இப்ப வர்ற பாட்டெல்லாம் கேட்காதீங்க.. இளையராஜா தடாலடி

சேலம்: இப்போ வர்ற சினிமா பாட்டை கேட்காதீங்க.. பாரம்பரிய இசையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் திரையிசை பாடல்களை கேட்பதை நிறுத்த வேண்டும்” என்று பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

முன்பெல்லாம் இளையராஜா பொது விழாக்களில் கலந்து கொள்வது அரிது. எப்போதாவது மேடை கச்சேரிகள் செய்வார். அதற்கே ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்து வரும். ஆனால் சமீப காலமாகவே பல்வேறு நிகழ்ச்சிகளில் குறிப்பாக கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

சுவாரஸ்ய தகவல்கள்

இன்றும்கூட சேலத்தில் ஒரு தனியார் கல்லூரி விழாவில் இளையராஜா பங்கேற்றார். அப்போது மாணவர்களிடையே அவர் பேசினார். தான் எப்படி முதன்முதலாக இசையமைக்க வந்தது என்பது குறித்து சுவாரஸ்யமாக விளக்கினார். பின்னர் பாடல்கள் நிறைய பாடினார், மாணவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

புத்தம் புது பூ

அப்போது இளையராஜா மேலும் சொன்னதாவது: “பறவை பறப்பது போலவும், அருவி கொட்டுவதை போலவும் இசை என்பது இயற்கையோடு இணைந்த ஒரு விஷயம். அது இயல்பாகவே நடக்க வேண்டும். அதனை உருவாக்கவெல்லாம் முடியாது. ஒரு பாடலை எத்தனை முறை கேட்டாலும், அன்னைக்குதான் முதல் முதலா கேட்ட மாதிரி புத்தம் புது பூப்போல இருக்க வேண்டும். அப்பதான்அது நல்ல பாடலாக இருக்கும்.

முதல் சம்பளம் ரூ.7

ஆற்றில் தண்ணி போலதான் புதிய நீரோட்டமாக இருக்க வேண்டும். நான் ஆயிரத்துக்கும் மேல படங்களுக்கு இசையமைத்துள்ளேன். அதற்கு கணக்கே இல்லை. பெரியகுளத்தில் இருந்து வைகை அணைக்கு சென்றேன். அதுதான் என் முதல் பஸ் பயணம். அங்க போய் நான் வாங்கிய முதல் சம்பளம் 7 ரூபாய். அந்த பணத்தில் கிடைத்த மகிழ்ச்சி இவ்6வளவு காலம் சம்பாதித்த பணத்தில் எனக்கு கிடைக்கவில்லை.

பாடும் நிலாவே…

பெரும்பாலும் நான் இசையமைக்க ரொம்ப நேரம் எடுத்து கொண்டதே இல்லை. “பாடும் நிலாவே… தேன் கவிதை” என்ற பாடலுக்கு மட்டும் கொஞ்ச நேரம் எடுத்து கொண்டேன். இப்போதுள்ள இசையமைப்பாளர்கள் காப்பி அடிக்ககூடாது. சொந்தமான சிந்தனை இருக்க வேண்டும்.

மூளை குழம்பிடும்

பாரம்பரிய இசையை மீட்டெடுக்க வேண்டுமானால், சினிமா பாடல்களை கேட்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால், இப்போது வரும் பாடல்களின் இசை எல்லாமே எலக்டரானிக் கொண்டு உருவாகிறது. அதை கேட்கும்போது, உங்களின் மூளை செயல்படாமல் போய்விடும்.

tamil.oneindia.com