சபரிமலைக்கு பெண்கள் செல்வதை எதிர்ப்பேன் : நடிகை ரஞ்சனி, கோர்ட்டில் சீராய்வு மனு

நடிகை ரஞ்சனி தற்போது கேரளாவில் வசித்து வருகிறார். சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு ரஞ்சனி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:–

‘‘அய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதித்த கோர்ட்டின் தீர்ப்பை நான் ஆச்சரியமாக பார்க்கவில்லை. காரணம் வட இந்தியர்களுக்கு அய்யப்பனையும் தெரியாது, நமது வழிபாட்டு முறைகளும் தெரியாது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம்.

நமது வழிபாட்டு முறைகளை பற்றி தெரிந்த தென்னிந்திய நீதிபதி ஒருவரை அந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க இருக்கிறோம். அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து போராடவில்லை என்றால் நமது கலாசாரமும் பாரம்பரியமும் அழிந்து விடும்.

இதற்காக தொடங்கப்பட்டு உள்ள ‘ரெடி டூ வெயிட்’ என்ற பிரசார இயக்கத்தில் நானும் சேர்கிறேன். நம்மை போன்ற பக்தர்களை விட வேறு யாராலும் நமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் காப்பாற்ற முடியாது. இதில் பாலின பாகுபாடு இல்லை. நீதி கிடைக்கும்வரை போராடுவேன்.’’

இவ்வாறு ரஞ்சனி கூறினார்.

-dailythanthi.com