தி.நகரில் பெருமுதலாளிகள் நடத்தும் துணிக்கடைகளில் வேலைசெய்வோரின் துயரத்தை படமாகிக்க இயக்குனர் வசந்தபாலன், சென்னை கண்ணகி நகர் மக்களின் கதையை ஜெயில் படத்தின் மூலம் வெளிகொண்டுவருகிறார்.
சென்னை நகரை அழகுபடுத்துகிறோம், வளர்ந்த நகரமாக மாற்றுகிறோம் என்ற பேரில், சென்னையில் வாழ்ந்த பூர்வகுடிகள் எவ்வாறு வெளியில் துரத்தப்படுகிறார்கள் என்பது கதைக்களம். இடம்பெயர்ந்த மக்களோடு சந்திப்பு, நகரமயமாக்கல் தொடர்பான ஆய்வுகளை படிப்பது என பல மாதங்களை செலவிட்டு கதையை வடிவமைத்திருக்கிறார் வசந்தபாலன்.
ஜெயில் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளுக்கு மத்தியில் படத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார்.
உலகளவில் பல நாடுகளில் பழங்குடிகள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, சொந்த நாடுகளில் அகதிகளாக வாழும் நிலைக்குத் தள்ளப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறும் வசந்தபாலன்,”சென்னை நகரத்தில் இருந்து எளிய மக்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள், அவர்களுக்கு அளிக்கப்பட்ட குடியிருப்புகள் எப்படி இருந்தன, அந்த மக்களின் வாழ்க்கை எப்படி மாறியது என விளக்குகிறது ஜெயில் படம். ஒரு மனிதன் அவனது வாழ்விடத்தில் இருந்து துரத்தப்படுத்தும் துயரத்தைவிடக் கொடியது எதுவுமில்லை. எட்டுவழிச் சாலை, மீத்தேன் திட்டம் என தமிழகத்தில் மக்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றும் முயற்சிகள் நடக்கும் சமயத்தில் இந்த படத்தை கொண்டுவருகிறேன் என்பது மனநிறைவு அளிக்கிறது,” என்கிறார்.
ஏழை மக்களிடம் நிறைந்திருக்கும் மகிழ்ச்சி
ஜி.வி பிரகாஷ், அபர்ணதி படத்தில் வெகு இயல்பாக நடித்துள்ளனர் என்று கூறும் வசந்தபாலன், கண்ணகி நகரில் உள்ள சூழலை அவர்கள் உள்வாங்கியுள்ளதாக கூறினார். ”ஏழைமக்களின் வசிப்பிடமாகிப்போன கண்ணகி நகருக்கு சென்ற புதிதில் நடிகர்களுக்கு வியப்பாக இருந்திருக்கும். ஆனால் அது ஒரு கடல் போல. அங்குள்ள மக்கள், அவர்களின் வாழ்க்கை, மகிழ்ச்சியான தருணங்கள், அன்றாட வாழ்க்கையை நடத்த அவர்கள் படும்பாட்டை பார்த்தபின்னர், நடிகர்கள் இயல்பாகிப்போனார்கள். அங்காடித் தெரு படம் துணிக்கடை முதலாளிகள் மனதில் ஏற்படுத்திய தாக்கம் போல, ஜெயில் படம் சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள், தங்களது வாழ்க்கைக்கு உதவும் பூர்வகுடி மக்களின் நிலையைப் பற்றி யோசிக்கவைக்கும். அதற்கு எங்கள்குழுவினர் சிறப்பாக பணியாற்றியுள்ளார்கள்,” என்கிறார்.
இடப்பெயர்வு குறித்த ஆய்வுகளைச் சுட்டிக்காட்டி, இந்தியா முழுவதும் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 2.50லட்சம் மக்கள் வாழ்விடங்களில் இருந்து அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் தேவைகளுக்காக இடமாற்றப்பட்டுள்ளார்கள் என்றும் கூறும் வசந்தபாலன், அந்த மக்களின் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பாதுகாப்பு போன்ற எதையும் உறுதிசெய்யாமல் நவீன தீண்டாமையை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றுகிறோம் என்கிறார்.
- சென்னை-சேலம் எட்டு வழிப்பாதையை எதிர்ப்பது ஏன்? பியூஷ் பேட்டி
- எட்டு வழிச்சாலையால் சீன நகருக்குப் பயன்: அரசு அறிக்கையில் வினோதங்கள்
வெயிலோடு விளையாடி பாடல் நினைவிருக்கும். அதில் உள்ள சிறுவர்களின் மகிழ்ச்சியை நகரத்தில் உள்ள பலரால் கற்பனை கூட செய்யமுடியாது. அதுபோல, இந்த ஏழை மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏராளமாக உள்ளன,”என விவரித்தார்.
ஜெயில் படத்திற்கு உதவிய ஆய்வு பற்றிக்கேட்டபோது, டெல்லியில் உள்ள ‘வசிப்பிடம் மற்றும் நிலஉரிமைகளுக்கான அமைப்பு'(HLRN-Housing and Land Rights Network) நடத்திய ஆராய்ச்சி முடிவுகளை நம்மிடம் பகிர்ந்தார்.
ஒரு மணி நேரத்திற்கு 30 பேர் இடப்பெயர்வு
இந்தியாவின் சென்னை,மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் வெளியேற்றப்பட்ட மக்களின் வசிப்பிடங்களில் உள்ள சிக்கல்களை விரிவாக ஆய்வு செய்தவர் எச்.எல்.ஆர்.என்.அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஷிவானி சௌத்ரி.
”சென்னையில் கண்ணகி நகர், டெல்லியில் சத்விதா கெஹ்வாரா மற்றும் மும்பையில் வாஷி நாக என்ற ஆகிய இடங்களில் நாங்கள் ஆய்வு செய்தோம். பெரும்பாலான மக்கள், அவர்கள் என்ன காரணத்திற்காக வெளியேற வேண்டும் என்பதை அரசாங்கம் சொல்லவில்லை என்கிறார்கள். கடந்தவாரம் சென்னை சிந்தர்த்தரிப்பேட்டையில் வசித்த 700 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர். பரீட்சை சமயத்தில் வெளியேற்றவேண்டாம் என பெற்றோர்கள் அரசோடு போராடுகிறார்கள். புதுஇடத்தில், முறையான பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்ற வசதிகள் உருவாக்கப்படாமல் மக்கள் அகற்றப்படுகிறார்கள் என்று எங்கள் ஆய்வில் தெரியவந்தது,” என்கிறார் ஷிவானி.
உழைக்கும் மக்களை நகரத்தின் மையத்தில் இருந்து வெளியேற்றுவது இந்தியாவின் பல நகரங்களிலும் தொடர்ந்து அரங்கேறிவருகிறது என்று கூறும் ஷிவானி, ”இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரமும் குறைந்தது 30 நபர்கள் வாழ்விடங்களில் இருந்து துரத்தப்படுகிறார்கள் என்பது களஆய்வுகளில் தெரியவந்தது. இந்த எண்ணிக்கை குறைவுதான் . எங்களுக்கு தெரிந்த இடங்களை மட்டுமே நாங்கள் பதிவு செய்திருக்கிறேன். இந்தியா முழுவதும் பல ஊர்களில் மக்களை துரத்துவது நடக்கிறது. இந்த போக்கை நிறுத்தவேண்டும் என சென்னை, மும்பை,டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்திடம் பேசுகிறோம். அதிகாரிகள் எங்களிடம் வாக்குறுதி கொடுத்தாலும், அந்த நகரங்களில் மீண்டும் இடப்பெயர்வு தொடர்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை,” என வலியோடு பேசினார் ஷிவானி.
ஷிவானியின் ஆய்வில் கண்ட புள்ளிவிவரங்களுக்கு பின் உள்ள மனித முகங்களை காட்டும் படமாக ஜெயில் வருவது பாராட்டுக்குரியது என இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் சமூக ஆர்வலர் தேவநேயன் கூறினார்.
- ”விவசாயிகளை விவசாய கூலிகளாக மாற்றுகின்றனர்”
- வாழ்வாதாரம், உறவுகள் அழிந்து 8 வழிச் சாலை எதற்கு? குமுறும் நிலவரம்பட்டி குடும்பம்
”நகரத்தில் குடிசை இருக்கக்கூடாது, குடிசைவாசிகள் குற்றவாளிகள் என தவறான எண்ணம் பொதுபுத்தியில் உள்ளது. குடிசை மக்களை வேரோடு பிடுங்கி, நகரத்துக்கு வெளியே வீசயபிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு தெரியப்படுத்தும் திரைப்படமாக ஜெயில் உருவாகியுள்ளது பாராட்டுக்குரியது. கண்ணகி நகர் மக்களின் கதையை உலகத்திற்குச் சொல்லும் தமிழ் படம் வெளியாவது அந்த மக்களுக்கு கிடைக்கும் ஆறுதல். இதுபோன்ற படங்களின் வருகையால், மக்களை இடம்மாற்றுவதில் அரசாங்கத்தில் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படவேண்டும்,”என்று பிபிசிதமிழிடம் தெரிவித்தார் தேவநேயன்.
கண்ணகி நகரின் பின்னணி
2000மாவது ஆண்டில் சென்னை நகரத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்துவந்த குடிசைவாசிகள் பலரையும் அப்புறப்படுத்தி கண்ணகி நகர் பகுதியில் அவர்களை அரசாங்கம் குடியமர்த்தியது. காஞ்சிபுரம் மாவட்டம் ஒக்கியம் துரைப்பாக்கம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியாக உள்ள கண்ணகி நகரில் ஆரம்பத்தில் வெறும் 3,000 குடியிருப்புகள் இருந்தன. தற்போது 15,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியாக உள்ளது கண்ணகி நகர்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட நபர்கள், சென்னையின் மையங்களில் வாழந்தவர்கள், கூவம் நதிக்கரையில் வாழந்தவர்கள் என பலவிதமான குடியிருப்பு பகுதிகளில் வசித்த மக்கள் நகரத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் குடியமர்த்தப்பட்டதால், அவர்களில் பலர் வேலைவாய்ப்புகளை இழந்தது,வறுமை நிலைக்கு தள்ளப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. முறையான பள்ளிக்கூடங்கள் அமைக்கப்படாமல் கண்ணகி நகரில் குடியமர்த்தியதால், பல குழந்தைகள் பள்ளிப்படிப்பை தொடரமுடியாமல் அவதிப்பட்டதாகவும், இளவயது திருமணங்கள் அதிகரித்ததாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால், தமிழக அரசின் குடிசைமாற்று வாரியம், குடிசைகள் அல்லாத குடியிருப்புகளை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதால், குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கு நகரத்திற்கு வெளியில் புதிய குடியிருப்புகளை அடிப்படை வசதிகளுடன் அமைத்துதருவதாக கூறுகிறது. மறுகுடியமர்வு செய்யப்பட்ட இடங்களில் பள்ளிக்கூடங்கள்,மருத்துவமனை மற்றும் காவல் நிலையங்கள் கட்டித்தரப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.
நகரத்தின் மையங்களில் வசித்தவர்களை, அங்குள்ள காலி இடங்களில் குடியிருப்புகள் அமைத்து தங்கவைக்காமல், நகரத்தில் இருந்து அரசு அப்புறப்படுத்துவது நவீன தீண்டாமையாக கருத்தப்படவேண்டும் என மறுகுடியமர்வு நடந்த இடங்களில் ஆய்வு செய்த்தவர்கள் கூறுகின்றனர். -BBC_Tamil