தமிழில் கையெழுத்திடும் இயக்கம் தொடங்கிய நடிகர் ஆரி

ஆரி சென்னையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:–

‘‘உலகிற்கே தாய்மொழி நம் தமிழ்மொழி. இன்று அழியக்கூடிய மொழியிலும் தமிழ் உள்ளது. இதற்கு காரணம் ஆங்கில கல்வி மோகம்தான். கடந்த ஜூன்மாதம் வட அமெரிக்காவில் உள்ள டேலஸ் மாகாணத்தில் நடந்த தமிழர் திருவிழாவில் தமிழில் கையெழுத்திடுவது என்ற முழக்கத்தை தொடங்கி 1119 பேர் கையெழுத்திட்டு புதிய கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தினர்.

நானும் தமிழில் கையெழுத்திட்டேன். தற்போது வங்கியில் அலுவல் சார்ந்த கையெழுத்தையும் தமிழில் மாற்றி உள்ளேன். தமிழில் கையெழுத்திடும்படி தமிழகம் முழுவதும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியை தொடங்கி உள்ளேன். இதற்காக மாவட்டம்தோறும் பொறுப்பாளர்களை நியமித்து அவர்கள் தாய்மொழியில் கையெழுத்திடும் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். அடுத்த கட்டமாக தமிழின் பெருமையை உரக்கச் சொல்லி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து பிரசார பேரணி தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் நடைபெறும். ஜனவரி 15–ந்தேதி கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு முடிவடையும். அரசியல்வாதிகளும் நடிகர்களும் தங்களது அலுவலக கையெழுத்தை தமிழில் மாற்ற வேண்டும்.’’

இவ்வாறு நடிகர் ஆரி கூறினார்.

-dailythanthi.com