சென்னை: பழசை எல்லாம் கிளறிவிட்டு சுகமான வலி தந்தவர் ஜானு.
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வந்த ஜெசி கதாபாத்திரம் தான் த்ரிஷாவுக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது.
அந்த ஜெசியை கிட்டத்தட்ட மறக்கடிக்க வைத்துள்ள கதாபாத்திரம் ஜானு. தற்போது எல்லாம் ஜானு தான் பல ஆண்களுக்கு பிடித்த பெயராகியுள்ளது.
த்ரிஷா 96
படம் ரிலீஸாகி இன்றுடன் 75 நாட்களாகிவிட்டது. ஜானுவையும், ராமையும் ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடுவதற்கு நன்றி தெரிவித்துள்ளார் த்ரிஷா. படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தபோதிலும் அதை அவசரம் அவசரமாக டிவியில் போடாமல் இருந்திருக்கலாம் என்ற வருத்தம் படக்குழுவுக்கு மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் உள்ளது.
முன்னாள் காதலி
விண்ணைத் தாண்டி வருவாயா படம் பார்த்தபோது ஜெசி போன்று ஒரு காதலி கிடைக்க மாட்டாளா என்ற ஏக்கம் மட்டுமே ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் 96 படம் பார்த்த பலருக்கும் தங்களின் பள்ளி பருவத்து காதலி கண் முன்பு வந்து சுகமான வலி கொடுத்துள்ளார். அப்படி பழைய நினைவு வந்து பள்ளி காலத்து காதலியின் செல்போன் எண், ஃபேஸ்புக் கணக்கை தேடி அலைந்தவர்கள் பலர்.
விஜய் சேதுபதி
96 படத்தில் அப்படி என்ன சிறப்பு என்றால் மெச்சூரான காதல். பல ஆண்டுகள் கழித்து சந்தித்துக் கொண்ட ஜானுவும், ராமும் ஒரே வீட்டில் தனியாக இருக்க நேர்ந்தபோது அவர்கள் நினைத்திருந்தால் எது வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் எல்லை மீறாமல் அளவோடு நடந்து கொண்டது தான் ரசிகர்களை ஈர்த்துவிட்டது.
மனம்
உண்மை காதல் என்பது உடல் சம்பந்தப்பட்டது அல்ல மனம் சம்பந்தப்பட்டது. தொட்டுப் பேசி, கட்டித் தழுவினால் தான் காதல் என்று இல்லை. எட்டி நின்று பார்த்து பார்த்து காதலை வளர்க்கலாம். அந்த காதல் கை கூடாவிட்டாலும் மனதின் ஒரு ஓரத்தில் என்றுமே இருக்கும் என்பதை இயக்குனர் பிரேம் குமார் தனது 96 படம் மூலம் நிரூபித்த விதம் தான் அழகு.
மனைவி
96 படத்தை மனைவிக்கு தெரியாமல் தியேட்டரில் பார்த்துவிட்டு ஏக்க மூச்சுவிட்ட ஆண்கள் பலர். ஜானுவை பார்த்துவிட்டு துப்பட்டா போட ஆரம்பித்த பெண்கள் பலர். ஜானுவுக்கு பெரிய காஷ்டியூம் எல்லாம் இல்லை. உடைக்கு பெரிதாக செலவு செய்யாமல் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் ஜானு நம் மனதில் நிலையான இடத்தை பிடித்துவிட்டார். படம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் அதை பார்த்தவர்கள் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்று தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தது தான்.