப்பேன்” என்றார்.

-https://nakkheeran.in