தமிழ் ராக்கர்ஸை அரசு நினைத்தாலும் ஒழிக்க முடியாது.. அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிர்ச்சி!

சென்னை: தமிழ் ராக்கர்ஸ் பக்கத்தை தமிழக அரசு மட்டும் தனியாளாக முடக்க முடியாது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழ் ராக்கர்ஸ்தான் தற்போது கோலிவுட்டின் மிகப்பெரிய பிரச்சனையாகி உள்ளது. எந்த புதுப்படம் வந்தாலும் வந்த முதல் நாளே அதன் திருட்டு காப்பி இதில் வெளியாகிவிடுகிறது. எவ்வளவு பெரிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் உடனே படம் வெளியாகி அதிர்ச்சி அளிக்கிறது.

சர்க்கார், 2.0 உள்ளிட்ட படங்கள் கூட இதில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் ஒவ்வொரு முறை உத்தரவு பிறப்பித்தும், இதன் பக்கம் ஒவ்வொரு முறை மாற்றப்பட்டும் கூட, தமிழ் ராக்கர்ஸ் குழுவை பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் சென்னையில் பேட்டியளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தமிழ் ராக்கர்ஸ் குறித்து விளக்கம் அளித்தார்.

அதில், தமிழ் திரையுலகில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை நாங்கள் மட்டும் தனியாக ஒழிக்க முடியாது. தமிழக அரசால் இதில் தனியாக நடவடிக்கை எடுக்க முடியாது.

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து இதில் களமிறங்கினால் மட்டுமே முடியும். அப்போதுதான் தமிழ் ராக்கர்ஸ் பக்கத்தை மொத்தமாக முடக்க முடியும்.

தமிழக அரசு திருட்டு விசிடிக்கு எதிராக தனிச்சட்டம் ஏற்றியுள்ளது. இந்த சட்டம் சிறப்பாக செயலாற்றி வருகிறது. இதனால் தற்போது திருட்டு விசிடி வெகுவாக குறைந்துள்ளது.

அதேபோல், தமிழ் ராக்கர்ஸ் பக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு சினிமா துறையும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றுள்ளார்.

tamil.oneindia.com