செக்கச் சிவந்த வானம் – சினிமா விமர்சனம்

காற்று வெளியிடை படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.

கடல், ஓ.. காதல் கண்மணி, காற்று வெளியிடை படங்களால் சோர்ந்து போயிருக்கும் அவரது ரசிகர்களுக்கு இந்தப் படம் சற்று உற்சாகமளிக்கக்கூடும்.

தாதாவான சேனாதிபதிக்கு (பிரகாஷ் ராஜ்) மூன்று மகன்கள். சேனாதிபதியும் அவரது மனைவியும் (ஜெயசுதா) காரில் போய்க்கொண்டிருக்கும்போது அவரைக் கொல்ல சிலர் முயல்கிறார்கள்.

சேனாதிபதியின் மகன்களான வரதன் (அரவிந்த் சாமி), எத்தி (சிம்பு), தியாகு (அருண் விஜய்) ஆகிய மூவரும் தந்தையைக் குறிவைத்தவனைப் பழிவாங்க விரும்புகிறார்கள்.

போட்டி தாதாவான சின்னப்பதாஸ் (தியாகராஜன்), மனைவியின் தம்பியான செழியன் (சிவா ஆனந்த்), மருமகள் (ஜோதிகா), மகன்கள் என பலர் மீதும் கோபம் திரும்புகிறது.

செக்கச் சிவந்த வானம்

இதற்கு நடுவில் சேனாதிபதி இறந்துவிட, தந்தையின் இடத்திற்கு மகன்கள் மூவருமே போட்டிபோடுகிறார்கள்.

வரதனின் நண்பனும் காவல் துறையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவருமான ரசூல் (விஜய் சேதுபதி) தனியாக ஒரு விளையாட்டை ஆரம்பிக்கிறார். ஒரு சிறிய திருப்பத்தோடு படம் முடிகிறது.

உறவுச் சிக்கல்களை விட்டுவிட்டு ஒரு தாதா கதைக்கு மணிரத்னம் திரும்பியிருப்பதே ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கக்கூடும்.

துவக்கத்தில் சேனாதிபதி தாக்கப்பட்டவுடன் அதை ‘யார் செய்திருக்கக்கூடும்’ என்பது மாதிரியான கதையாக துவங்கி, இடைவேளை தருணத்தில் தாதா குடும்பத்திற்குள் நடக்கும் போட்டியாக மாறுகிறது.

முதல் பாதியில் இயக்குநர் வைத்திருக்கும் திருப்பம் சீக்கிரமே பார்வையாளர்களுக்கு புரிந்துவிட்டாலும் அதனை முழுமையாக அவிழ்க்காமல் படம் நெடுக்க எடுத்துச் செல்வது சுவாரஸ்யம்.

அதே போல படத்தின் இறுதியில் வரும் திருப்பமும் நன்றாகவே இருக்கிறது.

செக்கச் சிவந்த வானம்

தந்தையின் இடத்தைப் பிடிக்க மூன்று மகன்களும் நடத்தும் நரவேட்டைதான் படத்தின் மையப்புள்ளி.

அந்தக் கட்டத்திற்கு படம் வந்து சேர்ந்தவுடன் படம் விறுவிறுப்பானாலும், அதுவரை படத்தில் தென்படும் பிரச்சனைகள் ரொம்பவுமே சோதிக்கின்றன.

தாதாக்கள் சுட்டுக்கொண்டேயிருக்கிறார்கள், ராணுவத்தில் பயன்படுத்தும் வெடிகுண்டை காருக்குள் வீசுகிறார்கள், பாலியல் விடுதியில் துப்பாக்கிச் சூடு நடக்கிறது – ஆனால், காவல்துறை கண்டுகொள்வதேயில்லை.

அவ்வப்போது காவல்துறை அதிகாரி ஒருவர் கூப்பிட்டு சமாதானம் பேசுவதோடு சரி. சேனாதிபதியின் மகன்கள் மூவரும் எந்த நாட்டிலும் எதை வேண்டுமானாலும் செய்யும் சக்தி படைத்தவர்களாக வேறு இருக்கிறார்கள்.

அதனால், சேனாதிபதி என்ன தாதா வேலை பார்க்கிறார், வெளிநாட்டில் இருக்கும் இரண்டாவது மகன் என்ன செய்கிறார் போன்ற கேள்விகளும் அவ்வப்போது தோன்றி மறைகின்றன.

தவிர, மணிரத்னம் படங்களில் எல்லாமே, ஒருவருக்கொருவர் பேசுவது மிக செயற்கையாகவே இருக்கும். அந்தப் பிரச்சனை இந்தப் படத்திலும் இருக்கிறது.

செக்கச் சிவந்த வானம்

அதனால், ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் மோதல் என்பதாக பல சமயங்களில் மனதில் பதியாமல் போகிறது இந்தக்கதை.

புதுச்சேரியில் ஒரு பாலியல் விடுதில் நடக்கும் துப்பாக்கிச் சண்டை சுத்தமாகப் பொருந்தவில்லை.

நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ள பாலியல் விடுதியில், துப்பாகிச் சண்டை நடந்து ஆட்கள் விழுந்துகொண்டிருக்கும்போது அங்கேயிருக்கும் பெண்கள் அப்போதும் வாடிக்கையாளர்களைப் பிடிக்கப்பார்க்கிறார்கள்!

அதேபோல துபாயில் இருக்கும் தியாகுவின் வீட்டிற்கு நான்கு தடியர்கள் புகுந்து போதைப் பொருளை வைத்துவிட்டுச் செல்கிறார்கள்.

தியாகுவின் மனைவி போலீசுக்கு போன் செய்தால், அவர்கள் வந்து தியாகுவின் மனைவியைக் கைதுசெய்கிறார்கள். துபாய் போலீஸ் அவ்வளவு சிறுவர்களா? சிசிடிவி காட்சிகளைப் பார்க்க மாட்டார்களா?

வரதனின் காதலியாக வரும் அதிதி ராவின் பாத்திரம் படத்திற்கு தேவையில்லாத ஓர் ஆணி.

தாதாவாக நடிப்பது பிரகாஷ் ராஜிற்கு அல்வா சாப்பிடுவதைப் போல. மனிதர் பின்னுகிறார். அவரை விட்டுவிட்டால் சிம்புவும், விஜய் சேதுபதியும் ஜொலிக்கிறார்கள்.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் சந்தேகமில்லாமல் படத்தின் பலங்களில் ஒன்று.

பாடல்கள் எதுவும் தனியாக வராமல் பின்னணியில் ஒலிப்பது, ஆசுவாசமளிக்கிறது. வசனங்களில் இருக்கும் ரசிக்க முடியாத செயற்கைத்தன்மை படத்தின் முக்கியமான பலவீனம்.

மணிரத்னத்தின் ரசிகர்களைப் பொறுத்தவரை, அவர் மீண்டும் தலையெடுக்கும் வகையிலான ஓர் உற்சாகமான படம்தான் இது.

ஆனால், ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்குள் பொருத்திப்பார்த்தால், மோசமில்லாத ஒரு படம். அவ்வளவுதான். -BBC_Tamil