கலாச்சாரத்திற்கு எதிரானவர்களா நடிகைகள்?

சென்னை: கலாச்சாரம் என்ற பெயரில் நடிகைகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.

சமீப காலமாக நடிகைகள் அணியும் ஆடையை வைத்து அவர்களை தரக்குறைவாக விமர்சிப்பது அதிகரித்து வருகிறது. பொதுச்சமூகத்தில் வாழும் நடிகைகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்றாலும், ஆடைகளுக்காக விமர்சிக்கப்படுவதற்கான காரணம் சிக்கலான புரிதல் கொண்டவர்களின் பார்வைக் குறைபாடுதான் எனத் தோன்றுகிறது.

நவ நாகரிக ஃபேஷன் உலகில், நடிகைகள் தங்களின் ஆடைகளுக்காக கடுமையாக விமர்சிக்கபப்படுவது ஜனநாயக நாடான இந்தியாவில் அதிகமாக நடக்கிறது. நடிகைகளின் ஆடைகளில் தான் இந்தியக் கலாச்சாரமே அடங்கியிருக்கிறது என்ற எண்ணம் எப்படி வருகிறது போன்ற பல கேள்விகள் எழுகின்றன. அதுவும் சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்தப் பின்னர், கலாச்சாரம் என்ற பெயரில் நடிகைகள் மீதான தாக்குதல் அதிகரித்திருப்பதை கண் கூடாக பார்க்க முடிகிறது.

பீச் ட்ரெஸ்

சமீபத்தில் கவர்ச்சியாக ஆடை அணிந்த புகைப்படத்தை பகிர்ந்ததற்காக விமர்சிக்கப்பட்டார் சமந்தா. கணவர் நாக சைதன்யாவுடன் வெகேஷன் சென்ற சமந்தா வெளியிட்ட பீச் ட்ரெஸ் புகைப்படம் வைரலானது. திருமணம் ஆன பிறகு ஒரு பெண் எப்படி இதுபோன்ற ஆடைகளை பொது இடத்தில் அணியலாம் எனக் கலாச்சாரக் காவலர்களாக பலர் போர்க்கொடி தூக்கினர். நாகர்ஜுனா போன்ற மிகப்பெரிய நடிகரின் மருமகளாக இருக்கும் சமந்தா இப்படி செய்யலாமா என சில அக்கறையோடுக் கேட்டனர். திருமணத்திற்கு பிறகு நான் எப்படி இருக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும் என அவர் பதிலளித்தார்.

ட்ரீம் கேர்ள்

நடிகை பிரியா பவானி ஷங்கர் மெல்லிசான ஆடை அணிந்து பதிவிட்ட புகைப்படத்திற்கு எதிர்ப்புகள் வந்தன. உன்னை ட்ரீம் கேர்ளாக நினைத்திருக்கிறேன். இப்படி ஆடை அணிகிறாயே என விமர்சித்தவருக்கு, இது போன்ற எண்ணத்துடன் இருப்பவருக்கு ட்ரீம் கேர்ளாக இருக்க எனக்கு விருப்பமில்லை என பதிலளித்தார். பிரியாவின் சொந்த விஷயங்களில் தலையிட்ட நபருக்கு அவர் பதிலளித்த விதம் பாராட்டப்பட்டது.

பிகினி

பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே இதுபோன்ற விமர்சனங்களுக்கெல்லாம் சளைத்தவர் இல்லை. சமீபத்தில் கோவா பீச்சில் பிகினியில் இருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதற்கு எதிர்ப்புகள் வந்தன. அதை பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் பீச்சுக்கு போகும்போது நான் என்ன புடவை கட்டிக்கொண்டா போக முடியும் என ஒரு கேள்வியோடு முடித்துக் கொண்டார்.

புகைப்பிடிக்கும் காட்சி

காதல் கண் கட்டுதே படத்தில் குடும்பப் பாங்கான பெண்ணாக நடித்த அதுல்யா ரவி, அடுத்ததாக நடித்த ஏமாளி திரைப்படத்தின் டிரைலரைப் பார்த்து பலர் கொந்தளித்தனர். சிகரட் பிடிக்கிறார், ஆடையை அவிழ்க்கிறார் இதெல்லாம் நடிப்பா? கலாச்சாரத்தை சீரழிக்கிறார் என ரசிகர்களே கருப்புக் கொடி காட்டினர். நான் நடித்த கதாபாத்திரத்தை வைத்து நான் யாரென்று முடிவு செய்யாதீர்கள். யார் மனதும் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

ஃப்ராக்

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பிரதமர் மோடியை சந்தித்தபோது அணிந்திருந்த உடைக்காக அதிகம் விமர்சிக்கப்பட்டார். முழங்கால் தெரியுமளவுக்கு ஆடையணிந்து கால் மேல் கால் போட்டு பிரதமர் முன்னால் மரியாதை இல்லாமல் அமர்ந்திருக்கிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.

டாப்ஸி

க்ரிட்டி சனோன், மல்லிகா ஷெராவத், கரினா கபூர், டாப்ஸி, பூனம் பாண்டே, ஷில்பா ஷெட்டி, ஜான்வி கபூர் என பல நடிகைகள் மீது கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக உடையணிவதாக குற்றச்சாட்டுக்கள் வந்துள்ளன. அவற்றையெல்லாம் அந்த நடிகைகள் அவரவர் பாணியில் கடந்து வந்து கொண்டே இருக்கின்றனர். அதேபோல் விமர்சிப்பவர்களும் கவர்ச்சியான புகைப்படங்களைப் பார்த்து ரசித்துவிட்டு நடிகைகளின் உடலை ஊறுகாயாக்கிக் கொண்டே வருகின்றனர். இதற்கு நடிகைகளை கலைஞர்களாக பார்க்க மறுக்கும் மனநிலையே பல நேரங்களில் காரணமாக இருக்கிறது.

tamil.filmibeat.com