நகைச்சுவைப் புயல் வடிவேலுவின் பிறந்த நாள் இன்று. குடல் குந்தாணிகள் எல்லாம் கதறக் கதற சிரிக்க வைக்கும் வடிவேலுவுக்கு 58 வயதாகிறதாம்.
உலகம் முழுக்க தமிழ் வாய்களை மட்டுமல்லாமல் மொழி தெரியாதவர்களையும் கூட சிரிக்க வைக்கும் சிலாகிப்பான முகம், ஸ்டைல் வடிவேலுக்கு மட்டுமே உண்டு. ஸ்கிரீனில் நின்றாலே சிரிப்புதான்.. இடையில் சறுக்கினாலும் இன்னும் வடிவேலுவை தங்களது மனதிலிருந்து இறக்காமல் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
பூராப் பயலும் சிரிச்சுட்டே இருக்கனும்.. அதுதான் வடிவேலு நமக்கு கொடுக்கும் மெசேஜ்.. சரி சரி வந்தது வந்துட்டீங்க. நாலு வார்த்தை நல்லதா வாழ்த்திட்டு மீம்ஸ் பார்த்து மறக்காம சிரிச்சுட்டு போய்ருங்க.. வர்ட்டா!
நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று தனிமுத்திரை பதித்த வடிவேலுவின் பிறந்த நாள் இன்று. மதுரையில் 1960-ம் ஆண்டு அவர் பிறந்தார். 1991-ம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் வடிவேலு. இதையடுத்து 1992-ம் ஆண்டு உதயகுமார் இயக்கத்தில் சின்னக்கவுண்டர் என்ற படத்தில் கதாநாயகன் விஜயகாந்திற்கு குடை பிடிக்கிற பண்ணையாள் கதாபாத்திரத்தில் நடித்தார்.
திருப்புமுனையாக அமைந்த காதலன்
தொடர்ந்து சிறிய படங்கள் மட்டுமே வடிவேலுவின் வாசலை தட்டிவந்த நிலையில் இயக்குனர் ஷங்கரின் காதலன் திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பிரபுதேவாவுடன் சேர்ந்து நடித்திருந்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களின் வரவேற்பை அள்ளியது. காதலன் படத்தில் இருந்து வடிவேலுவின் திரை வாழ்க்கை ஏறுமுகமாக அமைந்தது. வரவு எட்டணா செலவு பத்தணா, இளவரசன், சிங்காரவேலன், தேவர் மகன் காத்திருக்க நேரமில்லை, கிழக்கு சீமையிலே, நிலக்குயில், மகாராசன் என வரிசைகட்டி நின்றன அவர் நடித்த படங்கள்.
கவுண்டமனி – செந்தில் – வடிவேலு
தனது திறமையான நடிப்பால் வடிவேலு குறுகிய காலத்திற்குள் புகழ் பெற்றுவிட்டார். அந்த காலகட்டத்தில் அசைக்க முடியாத நகைச்சுவை அரசர்களாக விளங்கி கொண்டிருந்த கவுண்டமனி – செந்தில் செந்தில் இணையுடன் 3-வது நகைச்சுவை நடிகராக வலம் வந்தார் வடிவேலு. அரண்மனைகிளி, காலம் மாறிப்போச்சு, ராசய்யா, முத்து, நந்தவனதேர், காதல் தேசம், சுந்தரபுருஷன், லவ்பேர்ட்ஸ், முதல்வன் போன்ற திரைப்படங்களில் வடிவேலு ஏற்று நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
பார்த்திபனும் வடிவேலும்…
2000-வது ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிக்கொடிக்கட்டு திரைப்படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடையே மாபெரும் கைத்தட்டலை பெற்றுத்தந்தது. 2003-ம் ஆண்டு வெளிவந்த வின்னர் திரைப்படமும் அவருடைய சினிமா வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. கைப்புள்ள என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை நகைச்சுவையின் உச்சத்திற்கு கொண்டு சென்றது எனலாம்.
கதாநாயகனாக…
காமெடியில் பலரை ஓரங்கட்டி உயரத்துக்கு பாய்ந்த வடிவேலுவை இரட்டை வேடம் கொடுத்து கதாநாயகனாக மாற்றினார் அவரது நண்பரும், இயக்குநருமான ஷங்கர். அவரது தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளியான இம்சை அரசன் 23-ம் புலிகேசி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு 2008-ம் ஆண்டு தம்பி ராமையா இயக்கத்தில் இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து மேலும் சிறப்பு பெற்றார் வடிவேலு
-http://eelamnews.co.uk