இளையராஜா பாடல்களை பாடத் தான் செய்வேன், நோட்டீஸ் அனுப்பினா அனுப்பட்டும்: எஸ்.பி.பி.

ஹைதராபாத்: நான் தொடர்ந்து இளையராஜா பாடல்களை பாடத் தான் செய்வேன் என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தனது பாடல்களை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இசை நிகழ்ச்சிகளில் பாடக் கூடாது என்று கூறி இசைஞானி இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து இளையராஜா பாடல்களை பாடுவதை நிறுத்திய எஸ்.பி.பி. தற்போது மீண்டும் அவரின் பாடல்களை பாடத் துவங்கிவிட்டார்.

இந்நிலையில் இது குறித்து எஸ்.பி.பி. ஹைதராபாத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இளையராஜா

என் பாடல்களை பாடக் கூடாது என்று இளையராஜா கூறினாலும் நான் பாடுவேன், பாடிக் கொண்டே இருப்பேன். அவர் என் மகன் நடத்திய நிறுவனத்திற்கு தான் நோட்டீஸ் அனுப்பினாரே தவிர என் பாடல்களை பாடக் கூடாது என்று எனக்கு நேரடியாக தடை எதுவும் விதிக்கவில்லை.எஸ்.பி.பி. 50 என்ற பெயரில் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது தான் என் பாடல்களை யார் பாடினாலும் ராயல்டி கொடுக்க வேண்டும் என்று கூறி அவர் நோட்டீஸ் அனுப்பினார்.

பிரச்சனை

இளையராஜா ஏன் அப்படி செய்தார் என்று தெரியவில்லை. அந்த பிரச்சனை இன்னும் தீரவில்லை. அவர் நோட்டீஸ் அனுப்பிய பிறகு 1 ஆண்டு காலம் அவரின் பாடல்களை நான் பாடவில்லை. அவர் இசையில் தான் நான் அதிக அளவில் பாடியுள்ளேன். அதனால் அந்த பாடல்களில் எனக்கும் பங்கு உண்டு. எனவே, இளையராஜாவின் பாடல்களை மீண்டும் பாடத் துவங்கிவிட்டேன்.

நண்பன்

நான் அவர் பாடல்களை பாடுவதற்காக அவர் என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் சட்டப்படி சந்திப்பது என்று முடிவு செய்துள்ளேன். ஒரு நண்பனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டாரே என்பது தான் வேதனையாக உள்ளது. எந்த பாடல் மீது அவருக்கு உரிமை உள்ளது என்பதை அவர் விளக்கமாக தெரிவிக்க வேண்டும். அந்த பணத்தை எப்படி வசூலிக்கிறார் என்பதை தெளிவுபடுத்தினால் தான் இந்த பிரச்சனை தீரும்.

இசையமைப்பாளர்

இளையராஜாவின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் தொடர்ந்து பாடத் தான் செய்வேன். நிறுத்த மாட்டேன். அவர் நோட்டீஸ் அனுப்பியதால் அவர் மீதான மரியாதை கொஞ்சம் கூட குறையவில்லை. ஒரு இசையமைப்பாளராக அவரின் காலை தொட்டு கும்பிட எப்பொழுதுமே தயங்க மாட்டேன் என்றார் எஸ்.பி. பி.

tamil.filmibeat.com