நான் ஏன் 13 ஆண்டுகளாக அமைதியாக இருந்தேன்?: சின்மயி விளக்கம்

சென்னை: வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்து 13 ஆண்டுகள் கழித்து பேசியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி.

கவிப்பேரசசு வைரமுத்து தனக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்ததாக அண்மையில் பாடகி சின்மயி தெரிவித்தார். மேலும் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்த சில பெண்களுக்கும் அவர் ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில் டப்பிங் யூனியன் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சின்மயி நீக்கப்பட்டுள்ளார்.

சின்மயி

வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறும் சின்மயி 13 ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்தாரா என்று பலரும் கேட்டனர். மேலும் தனது திருமணத்திற்கு வைரமுத்துவை அழைத்து ஆசி வாங்கியது ஏன் என்றும் கேள்வி எழுந்தது. இந்நிலையில் அதற்கான விளக்கத்தை தற்போது அளித்துள்ளார் சின்மயி.

விளக்கம்

ஒரு பெண் பேசினால் என்ன நடக்கும் என்பதற்கு இது தான் ஆதாரம் என்பதை 13 ஆண்டுகளுக்கு முன்பே ஏன் பேசவில்லை என்று கேட்கும் அனைத்து ஆண்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பவே இந்த கதி. சிஸ்டம், சமூகம் மற்றும் அனைவரும் அப்போது அப்படியே உதவி செய்திருப்பார்கள் என்று ட்வீட்டியுள்ளார் சின்மயி.

பழிவாங்கும் நடவடிக்கை

பாலியல் புகார் தெரிவித்த ஒரே காரணத்திற்காக டப்பிங் யூனியனில் இருந்து தான் நீக்கப்பட்டதாக கூறுகிறார் சின்மயி. இது பழிவாங்கும் நடவடிக்கை என்று அவர் கருதுகிறார். அப்படி என்றால் அவர் வழியில் புகார் தெரிவித்த பிறருக்கும் இதே கதி தானா என்ற கேள்வி எழுகிறது.

ராதாரவி

சம்மதம் இல்லாமல் இந்த விஷயங்கள் எல்லாம் நடக்காது. அது ஏன் சம்பவம் நடந்து 13 ஆண்டுகள் கழித்து புகார் தெரிவிக்க வேண்டும் என்று டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி கேள்வி எழுப்பியிருந்தார். ராதாரவி மீது பாலியல் புகார் தெரிவித்த 2 பெண்களுக்கு சின்மயி ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.filmibeat.com