தமிழ் சினிமாவின் 2018: அசரடித்த டீசர்கள், கதையம்சம் மிக்க படங்கள், #MeToo சர்ச்சைகள்

திரைத்துறையில் நடந்த வேலை நிறுத்தம், ரஜினிகாந்த் நடித்த இரண்டு திரைப்படங்கள் வெளியானது, நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களின் வெற்றி என 2018ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு ஒரு மறக்க முடியாத ஆண்டு.

2018ஆம் ஆண்டின் துவக்கமே மிக பரபரப்பானதாகத்தான் இருந்தது. தமிழின் முன்னணி நடிகர்களாக நீண்டகாலம் கோலோச்சிய ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் வெளிப்படையாகவே அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தனர்.

தமிழ் சினிமாவின் 2018

பொதுவாக அரசியல் விவகாரங்களைப் பேசுவதைத் தவிர்த்துவந்த ரஜினிகாந்த் இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து வெளிப்படையாக பல கருத்துகளைத் தெரிவிக்க ஆரம்பித்தார். இதனால், அவருக்குக் கிடைத்த வரவேற்பைவிட உருவான சர்ச்சைகளே அதிகமாக இருந்தது.

ஒரு செய்தியாளர் சந்திப்பில் ‘சிஸ்டம்’ சரியில்லை என்று அவர் சொல்லிவிட்டுப்போக, அப்படியானால் இந்தியாவில் ‘சிஸ்டம்’ சரியாக இருக்கிறதா என்ற பதில் கேள்வியை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அரசியலுக்கு வரப்போகிறேன் என வெளிப்படையாகவே அவர் சொல்லிவிட்டாலும் தற்போதுவரை அரசியல் கட்சி எப்போது துவங்கப்படும் என்பது குறித்து அவர் ஏதும் பேசவில்லை. ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பு உருவானதோடு, ரஜினியின் அரசியல் பயணம் தொக்கி நிற்கிறது.

இதற்கு நடுவில், “எதற்கெடுத்தாலும் போராடிக்கொண்டிருந்தால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்”, “கொள்கை என்னானு கேட்டவுடனே தலை சுத்தீருச்சு” என்பதுபோன்ற அவரது கருத்துகள் பலத்த அதிர்வலைகளை உருவாக்கின.

ஆனால், இதற்கு நடுவில் ரஜினிகாந்த் நடித்து இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாயின. ஒன்று, பா. ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்திருந்த காலா. இரண்டாவது ஷங்கரின் இயக்கத்தில் பல வருடங்களாக தயாரிப்பில் இருந்த 2.0.

இதற்கு முன்பாக 2014ஆம் ஆண்டிலும் கோச்சடையான், லிங்கா என இரு படங்கள் ஒரே ஆண்டில் ரஜினிக்கு வெளியாகியிருந்தாலும், கோச்சடையான் ஒரு அனிமேஷன் திரைப்படமாகவே வெளியானது. அப்படிப்பார்த்தால், 1995ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரே ஆண்டில் ரஜினி நடித்து ஒன்றுக்கும் மேற்பட்ட திரைப்படம் தமிழில் வெளியானது இந்த ஆண்டில்தான். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் பேட்ட படமும் ரிலீஸிற்குத் தயாராக நிற்பதில், ரஜினி ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்.

காலா

மற்றொரு முக்கிய நட்சத்திரமான கமல்ஹாசன், கடந்த ஆண்டில் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரியில் மக்கள் நீதி மையம் என்ற பெயரில் கட்சியையும் துவக்கிவிட்டார். 2015ல் அவர் நடித்து வெளிவந்த தூங்கா வனம் படத்திற்குப் பிறகு இந்த ஆண்டுதான் அவரது அடுத்த படமான விஸ்வரூபம் – 2 வெளியானது.

இதையெல்லாம்விட தமிழ் சினிமாவை இந்த ஆண்டு கடுமையாக பாதித்த விஷயம், மார்ச் மாதத்தில் நடைபெற்ற போராட்டம்தான். திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை வெளியிட, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிறைய கட்டணம் வசூலிப்பதாகக் கூறி திரையுலகினர் போராட்டத்தில் இறங்கினர்.

இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை.

இந்தப் போராட்டம் நடந்துகொண்டிருந்த நிலையிலேயே கேளிக்கை வரியை ரத்து செய்யும் கோரிக்கை உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திரையரங்கங்களும் போராட்டத்தில் இறங்கின. பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தப் போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.

ஆனால், ஒரு மாதத்திற்கும் மேலாக திரைப்படங்கள் ஏதும் வெளியாகாததால், வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் படங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது. இதற்குப் பிறகு, திரைப்படங்களை வெளியிடும் தேதியை தயாரிப்பாளர் சங்கமே அறிவிக்கும் என்ற நடைமுறை அமலுக்கு வந்தது. மாதத்தில் ஒரு வாரம் சிறிய படங்களுக்கு என ஒதுக்கப்பட்டது. இந்த நடைமுறையிலும் பல சிக்கல்கள் தற்போதும் நீடிக்கின்றன.

தமிழ் திரைத்துறையை கலங்கவைத்த #Me too

உலக அளவில் பிரபலமான மீ டூ 2018ஆம் ஆண்டில் இந்தியாவில் குறிப்பாக தமிழ் திரைத்துறையில் பரவலாக பேசப்பட்டது.

தமிழ் திரைப்படத்துறையை சார்ந்தவர்கள் சிலரின் மீது வெளிப்படையாக மீ டூ மூலம் குற்றம் சாட்டப்பட்டன. அதில் பாடகி சின்மயி பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து மீது #Me too புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சின்மயி

பின்னணிப் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவும் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக பதிவிட்டார்.

இந்த குற்றச்சாட்டை கவிஞர் வைரமுத்து மறுத்து விளக்கமளித்தார்.

மேலும், ‘மீ டூ’ இயக்கம் மூலம், கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இதற்கு அர்ஜுன் மறுப்பு தெரிவித்த நிலையில், ஸ்ருதி தன்னிடம் பணம் பறிக்க முயல்வதாக குற்றம்சாட்டினார்.

தமிழ் சினிமா பறிகொடுத்த தேவதை

பிப்ரவரி மாதத்தில் தமிழ் திரையுலகத்துக்கு பெரும் அதிர்ச்சியாக, தமிழ் திரையுலகில் கோலோச்சிய பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார்.

தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஸ்ரீதேவி
தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஸ்ரீதேவி

துபாயில் தனது குடும்ப உறவினர் இல்லத் திருமண விழாவுக்கு சென்றிருந்தபோது அவர் இறந்ததாக அவரது குடும்பத்தினர் கூறினர்.

நடிகை ஸ்ரீதேவி தான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்த குளியல் தொட்டியில் தவறுதலாக மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று கூறப்பட்டது.

அவரது திடீர் மரணம் தொடர்பாக பல சர்ச்சைகள் மற்றும் சந்தேகங்கள் எழுந்த நிலையில், இறுதியில் பிப்ரவரி 28-ஆம் தேதியன்று பல கோடி ரசிகர்களின் கனவு தேவதையான ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் எரியூட்டப்பட்டது.

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிப்பட்ட குறிப்பிடத்தக்க போக்காக, நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளிவந்த படங்களுக்குக் கிடைத்த வெற்றியையும் கவனிப்பையும் நிச்சயம் குறிப்பிட வேண்டும். நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய இரு திரைப்படங்களுமே அந்தப் படங்களில் நயன்தாராவின் பாத்திரங்களுக்காகவும் நடிப்பிற்காகவுமே முக்கியமாகப் பேசப்பட்டன. ஜோதிகா நாயகியாக நடித்த காற்றின் மொழி, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்த கனா ஆகிய திரைப்படங்களும் விமர்சகர்களால் கவனிக்கப்பட்டதோடு, குறிப்பிடத்தக்க வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றன.

தமிழ் சினிமாவின் 2018

இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான படங்கள் ஏதும் வர்த்தக ரீதியில் பெரும் வசூலை வாரித்தந்ததாகச் சொல்ல முடியாது. ஆனால், வருட இறுதியில் வெளியான 2.0, சர்கார் ஆகிய படங்கள் வசூலில் புதிய சாதனைகளைப் படைத்திருக்கின்றன. அதேபோல, 96, ராட்சசன், பரியேறும் பெருமாள் போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வர்த்தக ரீதியாகவும் வெற்றிபெற்றிருப்பது ரசிகர்களுக்கும் புதிதாக வரும் இயக்குநர்களுக்கும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் நிச்சயம் கொடுத்திருக்கும்.

ஏற்கனவே வெற்றிபெற்ற படங்களின் அடுத்த பாகங்கள் இந்த ஆண்டில்தான் பெரும் எண்ணிக்கையில் வெளிவந்தன. கலகலப்பு – 2, கோலி சோடா – 2, விஸ்வரூபம் – 2, தமிழ் படம் – 2, சண்டக்கோழி – 2, மாரி – 2, 2.0, சாமி – 2 என எட்டு திரைப்படங்களின் அடுத்த பாகங்கள் இந்த ஆண்டில் வெளியாயின. இவற்றில் 2.0, தமிழ்படம் – 2, கலகலப்பு -2 ஆகியவற்றைத் தவிர பிற படங்களை வர்த்தக ரீதியாக வெற்றிபெறவில்லை.

விஸ்வரூபம் - 2

இந்த ஆண்டில் உருவான ஒரு முக்கியமான போக்காக, அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஆன்லைன் ஸ்டீரிமிங் சேவைகள் மிக முக்கியமான பொழுதுபோக்கு தளங்களாக உருவாகியிருப்பதைச் சொல்லலாம். தமிழ் சினிமாவுக்குக் கூடுதல் வருவாயை இந்த தளங்கள் தரும் அதே நேரம், ரசிகர்களுக்கும் புதிய ஜன்னல்களைத் திறந்திருக்கின்றன.

உலகின் மிகச் சிறந்த சினிமாக்களை பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு தற்போது எளிதில் கிடைத்துவிடுவதால், தமிழ் சினிமாவின் தரத்தை மேம்படுத்துவதிலும் இந்த தளங்கள் உதவக்கூடும். தமிழிலேயே நேரடியாக வெப்சீரிஸ்களை இயக்கும் வாய்ப்பும் இயக்குனர்களுக்குக் கிடைக்கும்.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அதிக படங்களில் நடித்த கதாநாயகன், விஜய் சேதுபதிதான். கௌரவத் தோற்றத்தில் அவர் நடித்த டிராஃபிக் ராமசாமி படத்தை விட்டுவிட்டால், 6 படங்களில் அவர் நடித்திருக்கிறார். கதாநாயகிகளைப் பொறுத்தவரை கீர்த்தி சுரேஷ்தான் முதலிடம். 6 படங்களில் நடித்திருக்கிறார். அதற்கு அடுத்த இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷும் வரலட்சுமியும் தலா ஐந்து படங்களில் நடித்திருக்கின்றனர். சமந்தாவுக்கு நான்கு படங்கள்.

கீர்த்தி சுரேஷ்

2018ஆம் ஆண்டு முடிந்துவிட்டது. சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரை,பேட்ட வெளியாகும் தினத்தன்று 2019ஆம் ஆண்டு துவங்கவிருக்கிறது. -BBC_Tamil