சர்கார் கதை திருட்டு.. ஏஆர் முருகதாசை இயக்குநர் சங்கத்தில் இருந்து நீக்க வலுக்கும் கோரிக்கை

சென்னை: ஏஆர்.முருகதாசை இயக்குநர் சங்கத்திலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள, சர்கார் திரைப்படத்தின் கதை, வருண் என்பவருக்கு சொந்தமானது என்று அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, இயக்குநரும் எழுத்தாளர்கள் சங்கத் தலைவருமான கே.பாக்யராஜிடம் புகார் அளித்தார் வருண். இதையடுத்து இந்த வழக்கு நீதிமன்றத்திற்கும் சென்றது. அதில், கதையை திருடியதை முருகதாஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.

கத்தி படம்

இதுகுறித்து வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: ‘சர்கார்’ படத்தின் கதை, வருண் என்னும் குறும்பட இயக்குநருடையது தான் என்பதை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு முன்பு ‘கத்தி’ திரைப்படம் கூட தன்னுடையது என்று இயக்குநர் கோபி நயினார் உரிமை கோரியிருந்தார். ஆனால் வழக்கம் போல முருகதாஸ் மறுத்தார்.

இயக்குநர்கள் கனவு

இன்று சர்கார் படத்தின் கதையை திருடியிருப்பதை அவரே ஒப்புக்கொண்டிருப்பதன் மூலம், கத்தி படத்தின் கதையும் அப்படிதான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கிராமங்களிலிருந்து சிரமப்பட்டு சினிமா கனவுகளோடு வந்திறங்கும் இளம் இயக்குநர்கள் தங்களது கதைகளை பல இயக்குநர்களிடம் சொல்லுகிறார்கள்.

பெரிய இயக்குநர்கள் சதி

கதையை கேட்ட பெரிய இயக்குநர்கள், ஒரிஜினலான இயக்குநர்களை ஓரங்கட்டி விட்டு, இவர்களே கதை எழுதியது போல இயக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இது அறிவுத் திருட்டு மட்டுமல்ல, மூளைச்சுரண்டலும் ஆகும். நேர்மையற்ற மனிதராக இன்று முருகதாஸ் அம்பலபட்டு நிற்கிறார்.

உழைப்பு திருட்டு

அவரது அத்தனை படங்களுக்கும் பின்னால் எத்தனை எத்தனை இயக்குநர்களின் உழைப்பு இருக்கிறதோ, அத்தனை உழைப்பையும் அறிவுத் திறமையையும் புதைத்து விட்டு தான் இயக்குநராக நிற்கிறார் முருகதாஸ். இந்த மாதிரி திருட்டு இயக்குநர்களை திரை உலகம் அப்புறப்படுத்த வேண்டும். இயக்குநர் சங்கத்திலிருந்து முதலில் முருகதாசை நீக்க வேண்டும். அப்போது தான் கதையை திருடுபவர்களுக்கு ஒரு அச்சம் வரும். நல்ல திறமையான இயக்குநர்கள் வெற்றி பெறுவார்கள்! இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் வன்னி அரசு.

tamil.oneindia.com