விளம்பரத்திற்காக அல்ல.. மற்றவர்களுக்கும் உதவி செய்ய எண்ணம் வரவேண்டும் என்பதற்காக.. பாரதிராஜா

தஞ்சை: அனைத்து கட்சிகளும் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பேரிடர் மாநிலமாக அறிவிக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா மற்றும் அமீர், வெற்றிமாறன் ஆகியோர் நிவாரணங்கள் வழங்கி உதவி செய்து வந்தனர். இந்த நிலையில் தஞ்சையில் மூன்று பேருமே இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.

பாதிக்கப்பட்ட மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். புயல் நேரத்தில் பாதிப்பு இருப்பதால் நீட் தேர்வு விண்ணப்பிக்கும், கடைசி தேதியை நீட்டிக்க கால அவகாசம் வேண்டும். தமிழக அரசு முன்னெச்சரிக்கை ஏற்பாடு பாராட்டதக்கது. ஆனால் இயற்கையை மீறி எதுவும் செய்ய முடியாது. கலை இலக்கியம் பேரவை சார்பில் தற்போது நிவாரணம் கொடுத்து வருகிறோம். நாங்கள் விளம்பரத்திற்கு இதை செய்யவில்லை மற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டிய எண்ணம் வரும்.

இயக்குனர் அமீர் கூறியதாவது: தமிழகஅரசு டெல்டா மாவட்ட விவசாயிகளின் வங்கி கடனை ரத்து செய்ய வேண்டும். அரசுதான் உதவ வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம், இளைஞர்கள் களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும். எந்த கட்சியும் பாகுபாடு இல்லாமல் அனைவரும் டெல்டாவை காப்பாற்ற வேண்டும். அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து பேரிடர் மாவட்டமாக அறிவிக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும்.

தஞ்சை அடுத்த சோழன் குடிகாடு கிராமத்தில் இறந்து போன தென்னை விவசாயி சுந்தர்ராஜன், சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இறந்து போகவில்லை. அவர் குடும்பத்தில் இருக்கக்கூடிய பிள்ளைகள் நல்ல நிலையில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய தென்னந்தோப்பு அழிந்து விட்டதே என்ற மனநிலையிலே விஷமருந்தி இறந்திருக்கிறார் என தெரிவித்தார்.

-tamil.oneindia.com