சென்னை: தமிழ் சினிமா உலகில் ஹாலிவுட் படங்களைப் பார்த்து காப்பியடித்து படங்களை இயக்கும் இயக்குனர்கள் ஒரு பக்கம். இதற்கு முன் வந்த படங்களில் இருந்து ஆங்காங்கே உருவி, ஒட்டி, உருமாற்றி, படமாக்குவோர் இன்னொரு பக்கம். இப்போது மூன்றாவதாக ஒரு கோஷ்டி. அது தான். அப்பாவி உதவி இயக்குனர்களின் கதைகளைத் திருடி படங்களை எடுப்பது.
தீனா முதல் சர்கார் வரை
‘தீனா’ படத்தில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது ‘சர்கார்’ படம் வரை பெரிய ஹீரோக்களின் படங்களை மட்டுமே இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், தொடர்ந்து கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் வேறு எந்த இயக்குனரும் தொடர்ச்சியாக இப்படி சிக்கியது இல்லை.
ஏ.ஆர்.முருகதாஸ் கதைத் திருட்டு என உதவி இயக்குனர்களின் வாட்ஸ்அப் குழுக்களில் சில தகவல்கள் சில நாட்களாக பரவி வருகின்றன. ‘தீனா’, நித்யகுமார் என்ற உதவி இயக்குனரின் கதை, ‘ரமணா’, நந்தகுமார் என்பவரின் கதை, ‘கஜினி’, ஹாலிவுட் படமான ‘மொமென்டோ’வின் காப்பி, ‘துப்பாக்கி’, ‘கணிதன்’ படத்தை இயக்கிய சந்தோஷ், மற்றும் உதவி இயக்குனர்களான வாசு, பிரேம்குமார் ஆகியோரின் கதை, ‘கத்தி’, ‘அறம்’ படத்தை இயக்கிய கோபி நயினார், ‘தாகபூமி’ என்ற குறும்படத்தை இயக்கிய அன்பு ராஜசேகர் ஆகியோரின் கதை, ‘ஸ்பைடர்’, கதை, தெலுங்கு உதவி இயக்குனரான சாம்சன் என்பவரது கதை, ‘சர்கார்’, வருண் ராஜேந்திரனின் கதை என இதுவரை முருகதாஸ் இயக்கிய படங்களின் கதைகள் அனைத்துமே திருடப்பட்டவை என்கிறது அந்த வாட்ஸ்அப் தகவல்.
பிரமாண்ட பிரச்னையான கத்தி, சர்கார்
இவற்றில் ‘தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி’ வெளியான காலத்தில் சமூக வலைதளங்கள் அதிகம் இல்லாததால் கதைத் திருட்டு விவகாரம், பரபரப்பை ஏற்படுத்தவில்லை. இப்போது ‘கத்தி, சர்கார்’ பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
‘கத்தி’ விவகாரத்தில் ‘தாகபூமி’ குறும்படத்தை இயக்கிய அன்பு ராஜசேகரைவிட கோபி நயினார் பல பேட்டிகளைக் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். வழக்கும் தொடர்ந்தார். இன்று வரை வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளது. ஏற்கெனவே, கோபி நயினார் முதலில் எடுத்த ‘கருப்பர் நகரம்’ என்ற படத்தின் காப்பி தான் பா.ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படக்கதை என்ற குற்றச்சாட்டு உள்ளது தனிக் கதை.
‘சர்கார்’ கதை பற்றிய சர்ச்சை அதிகமானதும் தான் ‘தாகபூமி’ குறும்படத்தை இயக்கிய அன்பு ராஜசேகர் பேசப்பட்டார். தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம், உண்ணாவிரதம், மீடியாக்களில் பேட்டி என அவர் மீண்டும் ‘கத்தி’ பட சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளார். ‘கத்தி’ படத்தின் கதைக்கு அன்பு, கோபி என இருவர் உரிமை கோருகிறீர்களே என அன்புவிடம் கேட்டால் ஒருவன் இரண்டு வீட்டில் இருந்து திருடக் கூடாதா என பதிலளிக்கிறார்.
பாக்யராஜ் ராஜினாமா
‘சர்கார்’ விவகாரத்தில் என்ன நடந்தது என்பது வெளிச்சத்திற்கு வராமலே இருக்கிறது. வருண் ராஜேந்திரன், திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் எந்த அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல் அதன் தலைவர் பாக்யராஜ் நியாயமாக நடந்து கொண்டார் என்று உதவி இயக்குனர்கள் பாராட்டுகிறார்கள். அது பாக்யராஜ் ராஜினாமா வரை சென்று ஒரு பேரசியலில் முடிந்திருக்கிறது.
வருணுக்கு 30 லட்சம் வழங்கப்பட்டது என தகவல் பரவி வருகிறது. எழுத்தாளர் சங்கத்தில் சுமூகமான உடன்பாட்டுக்கு வர மறுத்த ஏஆர்.முருகதாஸ், நீதிமன்றத்தில் சமரச உடன்பாடு பற்றி தெரிவித்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளம்பும் கதை திருட்டு புகார்கள்
இதனிடையே சர்கார் மூலம் உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரனுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பதால் பல உதவி இயக்குநர்கள், இதுபோன்ற கதை திருட்டு பிரச்னைகளை வெளிக் கொண்டு வரத் தொடங்கி உள்ளனனர்.
96 சர்ச்சை
சமீபத்தில் விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படம் வெற்றி பெற்றது. இதை ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கி இருந்தார். இந்த கதை என்னுடைய 92 படத்தின் கதை என மற்றொரு உதவி இயக்குநர் சுரேஷ் என்பவர் புகார் அளிக்க, அது தொடர்பான பிரச்னை ஓடிக் கொண்டு இருக்கிறது.
சுப்ரமணியபுரம் சர்ச்சை
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான சுப்பிரமணியபுரம், என்னுடையது என வெற்றி மகாலிங்கம் என்ற இயக்குனர் உரிமை கொண்டாடி உள்ளார். அவருடைய முகப்புத்தகத்தில் சுப்ரமணியபுரம் கதையை ‘சந்துரு’ என்ற பெயரில் படமாக எடுக்க முயன்றதை போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். இவரைப்போலவே வேறு சிலரும் வெற்றி பெற்ற பல படங்களின் கதைகள் மீது உரிமை கொண்டாடி பிரச்சனைகளை தொடங்கியிருக்கிறார்கள்.
முன்னாள் இயக்குனர் ஒருவர் கூறுகையில், ”தமிழில் எப்போதும் இல்லாத வகையில் இப்போது தான் அதிக அளவு, கதைத் திருட்டு புகார்கள் வருகின்றன. இது இயக்குனர்களின் படைப்பாற்றல் குறைந்து வருவதையும், எதையாவது செய்து வெற்றி பெற வேண்டும்” என்ற அவர்களது குறுகிய நோக்கத்தையுமே காட்டுகிறது” என்றார்.
-dinamalar.com