எக்கோ நிறுவனத்திற்கு எதிராக இளையராஜா தொடுத்த வழக்கு ரத்து

எக்கோ நிறுவனத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா அளித்த புகாரில் பதிவான வழக்கு 7 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

இசை அமைப்பாளர் இளையராஜா போலீஸ் கமிஷனரை சந்தித்து எக்கோ ரிக்கார்டிங் நிறுவனம் மீது புகார் அளித்தார். அதில் தனது பாடல்கள் அனைத்தையும் சி.டி.யாக வெளியிடும் உரிமையை எக்கோ ரிக்கார்டிங் நிறுவனத்துக்கு கொடுத்ததாகவும் இது சம்பந்தமாக ஒப்பந்தமும் போடப்பட்டதாகவும் கூறி இருந்தார்.

குறிப்பிட்ட தொகையை பங்கு தொகையாக தர அந்த நிறுவனம் ஒப்புக்கொண்ட தாகவும் ஆனால் ஒப்பந்தபடி கடந்த 20 வருடமாக பங்கு தொகை எதுவும் தரப்படவில்லை என்றும் பாடல் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து மோசடி செய்துவிட்டது என்றும் புகார் மனுவில் கூறி இருந்தார். இந்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.   இதையடுத்து எக்கோ நிறுவனத்திடமிருந்து 20 ஆயிரம் சிடிக்களை பறிமுதல் செய்தனர்.
இளையராஜா அளித்த புகாரில் பதிவான வழக்குகளை ரத்து செய்யக்கோரி எக்கோ நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கு விசாரணையை அடுத்து நீதிபதி முரளிதரன் இன்று தீர்ப்பளித்துள்ளார்.  காப்புரிமை தொடர்பான விவகாரம் என்பதால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது என்று நீதிபதி முரளிதரன் உத்தரவில் தெரிவித்தார்.  மேலும்,  எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

-nakkheeran.in