ரூ.1,000 கோடியில் தயாராகும் ‘மகாபாரதம்’ படத்துக்கு நடிகர்-நடிகைகள் தேர்வு

அனைத்து இந்திய மொழிகளிலும் ரூ.1,000 கோடி செலவில் தயாராகும் ‘மகாபாரதம்’ படத்துக்கான முன் ஏற்பாடு வேலைகள் தொடங்கி உள்ளன. ஹாலிவுட் படங்களுக்கு இணையான கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் இந்த படம் தயாராகிறது. கோடிக்கணக்கான செலவில் அரண்மனை அரங்குகளும் அமைக்கப்படுகின்றன.

இந்த படத்துக்கான ஒருங்கிணைக்கும் பணி இந்தி நடிகர் அமீர்கானிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட அனைத்து மொழி திரையுலகிலும் முன்னணி நடிகர்-நடிகைகளாக இருப்பவர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசனையும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன.

ரஜினிகாந்தை அமீர்கான் தொடர்புகொண்டு பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் நடிப்பாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. பாகுபலி மூலம் பிரபலமான பிரபாசை மகாபாரதம் படத்தில் நடிக்க அணுகினர். அவர் நடிக்க சம்மதித்து உள்ளார். அர்ஜுனன் வேடத்தில் அவர் நடிக்க வேண்டும் என்று பேசினர். ஆனால் தற்போது பீமன் வேடத்தில் பிரபாஸ் நடிப்பது உறுதியாகி உள்ளது.

கிருஷ்ணர் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிப்பார் என்று தெரிகிறது. அமிதாப்பச்சனும் முக்கிய வேடத்தில் வருகிறார். தீபிகா படுகோனே திரவுபதி வேடத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. நகுலன், சகாதேவன், துரியோதனன், துச்சாதனன் உள்ளிட்ட மேலும் பல கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

-dailythanthi.com