நான் சாதிக்கு எதிரானவன் ‘என் படத்தில் சாதி ஒழிப்பு கண்டிப்பாக இருக்கும்’ கமல்ஹாசன் பேட்டி

ஆலந்தூர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘மீ டூ’ வில் பிரச்சினை இருந்தால் எடுத்து வைக்கின்றனர். இதில் ஆராய வேண்டியிருந்தால் ஆராயலாம். இந்த பிரச்சினை சினிமா துறையில் மட்டும் என்று சொல்லாதீர்கள். எல்லா துறையிலும் இந்த பிரச்சினைகள் இருக்கிறது. ‘மீ டூ’ வில் வெளிவருவதால் இதுபோன்ற தொந்தரவுகள் இல்லாமல் இருக்கும் என்று உலகளவில் பேசப்படுகிறது.

இதில் எங்கு நியாயம் இருக்கும் என்பதை அறிய இரு தரப்பினரிடமும் கேட்கப்பட வேண்டும். உடனே யாரையும் குற்றம் சாட்டிட முடியாது. எல்லா துறையிலும் இது நடக்கிறது. சினிமா துறையில் நாங்கள் செய்வதை படம் பிடித்து காட்டுவதால் அதிகமாக தெரிகிறது.

என்னுடைய குரு காந்தியும் தான். அவர் கம்யூனிஸ்டு என்றால் நானும் கம்யூனிஸ்டு தான். எனக்கு அதில் அருவருப்பும் கிடையாது.

தேவர் மகன் 2 எனது கடைசி படம் என்று சொல்ல முடியாது. அந்த படத்திற்கு தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கண்டிப்பாக இந்த தலைப்பு இருக்காது. என் படத்தில் சாதி ஒழிப்பு கண்டிப்பாக இருக்கும். எனக்கு சாதி கிடையாது. நான் சாதிக்கு எதிரானவன். ஏன் சாதி பெயரை வைக்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள். மது ஒழிப்பை பற்றி படம் எடுத்தால், முழு கரு குடிக்காரனை மையமாக வைத்து தான் எடுப்பார்கள். எல்லா சாதிக்கும் எதிரான படம். அந்த உட்கருவே அதுதான்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். எனக்கும் மாணவர்களுக்கும் இடையே நடக்கும் உரையாடலை யாரும் தடுக்க முடியாது. தமிழிசை சவுந்தரராஜனின் பதற்றம் என்னவென்று புரிகிறது. அப்படி பதற்றப்பட்டு என்ன செய்யமுடியும். எனக்கும் மாணவர்களுக்கும் இடையே உள்ள பரஸ்பர உரையாடல் அற்புதமான ஒரு மாற்றத்தை கொண்டுவரக்கூடிய உரையாடல்.

தமிழக அமைச்சர்கள் என்னை விமர்சனம் செய்வது முன்னேற்றத்திற்கான அடையாளம். என்னை கவனிக்காமல் விட்டுவிட்டால் தான் தப்பு. என்னை உன்னிப்பாக கவனிக்கின்றனர். அமைச்சர்களின் விமர்சனங்கள் மூலமாக நான் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறேன் என்று தெரிகிறது.

சபரிமலைக்கு நான் போனது கிடையாது. எல்லா இடங்களிலும் பெண்கள் சமம் என்று இருக்கும் போது என்னுடைய கருத்தை கேட்க வேண்டிய அவசியமில்லை. அங்கு செல்ல முடியவில்லை என்றால் இங்குள்ள கோவிலுக்கு செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.

-dailythanthi.com