சென்னை, பாரதிராஜா டைரக்டு செய்த ‘மண்வாசனை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், ரேவதி. ‘கன்னிராசி’, ‘ஆண்பாவம்’, ‘மவுனராகம்’, ‘அரங்கேற்ற வேளை’, ‘ஒரு கைதியின் டைரி’ உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
இவருக்கும் ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான சுரேஷ்மேனனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். சுரேஷ்மேனனும், ரேவதியும் சேர்ந்து ‘புதியமுகம்’ என்ற படத்தை சொந்தமாக தயாரித்தனர். அதில் சுரேஷ்மேனன் கதா நாயகனாக நடித்தார். படம் வெற்றி பெறவில்லை. அதனைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2 பேரும் விவாகரத்து செய்துகொண்டனர். ரேவதி கணவரை விட்டு பிரிந்து கேரளாவில் குடியேறினார்.
இந்தநிலையில் ரேவதி சோதனை குழாய் மூலம் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். 5 வருடங்களுக்கு பிறகு இப்போது இந்த தகவலை அவர் வெளியிட்டு இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
“வாழ்க்கையில் பல பிரச்சினைகளை நான் கடந்து வந்துள்ளேன். தாய்மை என்பது ஒரு பெண்ணின் முழுமை. அதற்காக ஏங்கியிருக்கிறேன். எனவே சோதனை குழாய் மூலம் கர்ப்பம் அடைந்து பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். அவளுக்கு மகி என்று பெயர் சூட்டியிருக்கிறேன்.
அவளை நான் தத்தெடுக்கவில்லை. தத்தெடுத்து வளர்ப்பதாக வதந்தி பரவியிருக்கிறது. எனவே தான் உண்மையை வெளியிட்டு இருக்கிறேன். தற்போது என் குழந்தை மகிக்கு 5 வயது ஆகிறது. அவளே என் உலகம். ஒரு அம்மாவாக அவளை வளர்த்து ஆளாக்குவது என் பொறுப்பு”.
இவ்வாறு ரேவதி கூறியிருக்கிறார்.
-dailythanthi.com