விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படமாகிறது.. ஹீரோ யார் தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமா உலகம், இப்போது வாழ்க்கை வரலாறு சார்ந்த திரைப்படங்களை எடுப்பதில் பிசியாக உள்ளது. எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய முன்னாள் முதல்வர்களின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளதாக கடந்த சில மாதங்களில் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு சினிமா உலகம் என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறை தழுவி படம் எடுத்து வருகிறது. இந்த நிலையில், விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுகிறது.

இலங்கையில் தமிழர்கள் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது, அதற்கு எதிராக விடுதலை புலிகள் அமைப்பை நிறுவி, ஆயுத போராட்டத்தை முன்னெடுத்தவர் பிரபாகரன். 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போது, பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

விடுதலை புலிகள் அமைப்பிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டாலும், அதற்கு உணர்வுப்பூர்வமாக ஆதரவு அளிக்க கூடிய இளைஞர்கள் பலர் உள்ளனர். இந்த நிலையில்தான் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுகிறது. பாபி சிம்ஹா இதில் பிரபாகரன் கதாப்பாத்திரம் ஏற்க உள்ளாராம்.

திரைப்படத்தை வெங்கடேஷ் குமார் இயக்க உள்ளார். ஸ்டூடியோஸ் 18 இந்த படத்தை தயாரிக்க உள்ளது. உனக்குள் நான் மற்றும் லைட் மேன் படங்களை இயக்கியவர் வெங்கடேஷ் குமார். இலங்கை உள்நாட்டு போரை மையமாக கொண்டு இவர் இயக்கிய நீலம் என்ற திரைப்படம், மத்திய தணிக்கை வாரியத்தால் தடை செய்யப்பட்டது. இந்த படத்தால், இந்தியா-இலங்கை உறவு பாதித்துவிடும் என்று அதற்கு காரணம் கூறப்பட்டது நினைவிருக்கலாம்.

tamil.oneindia.com