அழகு நடிகைகளை வாட்டும் ஆபத்தான கவலைகள்

சினிமா நட்சத்திரங்கள் என்றதும் அவர்களின் அழகு தோற்றமும், நேர்த்தியான ஆடை அலங்காரமும், அவர்களின் அற்புத நடிப்பும்தான் ரசிகர்களின் நினைவுக்கு வரும். அவர்களின் அழகு மேனிக்கு பின்னால் ஆரோக்கிய குறைபாட்டு பிரச்சினைகளும் நிறையவே இருக்கத்தான் செய்கிறது. திரையில் அழகாகவும், ஆரோக்கியமாகவும் தென்படும் நட்சத்திரங்களில் சிலர் நிஜ வாழ்க்கையில் நோய் களுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

புற்றுநோய் இவர்களை பாடாய்படுத்துகிறது. சோனாலி பிந்த்ரே பல வெற்றிப்படங்களில் அழகு ராணியாக வலம் வந்தவர். தற்போது அமெரிக்காவில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். இந்தி திரை உலகில் வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த நடிகர் இர்பான்கான் திடீரென்று புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானார். நடிப்பு, இயக்கம் என பன்முகத்திறமை கொண்ட அவர் தன் திறமைகளையும், வேலைகளையும் கிடப்பில் போட்டுவிட்டு வெளிநாட்டுக்கு சிகிச்சை பெற சென்றிருக்கிறார். அவரை போன்று ‘பர்பி’ என்ற வெற்றிப்படத்தை இயக்கிய அனுராக் பசுவும் புற்றுநோயின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்.

சோனாலி பிந்த்ரேவை போலவே நடிகை லிசாரேயும் புற்றுநோயோடு போராடி வருகிறார். ஆரம்பத்தில் ரகசிய சிகிச்சை பெற்று வந்தார். தான் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பது வெளியே தெரிந்தால் சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடுமோ என்று அஞ்சினார். தனக்கான இடத்தை பிடிக்க பெரும் போராட்டத்தை எதிர்கொண்டிருந்ததால் கிடைத்த வாய்ப்புகளை இழக்க அவர் விரும்பவில்லை. தனக்கு புற்றுநோய் இருப்பதை மறைத்து இயல்பாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டார். அதனால் நோயின் தாக்கம் தீவிரமாகிவிட்டது. பின்பு வேறுவழியின்றி தான் புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதை ஒப்புக்கொண்டார். அதன் பிறகு அவருடைய நடிப்பு வேகமிழந்தது. நோயால் ஏற்பட்ட பாதிப்பை விட சுற்றி இருக்கும் சூழ்நிலைகள் பாதகமாக மாறி மன அழுத்தத்திற்கு ஆளாக வைத்துவிட்டது. ‘‘எதிர்பார்த்த ஒன்று நடக்கும்போது, இடையே எதிர்பாராத ஒன்று வந்து தடுத்துவிடுகிறது. அதை எப்படி கடந்து வரப்போகிறோம் என்பதே தற் போதைய சிந்தனையாக உள்ளது’’ என்கிறார், லிசாரே.

இந்தி மட்டுமின்றி தமிழிலும் கலக்கிய மனிஷா கொய்ராலாவும் புற்றுநோய் பாதிப்பால் பெரும் வேதனைகளை அனுபவித்துவிட்டார். திரையில் அழகு தேவதையாக வலம் வந்தவரை புற்றுநோய் அகோரமாக்கி விட்டது. முகப் பொலிவை மட்டுமல்ல தனது அழகிய கூந்தலையும் இழந்து பரிதாபமான தோற்றத்தை பெற்றார். மீண்டும் ஒருமுறை பழைய அழகை பெற்றுவிட மாட்டேனா என்று ஏங்கினார். தன்னை அந்த கோலத்தில் மற்றவர்கள் பார்ப்பதை அவரும் விரும்பவில்லை. நெருங்கிய நண்பர்கள் உள்பட எவரையும் நேரில் சந்திப்பதை தவிர்த்துவிட்டார். தற்போது உடல்நிலை தேறி வருகிறார். வெகுகாலம் வெளிநாட்டில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று திரும்பி வந்தவரை திரை உலகம் கைவிடவில்லை. அவரே எதிர்பார்க்காத அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைத்து கொண்டிருக்கிறது. அவர் நடிப்பில் வெளியான ‘டியர் மாயா’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. பின்பு வெளியான சஞ்சு படத்தில் நர்கீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

புற்றுநோய் பாதிப்புக்குள்ளான மற்றொரு முன்னாள் நடிகை மும்தாஜ். ராஜேஷ் கண்ணாவுடன் அதிக படங்களில் நடித்த அவர் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி சிரமப்பட்டார். 54 வயதில்தான் புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது அவருக்கு தெரியவந்தது. மும்தாஜ் என்றாலே வெற்றி நாயகி என்று பெயர் பெற்றவர். ஆனால் நிஜ வாழ்க்கையில் புற்றுநோயால் வீழ்த்தப்பட்டார்.

இந்தி திரை உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ராஜேஷ் கண்ணாவையும் புற்றுநோய் விட்டுவைக்கவில்லை. ஆனந்த் என்ற படத்தில் அவர் புற்றுநோயாளியாகவே நடித்தார். பார்ப்பவர்களின் நெஞ்சை உருக்கும் அந்த காட்சி எளிதில் எவருடைய நினைவையும் விட்டு நீங்காது. உண்மையிலேயே அவரை புற்றுநோய் ஆட்கொண்டுவிட்டது என்ற விஷயத்தை ரசிகர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவருடைய கடைசி படமான ‘ரியாசத்’தில் அவருக்கு ஆரோக்கியமான கதாபாத்திரம் ஆனால், நிஜத்தில் அவர் நோயாளியாகவே காட்சியளித்தார். நோயின் தீவிரம் அப்பட்டமாக வெளியே தெரிந்தது. 18 வருட கடும் போராட்டத்திற்கு பிறகு உலகைவிட்டுப் பிரிந்தார். அவர் தயாரித்த சில படங்கள் பெட்டியிலே முடங்கிக்கிடக்கின்றன.

ராஜேஷ் கண்ணாவிற்கு அடுத்த நிலையில் இருந்த வினோத் கண்ணாவும் புற்றுநோய்க்கு பலியானார். அவர் நடித்த அமர் அக்பர் ஆண்டனி, பர்வாரிஷ் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சுனில் தத் மனைவி நர்கீஸும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுதான் உயிரிழந்தார். அவர் நடித்த ‘‘மதர் இண்டியா’’ படம் நீண்ட நாட்கள் ஓடி வெற்றிவாகை சூடியது. மனைவியின் மறைவை தாங்க முடியாத சுனில் தத் தன்னுடைய சொத்துகளில் பெரும் பகுதியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு எழுதிவைத்து விட்டார். நடிகை நூதனும் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவருடைய மகன் மோஹநிஷ் பஹல் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

அடிக்கடி மறந்து போவது, வித்தியாசமான செயல்களை செய்வது, குழப்பத்தில் ஆழ்ந்து விடுவது போன்ற பிரச்சினைகளில் நடிகர் கோவிந்தா சிக்கி யிருக்கிறார். அதனால் அவரும் பல வாய்ப்புகளை இழந்துவிட்டார். நடிகைகள் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, சோனம் கபூர் போன்ற முன்னணி நடிகைகள் பலரும் நிஜத்தில் சில உடல் உபாதைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். தீபிகா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக கூறுகிறார். நடிகர் அமிதாபச்சனுக்கு இல்லாத உடல் உபாதைகளே இல்லை. ஆனால் அதையெல்லாம் ஜெயித்து இன்றும் நம்மிடையே வெற்றி நாயகனாக வலம் வருகிறார். ‘கூலி’ படத்தில் ஏற்பட்ட பலத்த காயம் அவரை மரணப் படுக்கை வரை கொண்டு சென்றது. அவர் மீண்டு வந்தது தெய்வச்செயல் என்றே ரசிகர்கள் கருதுகிறார்கள்.

சல்மான்கான் திடீரென்று டென்ஷனுக்கு உள்ளாகும் சுபாவம் கொண்டவர். அவருக்கு ஏற்பட்ட ஒருவித விநோத வியாதி தான் அதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதற்காக உட்கொள்ளப்படும் மருந்து, மாத்திரைகள் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் கூறுகிறார்கள். ரித்திக் ரோஷன், சிறுவயதி லிருந்தே முதுகுதண்டு வலியால் பாதிக்கப்பட்டு வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வேகமாக ஓடக்கூடாது என்று அறிவுறுத்தினார்கள். ஆனால் அவரோ இன்று ஆக்‌ஷன் ஹீரோவாகவும் நாட்டிய நடிகராகவும் அசத்திக்கொண்டிருக்கிறார்.

-dailythanthi.com