ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும்: ரஜினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள ஏழு பேரையும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை பற்றி தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விவகாரம் குறித்து ரஜினிக்கு ஒன்றுமே தெரியாது என்ற மாய தோற்றத்தை சிலர் ஏற்படுத்துகின்றனர். என்னிடம் கேட்ட கேள்வியில் தெளிவு இல்லை. ராஜீவ் காந்தி வழக்கில் 7 பேர் என்று கேட்டு இருந்தால் நான் கூறி இருப்பேன். மொட்டையாக அந்த 7 பேர் என கேட்டதால் எந்த 7 பேர் என கேட்டேன். ராஜீவ் வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை பற்றி தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை. மனிதாபிமான அடிப்படையில் அந்த 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.

பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் கருதினால், அவர்களுக்கு அது ஆபத்தான கட்சி தானே. ஒருவரை 10 பேர் எதிர்க்கிறார்கள் என்றால் யார் பலசாலி. பாஜக ஆபத்தான கட்சியா என்பதை நான் இப்போது கூற முடியாது, அதை மக்கள் முடிவு செய்யவேண்டும். நான் இன்னும் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை, முழுமையாக இறங்கியதும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்வேன். அமைச்சர்கள் நாகரீகமாக கருத்து தெரிவிப்பது நல்லது. இலவசங்கள் 100 சதவீதம் தேவை, அது ஓட்டுக்காக இருக்க கூடாது.” என்றுள்ளார்.

-4tamilmedia.com