இலங்கையில் பாரதிராஜாவின் அலப்பறைகள்; பெரும் கோபமடைந்த தமிழர்கள்!

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாரதிராஜா, பாக்கியராஜ் தலைமையிலான சினிமா கலைஞர்களின் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்பட்டு வரும் நிலையில், நேற்று மட்டக்களப்பில் நடந்த நிகழ்ச்சியிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களிற்கு முன்னர் இலங்கைக்கு வந்த இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்கியராஜ், நடிகை நட்சத்திரா உள்ளிட்ட தென்னிந்திய திரைப்பட குழுவினர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஊடகவிலாளர்களை சந்தித்த பாரதிராஜா, மீ ரூ தொடர்பான கேள்வியால் கொதித்து, ஊடகவியலாளர்களை ஒருமையில் பேசி, அநாகரிகமாக நடந்து கொண்டிருந்தார்.

இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் சரச்சையை தோற்றுவித்திருந்தது.

இந்தநிலையில் நேற்று மட்டக்களப்பிற்கு சென்ற பாரதிராஜா குழுவினர் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். அப்போது, மட்டக்களப்பில் பாரதிராஜாவின் கால்களை ஒருவர் கழுவி விடுவதை போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அதுமட்டுமல்லாமல் நேற்று செங்கலடி கூட்டுறவு மண்டபத்தில் நடந்த மட்டக்களப்பு கலைஞர்கள் கௌரவிப்பு விழா தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பரவலாக கிளம்பியுள்ளது.

அகிலன் பவுண்டேசன் அனுசரனையில் இயங்கும் மாற்றுத்திறனாளி சிறார்களின் கலைவிழாவும் நடைபெறும் என அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டிருந்தது.

பெயரளவில் செயல்படும் புதுக்குடியிருப்பு கதிரவன் கலாமன்றத்தின் தலைவர் த.இன்பராசா தமக்கு பிடித்தவர்களையும், கலைஞர்கள் என்ற பெயரில், கலைஞர்களுடன் இணைந்த்து கௌரவித்திருந்தார்.

கலைஞர்கள் கௌரவிப்பு என அவசரஅவசரமாக மேடைக்கு அழைக்கப்பட்டு, பொன்னாடை போர்த்தப்பட்டு, இறக்கி விடப்பட்டனர். கலை, இலக்கியப்பக்கம் தலைவைத்து படுக்காத சிலரும் கலைஞர்கள் என்ற பெயரில் கௌவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் மாற்று திறனாளி சிறார்களின் கலை நிகழ்வுகள் நடைபெறுமென அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. மாற்று திறனாளி சிறார்களும் இதற்கான பயிற்சிகளை பெற்று கலைநிகழ்விற்கு வந்திருந்தனர். எனினும், இரண்டு நடனங்களுடன் கலைநிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டன.

மாற்றுதிறனாளிகளின் கலைநிகழ்வுகளை இரத்து செய்துவிட்டு, செங்கலடி செல்லம் படமாளிகைக்கு, மண்டபத்தில் இருந்த பார்வையாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர். பாராதிராஜாவால் தயாரிக்கப்படும் ஓம் திரைப்படத்தின் ரெய்லர் காட்சிகளை விளம்பரப்படுத்தவே மண்டபத்தில் இருந்தவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

கலைநிகழ்வுகளிற்காக தயாராகி வந்த மாற்று திறனாளி சிறார்களை புறக்கணிக்கும் விதமான செயற்பாடு என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

-athirvu.in