ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டாவின் டாக்சிவாலா படம் வரும் 17ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் அதை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டுவிட்டது.
ராகுல் சங்கிர்தியான் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள டாக்சிவாலா தெலுங்கு படம் வரும் 17ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அந்த படத்தின் ஹெச்.டி. பிரிண்ட்டை தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.
படம் தியேட்டர்களில் ரிலீஸாகும் முன்பே ஆன்லைனில் கசிந்தது படக்குழுவை பேரதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
டாக்சிவாலா
தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் டாக்சிவாலா படம் வெளியிடப்பட்டிருப்பதை பார்த்து விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அந்த தளத்தில் இருந்து படத்தை நீக்க படக்குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.
விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா நடித்த கீத கோவிந்தம் படத்தோடு சேர்த்து டாக்சிவாலா படமும் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆன்லைனில் கசிந்தது. ஆன்லைனில் கசிந்தது வி.எஃப்.எக்ஸ். இல்லாத காட்சிகள். ஆன்லைனில் கசிந்த படத்தை யாரும் பார்க்க வேண்டாம் என்று விஜய் தேவரகொண்டா தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.
வசூல்
டாக்சிவாலா நல்ல படம். அது வசூல் சாதனைகளை முறியடிக்காமல் போகலாம். ஆனால் நிச்சயம் ரசிகர்களை திருப்திபடுத்தும். இந்த படத்தில் பலரின் உழைப்பு அடங்கியுள்ளது. அதனால் தயவு செய்து தியேட்டர்களுக்கு சென்று படம் பாருங்கள் என்று விஜய் தேவரகொண்டா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
படங்கள்
ஆன்லைனில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியாவது பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. அது பற்றி அதிகம் பேசினால் மக்கள் அந்த லிங்க்கை தேடிக் கண்டுபிடிக்க அதிகம் முயற்சி செய்வார்கள் என்கிறார் விஜய். புதுப்படங்கள் ரிலீஸான அன்றே வெளியிட்டு வந்த நிலை மாறி ரிலீஸுக்கு முன்பே கசியவிடுகிறது தமிழ் ராக்கர்ஸ்.