பெங்களூர்: நடிகை ஸ்ருதி ஹரிஹரனின் பாலியல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள நடிகர் அர்ஜுன் இந்த விஷயத்தை சும்மா விடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பின்போது தன்னிடம் அர்ஜுன் நெருக்கம் காட்டியதாக ஸ்ருதி ஹரிஹரன் சமீபத்தில் குற்றச்சாட்டு சுமத்தி இருந்தார்.
இதையடுத்து கோபமடைந்த அர்ஜுன், ஸ்ருதிக்கு எதிராக பெங்களூர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே கர்நாடக திரைப்பட வர்த்தக சபை சார்பில் இன்று அர்ஜுனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அர்ஜுன் பேட்டி
விசாரணைக்கு பிறகு, இருவரும் சமரசம் செய்து கொள்ளுமாறு, அம்பரீஷ் உள்ளிட்ட மூத்த நடிகர்கள், அர்ஜுனிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இதற்கு அவர் சம்மதிக்கவில்லை. கர்நாடக வர்த்தக சபை வளாகத்தில் நிருபர்களிடம் அர்ஜுன் பிரஸ் மீட் செய்தார். அப்போது கூறியதாவது: எனது தந்தை காலத்திலிருந்து 35 வருடங்களுக்கு மேலாக, கர்நாடக வர்த்தக சபையினரிடம், எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. எனவே அவர்கள் விசாரணைக்கு நான் ஒத்துழைத்தேன்.
ரசிகர்களின் மனது புண்பட்டுள்ளது
திரைப்படத்துறை சுமூகமாக இருக்க வேண்டும் என்பதே பெரியவர்களின் ஆசையாக இருக்கும். அதை புரிந்து கொள்கிறேன். ஆனால் எனக்கு ஏற்பட்ட காயம் எனக்கு மட்டுமானது கிடையாது. எனக்கு மட்டுமானதாக இருந்திருந்தால் இதை எளிதாக கடந்து இருப்பேன். ஆனால் எனது குடும்பத்தினருக்கு, எனது ரசிகர்களுக்கு மனது புண்பட்டுள்ளது. வெறும் கர்நாடக ரசிகர்களுக்கு மட்டும் கிடையாது, தமிழகம், ஆந்திரா, கேரளா என அனைத்து பகுதிகளில் உள்ள எனது ரசிகர்களுக்கும் மனதில் காயம் ஏற்பட்டுள்ளது. இம்மாநிலங்கள் அனைத்திலும் எனது இமேஜை சீர்குலைக்க நடந்த முயற்சி இது.
சமரசம் இல்லை
வருங்காலத்தில் என்னை எதற்காக குறி வைத்தார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் உறுதியாக தெரியவரும். அதுவரை காத்திருங்கள். நான் இந்த விஷயத்தில் சமரசமாக போக தயாராக இல்லை. திரைப்பட வர்த்தக சபையின் ஒவ்வொருவரின் காலில் விழுந்து வேண்டுமானாலும் கேட்டுக்கொள்கிறேன், நான் சமரசமாக போக போவதில்லை.
தவறு செய்தோருக்கு தண்டனை
ஏனெனில், மனதின் வலி அப்படிப்பட்டது. மேலும், இந்த விஷயம் ஒரு முன்னுதாரணமாக மாற வேண்டும். எந்த ஒரு அப்பாவியும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி விடக்கூடாது. நான் பொறுத்துக் கொள்கிறேன், ஆனால் தாங்கிக்கொள்ள முடியாத எத்தனையோ பேர் இருப்பார்கள். அவர்களையும் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக நான் நீதிமன்றத்திற்கு சென்று உள்ளேன். நான் தப்பு செய்து இருந்தால் எனக்கு தண்டனை கிடைக்கட்டும். வேறு யாராவது செய்திருந்தால் அவர்களுக்கு தண்டனை கிடைக்கட்டும். மொத்தத்தில் சமரசமாக போக போவதில்லை. குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும். இவ்வாறு அர்ஜுன் தெரிவித்தார்.