பயம் கலந்த சந்தோஷத்தில் இருக்கும் விஜய் சேதுபதி: காரணம்…

சென்னை: பயம் கலந்த சந்தோஷத்தில் இருப்பதாக சீதக்காதி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படம் வரும் 20ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படம் வெளியாவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று சென்னையில் சீதக்காதி படக்குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அந்த சந்திப்பின் போது விஜய் சேதுபதி கூறியதாவது,

சீதக்காதி

இது என் 25வது படம். எந்த விதமான கனவோ, கற்பனையோ இல்லாமல் தான் இருந்தது எனக்கு. 15, 19வது படங்களில் நடித்தபோது 25வது படம் எது மாதிரியான படமாக இருக்கப் போகிறது என்கிற கனவும், கற்பனையும் இல்லாமல் தான் இருந்தேன். திடீர் என்று ஒரு நாள் அதுவாக நடந்தது தான் சீதக்காதி படம் குறித்த பேச்சு.

கதை

சீதக்காதி ஒரு புது முயற்சி. புதுசா கதை சொல்லியிருக்கிறார்கள். கதை சொல்வது பற்றிய படமாகக் கூட இதை எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு படமும் தயாரிப்பாளரின் நம்பிக்கையில் தான் துவங்குகிறது. தயாரிப்பாளர் நம்பி வரும்போது தான் இயக்குனருக்கு நம்பிக்கை வருகிறது. என் 25வது படமாக இது அமைந்ததில் சந்தோஷப்படுகிறேன், பெருமைப்படுகிறேன் என்று எந்த வார்த்தைக்குள்ளும் அந்த உணர்வை அடக்க முடியவில்லை. என்னிடம் வார்த்தை இல்லை.

பயம்

அனைவருக்கும் நன்றி. என்னை பார்த்து, ஏற்றுக் கொண்ட மக்கள், மீடியா, நண்பர்கள், கலையை ரசிக்கும் அனைவருக்கும் நன்றி. யுனிவர்ஸ் கொடுக்கிறது, கவனிக்கிறது. அது பெரிய பொறுப்பு ஆகும். யுனிவர்ஸ் நம்மை கவனிக்கிறது, பொறுப்பையும் வைக்கிறது என்று நினைக்கிறேன். இரண்டும் சேர்ந்து ஒரு பயம் கலந்த சந்தோஷத்தில் இருக்கிறேன்.

மாரி 2

என்னுடன் சேர்ந்து ரிலீஸாகும் மாரி 2, கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம், அடங்கமறு ஆகிய படங்களுக்கு வாழ்த்துக்கள். எல்லா படமும் நல்லா ஓடட்டும். உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையில் தான் அனைத்து படங்களும் எடுக்கப்படுகிறது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக யோசித்துள்ளார்கள். சில சமயம் இப்படி அமைந்துவிடும். ஆனால் மக்கள் மீது நம்பிக்கை உள்ளது என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

tamil.filmibeat.com