சென்னை: படங்களை ரிலீஸ் செய்வதில் நிறைய பிரச்சனை இருக்கு என்று விஜய் சேதுபதி மீண்டும் தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் 96 பட ரிலீஸ் பிரச்சனையின்போதும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படம் வரும் 20ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படம் ரிலீஸாவதில் பிரச்சனை இருப்பதாக பேச்சு கிளம்பியது.
சீதக்காதி
சீதக்காதி வரும் 20ம் தேதி ரிலீஸாகிறது. இது எனக்கு ரொம்ப பெருமைக்குரிய படம். நிச்சயமாக நல்ல ஒரு கமர்ஷியல் படமாக இருக்கும். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை பார்த்தபோது எப்படி நம்மை மறந்து சிரித்தோமோ அந்த மாதிரியான உணர்வை சீதக்காதி அளிக்கும். சீக்கரமே மீடியாவுக்கான ஷோ வைப்போம். பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
தயாரிப்பாளர்
சீதக்காதி படம் ரிலீஸாவதில் பிரச்சனை உள்ளது. தயாரிப்பாளர் சங்கம் தடுப்பதாக பேசிக் கொள்கிறார்களே என்று கேட்டதற்கு, எனக்கு தெரியவில்லை, அப்படி இருந்தது என்றால் தயாரிப்பாளர் தான் அதை சந்திக்க வேண்டும். படங்கள் வெளியாவதில் பிரச்சனை ஏற்படுவது பற்றி ஒருவர் மீது மட்டும் குறை சொல்ல முடியாது. இங்கு பெரிய பிரச்சனை இருக்கிறது. வியாபாரம் பண்ணும் இடத்தில், வியாபார கணக்கில் என்று பல பிரச்சனைகள் உள்ளது.
ஆண் தேவதை
எனக்கு மிகவும் வேதனை அளித்தது வந்து ஆண் தேவதை படத்தின் இயக்குனர் பேசியது தான். அதற்கு இன்று வரை தீர்வு இல்லை. அதற்கு யாருமே தீர்வு சொல்ல முடியாது. படத்தை ரிலீஸ் செய்ய விஜய் சேதுபதி காசு கொடுத்தார் என்று நீங்கள் பெருமையாக பேசலாம். ஆனால் அது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன?. எனக்கு முடிகிறது கொடுக்கிறேன். ஆனால் தீர்வு தான் என்ன?. என்னை போன்று பலர் கொடுத்திருக்கிறார்கள். அவர் தீர்த்துவிடுவார், இவர் தீர்த்துவிடுவார் என்று நினைக்கலாம். ஆனால் ஒருவரால் முடியாது.
ஒருவர்
இந்த பிரச்சனை எனக்கு மட்டும் நடக்கவில்லை. நிறைய பிரச்சனை இருக்கு, இல்லை என்று சொல்லவில்லை. அதை ஒருவரால் தீர்க்க முடியாது. பிரச்சனையை வெளியே சொல்வது என் வேலை இல்லை. சீதக்காதி படத்திற்கு பிரச்சனை இல்லை. அரசியல் பற்றி நான் கருத்து தெரிவித்து ஒரு பயனும் இல்லை என்றார் விஜய் சேதுபதி.