பரியேறும் பெருமாள் திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் புரட்சிகரமான படங்களை எடுப்பவர் பா.ரஞ்சித். இவர் முதன் முதலாக தயாரித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள படம் பரியேறும் பெருமாள். ரஞ்சித்தின் புரட்சி தீ மாரி செல்வராஜ் வழியாக பற்றியதா? பார்ப்போம்.

கதைக்களம்

பரி(கதிர்) கல்லூரிக்கு சென்று படித்து வக்கீலாக வேண்டும் என்று கஷ்டப்பட்டு தனக்கு வராத ஆங்கிலத்தில் எல்லாம் பாஸாகி லா காலேஜ் செல்கின்றார்.

அங்கு ஆனந்தியுடன் நட்பு ஏற்படுகிறது. அவரும் கதிருக்கு ஆங்கிலம் சொல்லி தந்து படிக்க உதவுகிறார்.

இப்படி அழகாக செல்லும் நட்பில் ஆனந்தி குடும்பத்தின் ஜாதி வெறியால் நட்பில் விரிசல் விடுகின்றது.

அதை தொடர்ந்து அந்த வெறி கதிரை எத்தனை அசிங்கப்படுத்த முடியுமோ அதையெல்லாம் செய்ய, இறுதியில் கொலை செய்ய கூட முடிவு செய்கின்றனர். இத்தனை கொடுமைகளையும் பரி எப்படி எதிர்க்கொள்கின்றார் என்பதை ஆதிக்க ஜாதி வெறி பிடித்தவர்கள் முகத்தில் அறைந்து கூறியிருக்கும் படமே இந்த பரியேறும் பெருமாள்.

படத்தை பற்றிய அலசல்

பரியாக கதிர் நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். ஆங்கிலம் தெரியாமல் யதார்த்தமாக சொல்லி ஆசியரிடம் திட்டு வாங்கி, பிறகு இங்கு யாருக்குமே நீங்கள் நடத்துவது புரியவில்லை, எல்லோரும் ஏமாற்றுகின்றார்கள் என்று நோட்டு, புத்தகத்தை தூக்கி போட்டு ஓடும் இடத்திலேயே பரியின் வலியை நமக்குள் கடத்தி செல்கின்றார்.

ஊர் பெயரை வைத்தே இவன் என்ன ஜாதி, அவன் என்ன ஜாதி என்று கண்டுப்பிடிப்பது, ஏன், ஆனந்தியை ராக்கிங் செய்யும் இடத்தில், சீனியர் பெண்களிடம் அவள் முகத்தை பார்த்தால் தெரியவில்லை, நம்மாளு என்று பேசும் இடமெல்லாம் என்ன தான் நாம் படித்து முன்னேறி நல்ல வேலைக்கு வந்தாலும், இப்படியும் மனிதர்கள் இருந்துகொண்டே தான் இருக்கிறார்கள் என்று வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் மாரி செல்வராஜ்.

கதிரை தங்கள் வீட்டிற்கு அழைத்து ஒரு ரூமிற்குள் வைத்து தன் மகளிடம் பேசாதே என அடித்து, அவர் மேல் சிறுநீர் கழிக்கும் அளவிற்கு ஜாதி வெறி இருக்கும் இளைஞர்களின் எண்ணங்களை காட்சியாக தைரியமாக படத்தில் காட்டியதற்காகவே இயக்குனரை பாராட்டலாம்.

அதேபோல் ஒரு தாத்தா அவர் படத்தில் வந்தாலே எவன் சாகப்போகிறான் என்ற மனநிலை தான் நமக்கு வருகின்றது. ஜாதி விட்டு ஜாதி மாறி காதலிப்பவர்களை கொல்வதற்கே ஊரில் ஒரு பெரிய ஆள் இப்படி இருக்கின்றார் என காட்டிய விதம் பதட்டத்தை உண்டாக்கின்றது. அதிலும் கிளைமேக்ஸில் தண்டவாளத்தில் கதிரை படுக்கவைத்து அவர் செய்யும் ஜோடிப்பு தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஆணவக்கொலையை நியாபகப்படுத்துகின்றது.

இதுதான் என் அடையாளம் இதை ஏன் நான் மறைக்க வேண்டும், பெண் வேடமிட்டு ஆடும் தன் அப்பாவை கல்லூரிக்கு அழைத்து வரும் கதிர், அங்கு அவருடைய அப்பாவிற்கு நடக்கும் கொடுமை என பல இடங்களில் கண்கலங்க வைக்கின்றனர்.

அட என்னப்பா இது படம் முழுவதும் ஜாதி தானா, வேறு ஏதும் இல்லையா? என்று கேட்டால், எல்லோருக்கும் இந்த படத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே யோகிபாபு இருக்கின்றார் போல. படம் முழுவதும் வந்து அசத்துகின்றார் காமெடியில், அதே நேரத்தில் ‘ஜாதி பார்த்தா நான் பழகினேன், என்ன தப்பு செஞ்சான் சொல்லு, நானே இறங்கி அடிக்கின்றேன்’ என எமோஷனலாகவும் ஸ்கோர் செய்கின்றார்.

படத்தில் அங்கும் இங்கும் பல குறியீடுகள் குவிந்து இருக்கின்றது. இளையராஜாக்கள் கபடி குழுவில் ஆரம்பித்து அட்டைப்படத்தில் நடிகர்கள் படம் வைத்த நோட்டு வைத்திருப்பவர்கள் என்ன ஜாதி என்பது வரைக்கும் சொல்லாமல் சொல்கின்றார் மாரி செல்வராஜ்.

படத்தின் ஆரம்பத்தில் கருப்பி நாய் அடிப்பட்டு இறப்பது, அதை தொடர்ந்து கிளைமேக்ஸில் நீல வண்ணத்தில் கருப்பி வருவது என குறியீடுகள் குவிந்து இருக்கின்றது. சந்தோஷ் நாராயணன் பெஸ்ட் படங்கள் என்று எடுத்தால் கண்டிப்பாக பரியேறும் பெருமாள் இருக்கும்.

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்களம், இன்று நாம் எல்லோரும் சந்திக்கும் மற்றும் பார்க்கும் பிரச்சனைகளை சொன்ன விதம்.

படத்தின் வசனங்கள், படித்து டாக்டர் ஆவேன் என்று கதிர் சொல்ல, அட இது லா காலேஜ்பா, இங்கு படித்தால் டாக்டர் ஆக முடியாது என்று தலைமை ஆசிரியர் சொல்கிறார்.

உடனே கதிர் சார் நான் சொன்னது டாக்டர் அம்பேத்கர் என்று ஜாலியாக சொல்லும் இடமாக இருந்தாலும் சரி, நாங்க எல்லாம் உங்க கீழ இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கு வரை இங்க எதுவுமே மாறாது என்று சீரியஸாக சொல்லும் இடத்திலும் சரி கைத்தட்டல் பறக்கின்றது.

கதிர் மற்றும் ஆனந்தியின் எதார்த்தமான உரையாடல்கள் மற்றும் யோகி பாபு வரும் காட்சிகள்.

பல்ப்ஸ்

பெரிதாக சொல்வதற்கு ஏதுமில்லை.

மொத்தத்தில் பார்த்தவர்கள் மனதில் உச்சத்தில் நிற்கிறான் இந்த பரி.

-cineulagam.com