தமிழ் சினிமாவில் தொலைந்த ரூ.325 கோடி

சென்னை: தமிழ் சினிமாவில் திரைப்பட தயாரிப்பை மூன்று வகையாக குறிப்பிட்டு வருகின்றனர். சிறு முதலீட்டு படங்கள், அதாவது லோ பட்ஜெட், நடுத்தர பட்ஜெட் படங்கள், அதாவது மீடியம் பட்ஜெட், அடுத்து அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் ஹை பட்ஜெட் படங்கள்.

தயாரிப்பு செலவில் மாற்றம்:

சில ஆண்டுகளாக இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. காரணம் தற்போதைய படத்தயாரிப்பில் பல்வேறு நிலைகள் ஏற்பட்டிருக்கின்றன. மூன்று கோடிக்கும் குறைவான முதலீட்டில் எடுக்கப்படும் படங்களை மட்டுமே சிறு முதலீட்டு படங்கள் என்று குறிப்பிட வேண்டும்.

3 கோடியிலிருந்து ஐந்து கோடி செலவில் எடுக்கப்படும் படங்கள், 5 கோடியில் இருந்து 8 கோடி வரை உருவாகும் படங்கள், 8 கோடியில் இருந்து 15 கோடி வரை தயாரிக்கப்படும் படங்கள், 15 கோடியில் இருந்து 20 கோடி, 20 கோடியில் இருந்து 50 கோடி, 50 கோடிக்கும் மேற்பட்ட செலவில் தயாரிக்கப்படுவது என பட்ஜெட் அடிப்படையில் தமிழ் சினிமாவை பிரிக்கலாம்.

ரூ.50 கோடியில் 7:

2018ல் வெளியான திரைப்படங்களை பார்வையிடும்போது, ரஜினி நடித்த 2.0, காலா, விஜய் நடித்த சர்கார், சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம், மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி நடித்த செக்கச் சிவந்த வானம், கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் 2, சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா ஆகிய 7 படங்கள்தான் கடந்த ஆண்டில் 50 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டவை.

இவற்றில், ஷங்கர் இயக்கத்தில் 2.0, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார், மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் ஆகியவை மட்டுமே வணிகரீதியில் வெற்றி பெற்றன.

ரூ.50 கோடிக்குள் 9:

20 கோடியில் இருந்து 50 கோடி வரை செலவு செய்யப்பட்ட 9 படங்கள் 2018ல் வெளியாகின. அவை, விக்ரம் நடித்த சாமி 2, தனுஷ் நடித்த வடசென்னை, மாரி-2, விஷால் நடித்த இரும்புத்திரை, சண்டக்கோழி 2, விக்ரம் நடித்த ஸ்கெட்ச், ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக், கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம், விஜய் சேதுபதி நடித்த ஜுங்கா ஆகியவை.

இந்த படங்களில், வடசென்னை, டிக் டிக் டிக், கடைக்குட்டி சிங்கம், இரும்புத்திரை ஆகியவை மட்டுமே வெற்றி பெற்றன.

ரூ.20 கோடிக்குள் 4:

15 கோடியில் இருந்து 20 கோடி வரை செலவு செய்யப்பட்ட படங்கள் 4. நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள், விஜய் சேதுபதி நடித்த 96, விஜய் தேவரகொண்டா நடித்த நோட்டா, ஜெயம் ரவி நடித்த அடங்கமறு. இதில், இமைக்கா நொடிகள், 96, அடங்கமறு ஆகியவை வெற்றி பெற்றுள்ளன.

ரூ.15 கோடிக்குள் 10:

8 கோடியிலிருந்து 15 கோடிகள் செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட படங்கள் 10. நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன், விஜய்சேதுபதி நடித்த சீதக்காதி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், அரவிந்த்சாமி நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஜெய் நடித்த கலகலப்பு 2, பிரபுதேவா நடித்த லட்சுமி, குலேபகாவலி, அனுஷ்கா நடித்த பாகமதி, சசிகுமார் நடித்த அசுரவதம்.

இவற்றில் கோலமாவு கோகிலா, ராட்சசன், கலகலப்பு 2, பாகமதி மட்டுமே வணிக வெற்றியை பெற்றன.

ரூ.8 கோடிக்குள் 23:

5 கோடியில் இருந்து 8 கோடி செலவில் எடுக்கப்பட்ட படங்கள் 23. இவற்றில் தமிழ்ப்படம்-2 லாபத்தைக் கொடுத்தது. நாச்சியார், காற்றின்மொழி, நடிகையர் திலகம், திமிரு புடிச்சவன், துப்பாக்கிமுனை ஓரளவு வெற்றியைப் பெற்றன.

ரூ.5 கோடிக்குள் 32:

3 கோடியில் இருந்து 5 கோடி வரை செலவு செய்யப்பட்ட படங்கள் 32. இவற்றில் இருட்டு அறையில் முரட்டு குத்து, பியார் பிரேமா காதல், பரியேறும் பெருமாள் ஆகியவை வெற்றி பெற்றன.

ரூ.3 கோடிக்குள் 91:

3 கோடிக்குள் எடுக்கப்பட்ட படங்கள் 91. இவற்றில் மேற்கு தொடர்ச்சி மலை மட்டுமே வெற்றி பெற்றது.

2018 ஆம் ஆண்டு 181 படங்கள் வெளியாகின. இவற்றில் 26 படங்கள் மட்டுமே வெற்றியை பெற்றன. அதாவது 15 சதவீத படங்கள் மட்டுமே வெற்றி அடைந்திருக்கின்றன.

325 கோடி அவுட்:

2018ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் முதலீடு செய்யப்பட்ட தொகை சுமார் ரூ.1600 கோடி. திரையரங்கில் இருந்து கிடைத்த வசூல் சுமார் ரூ.1275 கோடி. (தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த ஷேர் ரூ.600 கோடி தான்.) ஆக ரூ.1600 கோடி முதலீடு செய்யப்பட்ட தமிழ் திரைப்படத் துறையில் வசூலானது ரூ.1275 கோடி மட்டுமே. சுமார் ரூ.325 கோடியை இழந்து நிற்கிறது தமிழ் திரைப்படத்துறை. இந்த ரூ.325 கோடியில் சுமார் ரூ.275 கோடி ரூபாய், ரூ.3 கோடிக்கு கீழ் முதலீடு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட லோ பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள் இழந்தது என்பது தான் பரிதாபகரமான உண்மை. ஒரு படத்துக்கு சராசரியாக ரூ.3 கோடி என கணக்கில் எடுத்துக்கொண்டால் 90 படங்களினால் இந்த நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

யாருக்கும் பயனில்லாத இதுபோன்ற படங்களை எடுப்பதால் என்ன பிரயோஜனம்? ஆர்வக்கோளாறில் படம் எடுக்க வருபவர்கள் யோசிக்க வேண்டும்.

-dinamalar.com